கண்ணன் வருகை




புல்லாங் குழலிசை கேட்கும் - மனம் 
புரியாமல் எங்கெங்கும் பார்க்கும்! - பின்பு
எல்லாம் ஒருநொடியில் மறையும் - அங்கு 
என்கண்ணன் முகம்மட்டும் தெரியும்! 

இதில் 
இல்லாத சுகமில்லை இனிவேறு சுகமில்லை 
சொல்லாமல் வாய்மூட நெஞ்சுக்குத் துணிவில்லை! 
சொல்லச்சொல்ல அடங்காத கண்ணன்! - அவன்
சொல்லும்போதே மறையும் கள்வன்! 

நீலப் பீலிமயில் பார்க்கும் - வந்து
நித்தம் அதுபுரந்து காக்கும் - சின்னக்
கோலம் இன்பங்களைச் சேர்க்கும் - மனம் 
கோகுலத்தின் வழியாகிப் பூக்கும் 

இந்தக் 
காலத்தில் தனியின்பம் கவிதைக்குள் அவன்பிம்பம் 
கணநேரம் யுகமாகிக் கலங்கிடும் வகைதங்கும்! 
எண்ணம் எங்கும் நிழலாகக் கண்ணன் - அவன் 
எவருக்கும் தெரியாத கள்வன்! 

நெஞ்சம் பசுக்கூட்டம் ஆகும் - அது 
நெக்குருக கானமுடன் சேரும் - அவன் 
கொஞ்சம் சிரித்தாலே போதும் - இந்தக் 
கொள்ளைவுயிர் மோட்சத்தினைச் சேரும் 

வந்து 
மஞ்சாக அவன்நின்று மழைமாலை தரும்போதும்
மனம்கொஞ்சத் திருப்பாதம் மண்மீது வரும்போதும்
வஞ்சகங்கள் இல்லாமல் தீரும் - எங்கும் 
வெற்றியெனும் பொற்கிரணம் ஏறும்!!

-விவேக்பாரதி
24.08.2019




Comments

Popular Posts