வடபழனியில் உறை பெருமாளே


"தனத்த தனதன தனதன தனதன 
   தனத்த தனதன தனதன தனதன
      தனத்த தனதன தனதன தனதன - தனதானா"

எரிக்கு மழலுறு விழிகளு மழகுற
   விரிக்கு மிமையெனு விரிசிலை உயிரினை
      யுருக்கு முனதரு ளமைமொழி மதியினி - லறியேனே

எடுத்த வினையெனு மிழிகட லினிலெனை
   விடுக்கு மனதினை முழுவது மடியென
      வடிக்கு வழிகளு மமைகிற வுயரமு - முணரேனே

தரித்த உடலினை உறுதியெ னமனது
   முரைக்க மகளிரு மிழிமது வினைகளு
      மடுத்து மனிதரி லிழியவ னெனமிக - அலைவோனைத்

தடுத்த தயவினை நினைவினி லெழுகிற
   திருப்பு கழைமொழி தமிழனை யனுதின
      முனைத்தொ டவுருகு மெளியனை விழியவி - ழொருபார்வை

சிரித்தெ னதுபகை சமரினி லழிவுறு
   திறத்தி லொருதர மெனைவிழி யழகிய
      சினத்தி லசுரரை யறுவினை யதுபுரி - திறனோனே!

சிவக்க மணியித ழினிலொளி வளநகை
   திகைக்க வெழுகிற பதவொலி யிவையொடு
      சிதைத்து மெனையொரு நொடியினி லுதறிய - முருகோனே

கருத்த உருவுடை கடவுளி ளிளவ!க
   கனத்தை யொருநொடி யினிலுல வியகுக!
      கவித்த மயிலுட னொருகொடி கரமுடை - எழிலோனே!

கணத்தி லெனிலொரு தரமுன தருமுக
   வதிர்ச்சி யினைநினை வழிவுற நிறுவிய
      கடற்ற வழுபதி வடபழ னியிலுறை - பெருமாளே!!

-விவேக்பாரதி
28.05.2019

Comments

Popular Posts