யார் எதைத் தரப் போகிறார்கள்?


"ஒரு ஜான் வயிறே இல்லாட்டா 
இந்த உலகத்தில் ஏதிங்க கலாட்டா!
உணவுப் பஞ்சமே வராட்டா!
நம்ம உயிர வாங்குமா பரோட்டா!"

இது என் பாட்டி அடிக்கடி பாடும் பாட்டு. சொல்லப்பொனால் அவர் பட்ட பாட்டைப் பாடும் பாட்டு. நம் அலைச்சலுக்கும், துன்பங்களுக்கும் காரணமாய் நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருவது வயிறு. "எல்லாம் வயித்துப் பொழப்புக்காக" என்னும் வாக்கியம் நம் எல்லா இயலாமைக்கும், அடக்குதலுக்கும் பயன்படுத்தும் சாக்கு. அப்படி உண்மையிலேயே இந்த வயிறு துன்பகரமானதா? சரியாய்க் கேட்டால், வயிறு மட்டும்தான் நம் துன்பங்களுக்குக் காரணமா? ஒருபக்கம் "மனம்" என்று சொல்லும் குரல் கேட்கிறது. நானும் நெடுங்காலம் அதை நம்பி வருகிறேன். ஆசை, களவு, காமம், கோபம் ஆகியவற்றுக்கு மனம் காரணம் என்றால் ஒப்புக் கொள்ளலாம். அவையற்ற மற்ற சில துன்பங்களுக்கு?
காலையில் ஒரு கடையில் 3 பூரிகளைச் சாப்பிட்டேன். தொட்டுக்கொள்ள பிரமாதமான கிழங்கு மசாலா. தேங்காய்ச் சட்டினியின் அலாதி சுவை. அலுவலக அவசரத்தில் சாப்பிட்டு, பில்லைக் கேட்டால் ₹37. சாப்பிட்டதைக் காட்டிலும் மனத்திருப்தி உண்டானது. முகம் மலர்ந்து ₹40 தந்தேன். நல்ல சுவையான உணவைக் குறைவான விலையில் சாப்பிட்டது மனத்தில் இன்பத்தை வரவைத்தது. நேற்று இரவும் இதேபோல் ஒரு உணவகத்தில். பீட்ஸா சாப்பிடச் சென்றிருந்தேன். அங்கு மனம் விரும்பிய பீட்ஸாவை ஆர்டர் செய்து, பில் கட்டிவிட்டு (சாப்பிட்டு முடித்தவுடன் இதுக்கு இவ்ளோ வொர்த் இல்லன்னு யோசிக்காம இருக்க சில இடங்களில் முன்னாலேயே காசு வாங்கி விடுகிறார்கள்) அமர்ந்திருந்தேன். பீட்ஸாவைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு, வந்ததும் அதனோடு எப்படியெல்லாம் சரசம் பழக வேண்டும் என்று ஒத்திகைகளை மனதுக்குள் ஓட்டிக் கொண்டிருந்தேன்.
நாம், அவசர அவசரமாக காலையில் எதையோ சாப்பிட்டுவிட்டு அலுவல்களைப் பார்க்கக் கிளம்பி விடுகிறோம். மதியமும், அலுவலகத்தில் அரட்டை, முதலாளி கடுப்பு, வேலை முடிக்க வேண்டிய பொறுப்பு என்று ஏதோ ஒரு சிந்தனையுடனே உணவு உண்கிறோம். இரவு வேளைதான் நமக்கான நேரம். அதனை உணவின் நினைப்போடு மட்டும், ரசித்து, ருசித்து, சமைத்தவரைக் கொஞ்சம் பாராட்டி (நீங்களாகவே இருந்தால் தோளில் தட்டிக் கொடுத்து) மெதுவாக சாப்பிட்டுப் பாருங்கள். சாப்பிடும்போது டீவி பார்ப்பது, வீட்டாரோடு பேசுவது, பத்திரிகை வாசிப்பது, செல்ஃபோனை நோண்டிக்கொண்டிருப்பது போன்றவை இல்லாமல் இருந்து பாருங்கள். (ரேங்க் கார்டு பஞ்சாயத்து, வரவு செலவு கணக்கு, உறவினர்கள் வருகை, ஹவுஸ் ஓனர் கெடுபிடி, அக்கம் பக்கத்து கிசுகிசு ஆகியவை நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டியவை) அந்த மனநிலையில் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவும், நேராக மனதுக்குச் செல்கிறது என்றால் அது வியப்பாகாது.
