பைந்தமிழ்ச் சோலை நான்காம் ஆண்டுவிழா


   முகநூலில் ஏற்படும் நட்பும் உறவும் நெடுங்காலம் வளர வாய்ப்பிருக்குமா? அதுவும் இலக்கியப் பணி செய்ய உருவான குழுமம் தொடர்ந்து பல ஆண்டுகளாக கவிஞர்களைக் கூட்டி விழா நடத்திச் சிறப்பித்தல்/சிறப்பாதல் என்பது சாத்தியமா?
ஆம்! சாத்தியமானது!
   நேற்று சென்னை ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில் பைந்தமிழ்ச் சோலை முகநூல் குழுவின் நான்காம் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. குறித்த நேரத்தில் தொடங்கி, புதுவைப் பாவலர் பொன்.பசுபதி அவர்களது உருவப்படம் திறக்கப்பட்டது. அரங்கமும் பசுபதி ஐயாவின் நினைவரங்கமாக நடந்தது.
   சோலையைச் சேர்ந்த கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி எழுதிய "அகடகவிதமது" என்னும் கவிதைத் தொகுப்பும், கவிஞர் மதுரா, ரத்னா வெங்கட் ஆகியோரின் குழு எழுதிய "முல்லை முறுவல்" என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. பாவலர் கருமலைத் தமிழாழன் நூல்களை வெளியிட்டார். கவிஞர் தமிழகழ்வன் வெளியிட்ட நூலின் பெயரைப் புணர்ச்சி விதிகளைத் தளர்த்தி பாவலர் மா. வரதராசன் சொன்னவிதம் பிரம்மிக்க வைத்தது.
   தொடர்ந்து வானவில் க.ரவி அவர்களுக்கும் கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்களுக்கும் பைந்தமிழ்ச் சோலையின் விருது வழங்கப்பட்டது. "பைந்தமிழ்க் குவை" என்னும் விருதை க.ரவியும், "பைந்தமிழ்க் குருத்து" என்னும் விருதை தமிழகழ்வனும் பெற்றனர். விருது வழங்கி, 'கம்பனில் நுண்மைகள்' என்ற தலைப்பில்இசைக்கவி ரமணன் உரையாற்றினார். "மரபு விழுமியங்கள் நிச்சயமாக காக்கப்பட வேண்டும்! பாவலர் செய்து கொண்டிருக்கும் பணி, ஒரு வேள்வி" என்று வாழ்த்துன் தெரிவித்தார்.
   புதுமை நிகழ்ச்சியான ஆசுகவி அரங்கம், சிறு தேனீர் இடைவேளைக்குப்பின் தொடர்ந்தது. ஆறு கவிஞர்கள், சொன்ன மாத்திரத்தில் கவிதை எழுதும் ஆசுகவி போட்டியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வை நான் தலைமையேற்று நடத்தினேன். கவிஞர் இல. சுந்தரராசன், கவிஞர் வெ.விஜய், கவிஞர் தமிழகழ்வன்ஆகியோர் "ஆசுகவி" பட்டம் பெற்றனர்.
இடையில் பாவலருக்கு இன்ப அதிர்ச்சியாக பைந்தமிழ்ச் சோலைக் கவிஞர்கள் பாவலர் மேலும் சோலை மேலும் எழுதிய "பைந்தமிழ்ச் சோலை பன்மணி அந்தாதி" என்னும் நூல் வெளியிடப்பட்டது. பாவலருக்குக் குரு காணிக்கையும் சிறு தொகையாக வழங்கப்பட்டது.
   தொடர்ந்து "என்ன தவம் செய்தோம்" என்னும் தலைப்பிலான கவியரங்கம் பாவலர் மா. வரதராசன் தலைமையில் நடைபெற்றது. கவியரங்கையும் பாவலர் கருமலைத் தமிழாழன் தொடக்கி வைத்தார். சுமார் 24 கவிஞர்கள் அந்தக் கவியரங்கத்தில் பங்கு கொண்டனர். கவியரங்கிற்குப் பின்னர் சிறப்பு விருந்தினர் கவிக்கோ ஞானச்செல்வன் ஐயாவின் கரங்களால் பட்டங்கள் வழங்கப்பட்டன.
   சோலையின் பாவலர் பட்டத் தேர்வு எழுதிய கவிஞர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில், "சந்தக் கவிமணி", "பைந்தமிழ்ச் செம்மல்", "பைந்தமிழ்ப் பாமணி", "பைந்தமிழ்ச் சுடர்" ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன. விருது வழங்கிய கவிக்கோ ஞானச்செல்வன், "பிழையின்றி நல்லதமிழ் பேசுவோம்" என்னும் தலைப்பில் சிறிய சீரிய உரையாற்றினார்.
மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
   விழா நிறைவில் கவிஞர் விஜயகுமார் வேல்முருகன், தம் மகளின் கரங்களால் அனைவருக்கும் மரக்கன்று தந்து வழியனுப்பி வைத்தார். இலக்கியச் சோலை நிகழ்வு இயற்கைச் சோலை நிகழ்வாகவும் பரிமளித்து இனித்தது.
நிகழ்ச்சி ஆர்க்கே கன்வென்ஷன் சென்டரின் பேருதவியால் நேரலையாக ஒளிபரப்பாகியது... இதோ அந்தக் காணொலி..

Comments

Popular Posts