தேவி கருமாரி பதிகம்



கண்ணெங்கும் நிறைகின்ற கனிவான பாதங்கள்
கவிதையில் பதியட்டுமே
காலங்கள் தோறும்புது கோலம் தரிக்கின்ற
காயங்கள் விலகட்டுமே
விண்ணெங்கும் உன்னன்பு விளைகின்ற வேளையில்
வீதிகள் நிறையட்டுமே
விளையாடி முகில்கூடி மழைபாடி இலையாடி
விந்தைகள் நிகழட்டுமே
எண்ணங்கள் மனமாகி எழுத்தாகி சொல்லாகி
எழுந்துன்னைப் பாடட்டுமே
ஏழைநான் இடும்தாள பாவங்கள் யாவுமுன்
எழில்காதில் சேரட்டுமே
வண்ணங்கள் வாழ்க்கைகள் சேர்த்துக் குழைக்கின்ற
வலுவான பொற்கைகளே
வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே
வாழ்க்கையே கருமாரியே!

பொன்மேவி பூமேவி மணியோசைப் புகழ்மேவி
பொலிவோடு நிற்குமுருவே
பொல்லாத அசுரர்கள் இல்லாமல் செய்கின்ற
பொற்சூலம் திகழுகரமே
என்னாவில் எப்போதும் இசையாக வருகின்ற
எழிலான தமிழின்வடிவே
எட்டியெட் டிச்சென்று தொட்டுதொட் டேயெனை
ஏளனம் செய்யும்நகையே
முன்னாளில் ஒருபுலவன் முத்தமிழ்ப் பாசொல்ல
முறுவல்கள் செய்தவிதழே
முயல்கின்ற நெஞ்சுக்குள் காற்றாகி முனைப்போடு
முந்திவிட வைக்கும்நினைவே
வன்னெஞ்சில் உன்சிரிய புன்னகை புரிந்தென்றன்
வழித்துணை யாகுமிறையே
வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே
வாழ்க்கையே கருமாரியே!

நதிமீது விழுகின்ற இலையாகி காலத்தில்
நான்போகும் பயணத்திலே
நல்லவரை நம்பியே செல்லுகிற என்னுடைய
நாள்பார்க்கும் பயணத்திலே
விதிமீறும் சிலநேரம் விளையாடும் அப்போது
விசையாகிக் காக்கவேண்டும்
வீணனின் நெஞ்சிலொரு வீணை யிசைத்தென்றன்
வினைகளை மாய்க்கவேண்டும்
சதியென்று தெய்வங்கள் போற்றிடும் சக்தியே
சங்கரன் பாதியுருவே
சண்முகனை ஓருருவில் உன்மகனை உன்னுருவில்
தந்ததாய் தெய்வவடிவே
வதம்செய்ய சூலத்தை வளம்செய்ய பாதத்தை
வழங்கிடும் கருணையழகே
வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே
வாழ்க்கையே கருமாரியே!

பள்ளத்தில் வீழாமல் மேடுகண் டாடாமல்
பணிவாக்கி வைத்திடம்மா
பாசாங்கு பகல்வேடம் இல்லாத நிலையொன்றில்
பாலனை வைத்திடம்மா
உள்ளத்தில் எப்போதும் உற்சாக ஊற்றினை
உயிரோடு வைத்திடம்மா
உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனும்பேதம் பாராமல்
உறவாட வைத்திடம்மா
எள்ளளவும் காமத்தில் வீழாத நெஞ்சினை
ஏழைக்கு வைத்திடம்மா
எழிலை நினைந்துன்றன் பொழிலோடு நனைந்தாடும்
ஏகாந்தம் வைத்திடம்மா
வள்ளலாய் இல்லாது போனாலும் பிறருக்கு
வழங்குநிலை வைத்திடம்மா
வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே
வாழ்க்கையே கருமாரியே!

கொஞ்சமா உன்னெழில் ஒருகோடி முறைகூறி
கொண்டாட்டம் செய்யுமுள்ளம்
கூடவே வாழ்ந்திடக் கோவிலே சேர்ந்திடக்
குதிபோடும் சின்னவுள்ளம்
பஞ்சமாய்ச் சிற்றிடை பாசமாய் யிருவிழி
பத்திக்குப் பதமிரண்டு,
பார்வைக்குத் தாய்!பழகும் பண்புக்குச் சேய்!பக்தி
பண்ணவே காக்கும்வெள்ளம்!
நஞ்சைமாக் கடலிலே உண்டவன் பாதியாய்
நாயகம் கொண்டவுமையே
நாவலர் பாவலர் பாட்டெலாம் கேட்டுமிந்
நாய்ப்பாட்டும் கேட்கும்செவியே
வஞ்சியே வடிவழகு கொஞ்சியே வாழ்கின்ற
வாழ்க்கையைச் சேர்க்கும்தயவே
வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே
வாழ்க்கையே கருமாரியே!


