வடபழனி பதிகம்



காப்பு 

தண்டாய்த பாணி தமிழ்கேட்டே விப்பதிகம்
கொண்டா னவனே கொடுத்தவனும் - செண்டாய்க்
கொடியாய்ச் சிறிய கொசுவாக வேனும் 
வடபழனி வாழ்தல் வரம்!

பதிகம்

வடபழனி முருகென்னும் வடிவழகைக் கண்ணுற்ற
   வாழ்த்துடைய திருநாளிலே - எனை
வருடியது சிறுதென்றல் விலகியது பிடிமாயம்
   வாழ்க்கையின் பொருள் நின்றது!
கடகடென விழியருவி கன்னம் நனைத்தென்னைக்
   கழுவியொரு நிலை தந்தது - எழில்
கலாபத்தில் ஓரொளியென் நெஞ்சத்தில் ஊடுருவிக்
   கருணைமுக மலர் தந்தது!
திடமனது குழவிகரம் பட்டதொரு சிறுகூழாய்த்
   திறனற்று சரண் என்றது - வந்தத்
திவ்யக் கலாபத்தின் பொன்னிறச் செவ்வேலென்
   திசைமறைய எனைத் தொட்டது!
அட!யினிமை இது!புதுமை ஆண்டவா உன்மகிமை
   ஆசைமொழி சொன்னதம்மா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
   ஆட்கொண் டிருந்ததம்மா!

கனவுவரும் நிமிடமெது நினைவுவரும் வழியுமெது
   கருத்துக்குத் தெரியுமாமோ? - ஒரு
கடவுளவன் குருவெனுமோர் வடிவாகி வரும்நேரம்
   கழுதைக்குப் புரியுமாமோ?
எனதெனது வழியெனது வாழ்வெனது எனும்சிந்தை
   எத்தனை பிள்ளைத்தனம் - இதை
என்நெஞ் சறிந்துவிடச் சின்னஞ் சிறுமயிலில்
   என்முன்னம் தெய்வத்தடம்
மனதிலோர் ஆச்சர்யம் மறுகணம் யுகத்துன்பம்
   மாறியடி புயலானது - வந்து
வாழ்விப்ப தாரின்று மூழ்கிடச் செய்வதார்
   வாழ்க்கையோர் புதிரானது!
அனைவரும் இருந்தவிடம் அரைநொடியில் கடவுளுடன்
   அறிவிலியை வைத்ததம்மா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
   ஆட்கொண் டிருந்ததம்மா!

தாயின்கரு வறையிலே எதுமற்ற வெண்ணிறத்
   தாளாய்க் கிடந்த நேரம் - இந்தத்
தரையில் விழுந்ததும் அத்யாயம் ஒவ்வொன்றும்
   தானாய்ப் பதிந்த நேரம்
நேயமும் பக்தியும் காமமும் பொய்ம்மையும்
   நெஞ்சை நிறைத்த நேரம் - சென்ற
நேற்றோடு நின்றபடி காற்றோடு வெந்தபடி
   நெளிந்தே கழிந்த நேரம்
நாயினேன் தாள்நீங்கி எழுத்துகள் மட்டுமே
   நஞ்சாய் நிறைந்த நேரம் - எது
நானென்ற கேள்வியொடு தாளே மறைந்துபோய்
   நடுவீதி கண்ட நேரம்
ஆயகலை நாயகன் ஆதிமகன் கண்களால்
   அறிவினைத் தந்தானம்மா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
    ஆட்கொண் டிருந்ததம்மா!

அத்தனை அருகிலே அழகனை முருகனை
   அதுவரை கண்டதில்லை - எனை
அறிவினில் உலுக்கியே விழிகசிய இதுவரையில்
   அவனுமே தொட்டதில்லை!
பொத்தெனப் பழவினை பொடியெனத் தூளெனப்
   புதையவே வீழ்ந்ததம்மா! - என்
புத்தியினில் அற்புதமி ழைத்தவொரு முத்துரதம்
   புதியதாய் நின்றதம்மா!
முத்துமணி கொட்டிவரும் முருகன் சிரிப்புமுகம்
   முழுதும் தெரிந்த பின்னால், - மனம்
முணகுவது நீங்கி,யென் முயற்சிகள் நீங்கி,யது
   முகைபோல் குவிந்ததம்மா!
அத்தர்மணம் சந்தனமும் தூபமிடும் வாசனையும்
   ஆண்டே கிடந்ததம்மா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
   ஆட்கொண் டிருந்ததம்மா!

திரையோடு காட்சிவரும் திரையில் நெருப்புவிழும்
   திரையதுவும் எரிந்திடாது! - ஓர்
தினத்தில் பகலும்வரும் உடனே இருட்டுவரும்
   திட்டமிது மாறிடாது!
தரையோ டிருக்கும்வரை நானன்றி விழிப்புக்குத்
   தனிவழிகள் ஏதுமில்லை! - அந்தத்
தானை மறக்காது தரைவாழ்வு விடிவுபெறத்
   தங்கிடும் வழிகளில்லை!
விரைவாகச் செல்கின்ற காலத்தின் ஓட்டத்தில்
   வீற்றிருந் தாருமில்லை - இதில்
வீணாக அலைபவர் தேடலைப் பயணமாய்
   வீதிகள் பார்த்ததில்லை!
அறைந்தே இவற்றையென் அடிநெஞ்சில் மேடையிட்
   டறிவாய்க் கொடுத்தானம்மா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
   ஆட்கொண் டிருந்ததம்மா!

