ஏற்பு வெண்பாக்கள்


உலகில்...
தம்முடைய ஒவ்வொரு எண்ணத்தையும் 'உலகில்' என்னும் காவிய வழக்கின் மங்கலச் சொல்லோடு தொடங்கும் ஒரு அரிய தமிழ் நெஞ்சர் ஐயா Vanarasan Gomathi ஏற்பாட்டில் இன்று காலை ஒரு விருது பெற்றேன். 


என்னைப் பொறுத்தவரை, நம்மேல் அன்பு கொண்டவர்கள், நம் செயல்களில் அக்கறை இருப்பவர்கள் நம்மை அழைத்து நாம் இன்னும் சிறப்பாய் எப்படிச் செயல்பட வேண்டும் என்கிற அளவுகோலை நமக்கு விருதென்ற பெயரில் வழங்குகிறார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நோக்கத்தில்தான் நான் இந்த விருதையும் பெற்றேன்!
 
#பிறப்புரிமை_பண்பரசனார்_நினைவு_விருது அதனுடன் சேர்த்து "#மரபு_ஆளுநர்" என்றொரு பட்டம். 


இதோ அதற்கு அரங்கிலேயே எழுதி வாசிக்காமல் விட்ட ஏற்புரை வெண்பாக்கள்...

சின்னஞ் சிறுபிள்ளை சிந்தும் கவிதைகள்
இன்னும் எவையெல்லாம் ஈன்றிடுமோ - நன்றியெம்
சக்திக்குச் சாற்றும் தமிழுக்கு நேசமுடை
மக்கட்குச் சொல்லல் மரபு!

மரபுவழிப் பாவலர்! மாண்புமிகு சீலர்!
தரமாய்த் தமிழ்காத்த சான்றோர் - பெரியவர்
பண்பரச னார்பேரில் பாலனுக் கிங்களித்தார்
வெண்பா நினைவில் விருது!

விருதுக்கு நான்தகுதி வாய்ந்தவனாய் ஆக
வரும்போதி லெல்லாம் முயல்வேன் - கருதிக்
கவிசெய்வ தையறியாக் கன்றுக் கவிஞன்
தவமென்றன் தெய்வத் தமிழ்!

தமிழ்மட்டும் மூச்சாகத் தான்வாழு கின்றேன்
அமிழ்வன சூழ்ந்திடும் அல்லல் - கமழ்வன,
நான்சொல்லும் வார்த்தைகள் நாடி இவைதந்தாள்
வான்வென்ற நந்தமிழம் மை

மையோ டுறவாட மட்டுமறி வேனுக்கு
மையோ டுரிசேர்த்து மாத்தமிழர் - மையோ
டெளிசேர்த்து வாழும் எழில்வான் அரசர்
அளித்தார் அனைத்துமே அன்பு!

அன்பர்காள்! நான்பெற்ற அன்பின் மதிப்பினை
என்பாடு பட்டேனும் யானென்றன் - பண்பால்
செயலால் கவியால் செயும்தமிழால் காப்பேன்
நயமே விளைக நமக்கு!!

 -விவேக்பாரதி
14.07.2019

Comments

Popular Posts