வெளியே வா...



இதயத் துக்குள் எழுதியது போதும் 
   எடுத்துக் கொண்டு வெளியேவா!
கதவைத் திறந்து காத்திருக் கின்றேன்
   கவிதைக் காற்றாய் வெளியேவா!
பொன்மா லைக்குள் எத்தனை வண்ணம்,
   பொழுது விடிகையில் எத்தனை எண்ணம்,
மின்னல் துகளில் எத்தனை ஒளிகள்,
   மேலே பார்!பார்! எத்தனை கிளிகள்!
வெற்றி முத்துகள் வேர்வைத் துளிகள்,
   வெளியே எங்கும் கூட்டத் தொலிகள்,
நெற்றி விரியச் சிரிக்கும் குழந்தை,
   நெஞ்சத்தோரம் பேசும் மழலை!
உன்னை உள்ளே வைத்ததும் யாரு
   உலகைப் பாரு! உடனெழுந் தாடு!
தன்னைத் தானே பார்த்துச் சிரிக்கத்
   தெய்வம் தந்த வரம்நீ! பாடு!
காதல் கொள்வது மானிட நீதி
   கவிதை அதற்கே என்பது சேதி
மீதம் இருக்கு வெளியினில் காண்க!
   மிச்சம் வேண்டா யாவையும் பூண்க!
சிலுப்பிக் கொள்ளச் சிறகுகள் உண்டு
   சிந்தைக்குள்ளே தொடுவான் உண்டு
உலுப்பி உன்னை எழுப்புகின்றேன்
   உடனே எழுந்து வேளியே வாவா!
(இதயத்துக்குள்.... )

-விவேக்பாரதி '
26.05.2019

Comments

Popular Posts