அன்புத் தங்கையே

 
அன்புத் தங்கையே தங்கையே
ஆசைத் தங்கையே!
அடி! தங்கமே வெல்லமே
பட்டுக் கன்னமே!

உன்னைக் கொஞ்சவே கெஞ்சியே
உள்ளம் துள்ளுதே
உயிர் தஞ்சமே சொல்லுதே
தங்கைச் செல்வமே!

நீ வாழ நான் பாடும்
பாட்டுக் கேட்டு உன்
சின்ன தலையாட்டு!
ஒரு செல்லப் புன்னகை
கொல்லும் முறைப்பெல்லாம்
உந்தன் விளையாட்டு! 

(அன்புத் தங்கையே தங்கையே)

பூ வண்ணப் பாவாடை
போட்டு நடக்கின்ற பூங்கா நீ
பொன்னூஞ்சல் சடை பின்னி
பொழுதும் விளையாடும் நிலவும் நீ

கதிர் மஞ்சள் முகத்தழகில்
கன்னக் குழி சிரிப்பழகில்
புதிரிடும் பொம்மை நீ
புரியாத பெண்மை நீ! 

(அன்புத் தங்கையே தங்கையே)

ஒரு தெய்வம் பெண்ணாகி
உருவில் நீயாக வந்தவளோ
ஒரு மின்னல் நகைசூடி
ஒளிந்து விளையாட வந்தவளோ

அன்னை ஒரு அன்னையென
அப்பன் ஒரு அப்பனென
பின்னுமொரு தோழியென
பிறந்தவள் நீ வாழ்க! 

(அன்புத் தங்கையே தங்கையே)

-விவேக்பாரதி 
15.08.2019

Comments

Popular Posts