பாம் பாம் பீப் பீப்....


சென்னை போன்ற பெரிய நகரத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது போல இன்பமும் இல்லை, இம்சையும் இல்லை. எதையேனும் யோசனைத் தடத்தில் எடுத்துக்கொண்டு, தலைகவசத்தை அணிந்து, வண்டி ஓட்டத் தொடங்கினால் நெரிசலுள் நகரும் வேகத்தில் மனதுக்குள் ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு பொறுமையான பயணங்கள் சென்னையில் வாய்க்கும். அது இன்பம். நாம் என்னவோ நகராமல் நடுச்சாலையில் நிற்பது போலவும், பின்னால் வருபவர்கள் மட்டும்தான் நகர்கிறார்கள் என்பதுபோல பின்னால் இருந்து ஹாரன் அடித்துக்கொண்டே வருபவர்கள் செய்யும் அலும்பல் இம்சை.
ஹாரன் அடிக்கத் தடையே இருக்கும் பல நாடுகள் இருக்கின்றன. மஸ்கெட் நகரில், வலப்புறம் செல்லும் வாகனங்கள் கூட, வெண்ணெயில் கத்தி போவதைப்போல சத்தமின்றி சல் சல் என்று ஓட்ட முடிகிறது. சிங்கப்பூரிலும் வாகனங்கள் ஹாரன் அடிப்பதில்லை. ஆனால் நம் நாட்டில் ஹாரன் சத்தத்தில் கச்சேரியே நடக்கிறது. நம்மூர்ச் சாலைகளிலும் ஹாரன் அடிக்காமல் ஓட்டமுடியும் என்று நம்புவதால் பெரும்பாலும் நான் ஹாரன் அடிப்பதில்லை.
சரிடா! அதை இங்கே எதற்கு எழுதுவானேன் என்று இதுவரைக்கும் பொறுமையாகப் படித்துக்கொண்டு வந்தவர்கள் கேட்கலாம். என்னால் முடியும் என்று நான் நம்புவதுபோல நீங்களும் நம்புங்கள் என்று சொல்ல ஆசைப்படுகிறேன். பல விஷயங்களைப் போலவே வாகனம் ஓட்டுவதிலும் நமக்கு அடிப்படைகள் சில தவறாகத்தான் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வளைவிலும் பெல்/ஹாரன் அடி என்று அப்பா சொல்லிக்கொடுப்பதில் இருந்து அது தொடங்குகிறது. இதில் மிருகங்களின் நல்வாழ்வு, இரைச்சலால் ஏற்படும் மாசு, மன உளைச்சல், என்று உலகநன்மைகள் பல இருந்தாலும், நமக்கு முக்கியம் மனவெறுப்பின்றி வாகனங்களை இயக்குதலும், இலக்குகளை அடைதலும்தான். புதியதாக மகிழூந்து ஓட்டும் சிலர் ஹாரனிலிருந்து கைகளையே எடுப்பதில்லை. பிரச்சாரம், பிரதாபம் என்பதெல்லாம் பெரிய காரியங்கள், அடைப்படையாக நாம் வண்டி ஓட்டும்போது ஹாரன் அடிக்காமல் ஓட்டுவோம். பக்கத்திலும், எதிரிலும், முன்னும், பின்னும் நம்மைப்போலவே வாகனங்களை இயக்குபவர்களும் மனிதர்களே!!
-விவேக்பாரதி
27.05.2019

Comments

Popular Posts