கருமாரி என்றதும் காணாத காட்சிகள்
கண்முன்னம் வரும் விந்தையும்,
கல்லாத மூடனொரு சொல்லாளன் ஆனகதை
கழுதைக்குப் புரிகின்றதும்,
உருமாறி அன்னையாய் உயர்கின்ற ஆதியை
உள்ளம் வியக்கின்றதும்,
உருவற்ற நானென்னும் கருவத்தின் பிடியென்னை
உண்ணாமல் வெளிசெல்வதும்,
எரிமாரி காமத்தில் எழுகின்ற கோபத்தில்
உன்னெண்ணம் படகாவதும், 
எவருக்கும் கிட்டாத சிவசக்தி பாதங்கள்
ஏணியாவதுவும் கண்டேன்
வரிமாறிப் போகாமல் உன் திட்டப் படியென்னை
வாழவைத்திடுக தாயே
வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே
வாழ்க்கையே கருமாரியே!

வருவதாய் எண்ணினால் வாழ்வுசரு காகுமுன்
வளம்சேர்க்க வந்திடம்மா
வானத்தைப் பார்த்தேங்கும் போதினில் தவறாமல்
வழிபார்த்து வந்திடம்மா
தருவதாய்ச் சொன்னவையும் தாராமல் விட்டவையும்
தரமாகத் தந்திடம்மா
தமிழ்கேட்டு நான்பாடும் இசைகேட்டு உன்னழகுத்
தலையாட்ட வந்திடம்மா
கருமைநிற மேனியைக் கன்றென்றன் கண்ணுக்குக்
கவிபாடக் காட்டிடம்மா
கடவுளர்க் கன்னையே ஆற்றலின் மூலமே
கானங்கள் தீட்டிடம்மா 
வரவேற்க வாசலில் வண்ணமாய்க் கோலங்கள்
வரைகிறேன் தேவியுமையே
வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே
வாழ்க்கையே கருமாரியே!

பூவுண்டு தேனில்லை நீவருக நம்முறவைப்
பூலோகம் பார்க்கட்டுமே
புத்தியினில் வலுவில்லை பூரணம் நீதருக
புலன்யாவும் தோற்கட்டுமே
நாவினில் தமிழ்சேரத் தெய்வத்தின் அருள்சேரும்
நானிலம் உணரட்டுமே
நல்லவர்கள் சொல்லில்வளர் நங்கையுன தன்புமுகம்
நாற்புறமும் தெரியட்டுமே
ஆவுக்குள் பால்வைத்துத் தயிர்வெண்ணெய் நெய்வைத்த
ஆச்சர்யம் விளங்கட்டுமே
ஆட்டங்கள் பாட்டங்கள் அம்மைநின் ஊட்டங்கள்
அடியார்க்குக் கிடைக்கட்டுமே
வாவந்து பாருன்னை வரவேற்க வானத்தை
வாசல் நிறுத்தி வைத்தோம்
வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே
வாழ்க்கையே கருமாரியே!

இனிப்பான வெல்லத்தை இளக்கியோர் பாகாக்கி
இடுகிறோம் பொங்கல் பூசை
இடைமஞ்சள் செடிகட்டி பானைக்கு நிறம்பூசி
இலங்கிடும் எங்கள் பூசை
மனிதமனக் கோவிலில் மகமாயி சந்நிதியில்
மலர்கின்ற கான பூசை
மகிழ்ச்சியைப் பூவாக்கி பாதங்கள் மறையவே
மக்களிடும் சின்ன பூசை
தினமுன்னைப் பார்த்தெங்கள் விழிமல்க நிற்கின்ற
திறனற்ற எளிய பூசை
திக்குகள் எட்டிலும் கொட்டடித் தாடிடும்
தீராத பக்தி பூசை
வனப்பான உன்னுருவைப் பார்த்தபடி வாழவே
வளர்க்கின்ற யாகம் அழகே!
வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே
வாழ்க்கையே கருமாரியே!

சன்னிதியில் உன்முன்னம் என்னை மறந்தமரச் 
சந்தோஷம் நெஞ்சத்திலே
சற்று நேரத்திலொரு திரைவந்து முன்வீழச்
சலனங்கள் நெஞ்சத்திலே
உன்னிதியம் என்மீதில் ஊற்றாய் நனைக்கையில் 
உற்சாகம் நெஞ்சத்திலே
ஒருநொடியில் எனைத்தூக்க உதறிநீ செல்கையில்
உயிர்த்துன்பம் நெஞ்சத்திலே
என்னுடைய மதமென்னைக் கவிழ்க்கின்ற வேளையில்
ஏமாற்றம் நெஞ்சத்திலே
ஏடி!நின் புன்னகையைப் பார்த்ததும் புதுவிதமாய்
ஏற்றங்கள் நெஞ்சத்திலே
வன்மதம் பூசல்கள் இல்லாத திருநாட்டை
வழங்குநீ கருணைகொண்டு
வாணுவம் பேட்டையில் வளருமெம் தெய்வமே
வாழ்க்கையே கருமாரியே!

-விவேக்பாரதி
28.08.2019

Comments

Post a Comment

Popular Posts