அப்படி ஒரு நிலையில், பீட்ஸாமேல் மோகித்தபடி காத்திருந்து சாப்பிட்டேன். இதனை நினைத்துப் பார்க்கையில் எனக்குவந்த ஆச்சர்யம், இந்த வயிறு, 37 ரூபாய் பூரிக்கும் நிரம்பிவிடுகிறது. 300 ரூபாய் பீட்ஸாவுக்கும் நிரம்பிவிடுகிறது. 37 ரூபாய் பூரியும் நமக்கு அவ்வளவு ஆரோக்கியமான உணவு கிடையாது. 300 ரூபாய் பீட்ஸாவும் ஆரோக்கியமானது கிடையாது. ஆனால், 300 ரூபாய் பீட்ஸாவை நம்மால் தினமும் வாங்கிச் சாப்பிட முடியாது. 37 ரூபாய் பூரியை நம்மால் தினமும் சாப்பிட முடிகிறது. அதானாலேயே 37 ரூபாய் பூரி நமக்கு நல்லதென்று படுகிறது. இந்த திக்குமுக்காடல்களுக்கு மத்தியில் எனக்குத் துன்பத்தைத் தருவது எது என்ற நினைப்பும் எழுகிறது. மனதா? வயிறா? பொதுவாக மனமா? மூளையா? என்று சிலர் சண்டைபிடிப்பது உண்டு. எனக்கு இன்றைக்கு மனமா? வயிறா? என்றே உறுத்திக்கொண்டிருக்கிறது.
மனதைக் குற்றம் சொல்ல நினைத்தேன். பசி என்னும் பிரளயத்தை உண்டாக்குவது வயிறுதான் என்று பதில் வந்தது. வயிற்றை விசாரிக்க மேடை ஏற்றினால், தான் 37 ரூபாய் பூரிக்குக் கூட நிரம்பி விடுவதாக வாக்குமூலம் தந்தது. ஆக, எது உண்மை? மனமா? வயிறா? எதனைக் கட்டுப்படுத்துவது? எதனால் எனக்குத் துன்பம் வருகிறது? எதனால் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்? எதை நோக்கி என் அலைச்சல் இருக்கிறது? பசியைக் கிளப்பும் வயிறு பிரதானமா? இதை இந்த நேரத்தில் சாப்பிடச்சொல்லித் தூண்டும் மனது பிரதானமா? மனம் இல்லாமல் வாழ முடியும். அது துறவு என்கிறார்கள். வயிறில்லாமல் வாழ முடியுமா? மனத்தைத் துறந்த பட்டிணத்தடிகள் கூட “ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” என்கையில் பிச்சை எடுத்து ‘உண்டவர்’ தானே. இந்தக் கேள்வி என்னை உடலா? மனமா? என்ற நிலைக்கு எடுத்துக்கொண்டு போவதை என்னால் உணர முடிகிறது. இந்தக் கேள்வி அருளாளர்களைப் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே எனக்கு அடிக்கடி தோன்றுவது. பட்டிணத்தடிகள், “ஓர்பிடி நீறும் இல்லாத உடம்பு” என்கிறார். திருமூலரோ,” உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்கிறார். ஒரு சாதாரண பூரி என்னை இவ்வளவு யோசிக்க வைக்கிறது என்றால் என் தேடல் எதற்கானது என்னும் கேள்வி என்னை விடாமல் உலுக்கிக்கொண்டே இருக்கிறது. அன்றாட வாழ்வில், இத்தனை ஓட்டத்தையும் நாம் நமக்குப் பிடித்துத்தான் ஓடுகிறோமா? ஏன் ஓடுகிறோம் என்று நடந்துபார்க்க முயற்சி செய்திருக்கிறோமா? அப்படி நடக்கும்போது இப்படித்தான் பூரண ஞான விஷயங்களைச் சின்ன பூரி கூட கிளப்பிவிடுமா?
இதைநான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்தப் பீட்ஸாவும் பூரியும் செறித்தேயிருக்கும். ஆனால் அவை உருவாக்கிய கேள்வி செறிக்கவில்லை. பதிலாக, அதுவே பசியாக வளர்ந்திருக்கிறது. உள்ளே இந்தப் பசி தகித்துக் கொண்டிருக்கையில் இதோ மணி பார்த்த மறுகணத்தில் மதிய வேளைக்கு வயிறு பசிக்கிறது. வீட்டிலிருந்து கொண்டுவந்த மோர்சாதம் இதன் மணியடித்தலை இப்போது நிறுத்தும். உள்ளே அடிக்கும் கேள்விப்பசி மணியை நிறுத்த யார் வருவார்? எதைத் தருவார்?

-விவேக்பாரதி
31.05.2019

Comments

Popular Posts