பிரதோஷப் பாட்டு


 பாடத்தில் பெரிதாக நாட்டம் இல்லை
    பலர்சொல்லித் தரும்போதும் படிப்ப தில்லை
வேடத்தை ஒருநாளும் கலைப்ப தில்லை
    வேண்டுமெனச் சொல்வதையும் நிறுத்த வில்லை
கூடத்தில் தனியானேன், குழந்தை இங்கே
    குளிர்கண்டு பேயாக நடுங்கு கின்றேன்
ஓடத்தைப் போல்முன்னே வருவாய் நாதா
    ஒளிவேண்டும் நெஞ்சுக்குள் ஒடுங்கும் ஈசா!


எதிர்பார்த்துக் கடைசியிலே ஏமாற் றத்தை
    எப்போதும் அடைகின்ற நெஞ்சுக் குள்ளே
புதிர்பார்த்துச் சிரிகின்ற நாட கத்தைப்
    பொழுதுக்கும் செய்வாயோ ஆட்டக் காரா!
விதிபார்த்து வினைசெய்யத் தெரியா திங்கு
    வீதியிலே சருகாகி வீழும் என்னை
நதிபார்த்து வடிவாக்கி விடுவ தொப்ப
    நன்னெஞ்சில் நான்கேட்க ஒடுங்கும் ஈசா!

காலத்தை நம்புகிறேன், காலத் தோடு
    கால்வலிக்க ஓடுகிறேன், நடப்ப தெல்லாம்
காலத்தின் கையிலென நினைத்துக் கொண்டு
    காரியங்கள் செய்கின்றேன், துவளல் நேர்ந்தால்
காலத்தைக் குறைகூறி அரற்று கின்றேன்,
     காலத்தால் வென்றேனென் றுரைப்ப தில்லை!
காலத்தைக் காலசைவில் ஆளும் நாதா
    கண்ணுக்குள் நெருப்பாக ஒடுங்கும் ஈசா!

காமத்தை விட்டகலத் தெரிய வில்லை
    கானத்தை மறந்திடவும் அறிய வில்லை
ஏமத்தை விரும்பாத மௌனம் தன்னை
    எப்படித்தான் சூடுவது? விளங்க வில்லை!
சாமிக்குத் தெரியாத செய்தி யாநான்
    சத்தமிட்டு மழலையிலே சொல்லி நிற்க?
பூமிக்குள் ஏன்வந்தேன்? மனம் எதற்கு?
    புனிதங்கள் இல்லாத உடல் எதற்கு?

ஒன்றுமறி யாதிருக்கும் கன்று! உன்றன்
    ஓங்கார சந்நிதிக்கு முன்னே நின்று
இன்றிதனைக் கேட்கின்றேன் சிதம்ப ரேசா!
    இசைநெஞ்சர் போற்றுகிற மயிலை ராசா!
என்றெனக்குப் புதுவிடியல் வெள்ளை உள்ளம்?
    எப்போது மறுபடியும் பதத்தின் காட்சி?
ஒன்றெனக்குச் சொல்லிவிடு சொல்லா விட்டால்
    ஒவ்வொருநா ளும்குமுறல் ஒலிக்கும் பாட்டே!!

-விவேக்பாரதி
30.07.2019

Comments

Popular Posts