தொட்டுவிழும் ஒருமழையின் துளிநோக்கி யேவிதைகள்
   துவக்கும் தவத்தை மண்ணில் - துளி
தொட்டுவிட் டால்கொண்ட கேள்வியின் குறிகளைத்
   தொடர்ந்தே விரிக்கும் விண்ணில்!
பட்டுமெத் தைத்தூக்கம் பஞ்சணை கொண்டாலும்
   பஞ்சமோ கேள்வி நிற்க - அந்தப்
பக்குவம் அடைந்தவுடன் பட்டிணத் தடிகள்வழி
   பாடங்கள் வாழ்வில் கற்க!
முட்டிவரும் கோபமும் ஆசையும் காமமும்
   முழுமைக்கு நாமும் இல்லை - இந்த
முடிச்சை அவழ்க்கின்ற காலம் நெருங்கியபின்
   முயற்சிகள் தேவையில்லை!
அட்டவணை இட்டுப்பணி ஆற்றிக் கிடத்தலையே
   ஆதிகடன் என்றானமா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
   ஆட்கொண் டிருந்ததம்மா! 

தேனூறும் பாடல்கள் அமிழ்தமாய்ச் செவியோரம்
   தேடியே தந்த தெய்வம்! - மனத்
தெளிவைக் கொடுத்திட அழலைப் பதித்திடத்
   தேரேறி வந்த தெய்வம்!
ஞானாதி காரத்து வார்த்தையைச் சிறுவனின்
   நனிகாதில் சொன்ன தெய்வம் - தன்
நல்லதரி சனமென்னும் வெல்லமலை முன்வைத்து
   நான்வியக்கப் பார்த்த தெய்வம்!
வானாகி அன்புமழை தூறித் துளிர்க்கின்ற
   வழிசொல்லித் தந்த தெய்வம் - என்
வாழ்க்கையொரு குமிழியதை வண்ணக் கடல்காட்டி
   வலிமைதர வந்த தெய்வம்!
ஆனாலும் அவனென்னை தேடவிட் டாட்டுகிற
   அசட்டுக் குறும்பனப்பா - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
   ஆட்கொண் டிருந்ததம்மா!

காளிமகன் என்முன்னம் காற்றாகி வந்ததிருக்
   காட்சியைக் கண்டுகொண்டேன் - அவன்
கவிதை நெருப்பிலே கனலின் தெறிப்பிலே
   கால்பற்றி நின்று கொண்டேன்!
தோளழகன், மயிலுடன் நிற்கின்ற நாயகன்
   தோற்றத்தைக் கண்டுகொண்டேன் - மனம்
தூளாகிச் சிதறியவன் தாளில் மலர்களாய்த்
   துரும்பாகக் கண்டுகொண்டேன்!
வேளிருக் கும்பதி வடபழனி மீதிலென்
   மனத்தினில் என்று கொண்டேன் - அந்த
வேளையில் மலர்வந்து தானென்று பதில்சொல்ல
   வெற்றியைக் கண்டு கொண்டேன்!
ஆளிருக் கும்புவி அத்தனையும் ஒருநொடியில்
   அத்தமனம் ஆனதம்மா! - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
   ஆட்கொண் டிருந்ததம்மா!

சிற்றெறும் பென்மீது பணங்காயை வைத்ததும்
   சிறியவன் நாடகம் தான்! - மொழி
சிதறிவரும் பாடல்கள் சித்திரம் முருகவேள்
   சிரிக்கின்ற ஊடகம் தான்!
கற்றுவரும் கல்விகளும் பெற்றுவரும் அனுபவமும்
   கடைநாள் வரையினில் தான்! - இடம்
கடக்காமல் மீண்டும்நாம் ஜனிக்காமல் வாழ்ந்திடக்
   கடவுளின் கால்தடம் தான்!
வற்றிவிடும் அன்பும் வதங்கிவிடும் ஈரமும்
   வடிவேலின் முன் துளிர்க்கும்! - ஒரு
வசந்தப் பிராயத்தில் வண்ணமயில் நெஞ்சோரம்
   வாழவே சொல் கொடுக்கும்!
அற்றுவிழும் திரையதனில் அடங்கிவிடும் ஆட்டங்கள்
   அறிந்தே வியந்தேனம்மா! - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
   ஆட்கொண் டிருந்ததம்மா!

சிந்தனை முழுவதும் சிவன்மகன் ராஜ்ஜியம்!
   சில்லாகிப் போன காலம்! - என்
சிற்றின்பப் பேரின்ப நினைவெலாம் மீண்டுமவன்
   சிரிப்பினைக் காண ஏங்கும்!
வந்தித்து வந்தித்து மீண்டுமதைப் பார்த்திட
   வடபழனி மேவும் கால்கள் - நான்
வந்ததை அறிந்துமே வளநகை காட்டாமல்
   வாலாட்டி ஓடும் கந்தன்!
தொந்தமென மறுபடியும் சூழ்வினைகள் என்னையே
   தொடரக் கலங்குகின்றேன்! - அவன்
தோன்றுமிடம் தேடியே மற்றுவழி இல்லாமல்
   தூக்கம் விழிப்பு தீர்த்தேன்!
அந்தரி மகன்முருகன் அருட்காட்சி மீண்டும்தர
   ஆவியோ ஏங்குதம்மா! - என்
அன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை
   ஆட்கொண் டிருக்குதம்மா!!



-விவேக்பாரதி 
24.05.2019
குரல்வழிப் பதிவு :

Comments

Post a Comment

Popular Posts