செல்லம்மாள் பாரதி

பொற்றாமரை இலக்கிய மன்றத்தின் ஆண்டுவிழாவில் "தியாகச் சுமங்கலிகள்" என்னும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. பேராசிரியர் வ.வே.சு தலைமையில், நான் "செல்லம்மாள் பாரதி" பற்றி வாசித்த கவிதை...


கடையத்தே முன்புதித்த கண்மணியை, எங்கள்
அடைமழையாம் பாரதியை ஆதரித்த சக்தியினைச்
சின்னஞ் சிறுவன் சிறுகுதலை மென்மொழியில்
புன்னகை யோடு புகழ்ந்துரைப்பேன் கேளுங்கள்!
 
தன்கணவன் எல்லார்போல் சாமான்யன் இல்லையென
முன்கனவு அத்தனையும் மூட்டையிட்டு வீசியவள்!
எப்போதும் பாட்டினிலே எக்களித்து வாழ்ந்தவனை
முப்போதும் தாங்கியதோர் முத்துக் கருப்பமவள்!
கவிஞன் மனைவியெனக் காலம் கழித்தல்
தவம்!அதனைக் காட்டியவள் செல்லம்மாள் பாரதிதான்!
பித்தன் எனப்பலரும் பேசிநின்ற வேளையெலாம்
சத்தமின்றி கண்ணீர் சொரிந்தவளக் காரிகைதான்!

மரபு வழுவாத மங்கையவள்! கையில்
இரண்டு மகள்கள்! இதயத்தே, தம்கணவர்
இன்னும் எவையெல்லாம் இங்கிழைப்பார் என்றேங்கி
மின்னல் இடியும் மிரட்டிடும் அச்சங்கள்!

சின்னஞ் சிறுவயதுச் சித்திரம்! வாழ்க்கையெனில்
என்னவெனக் கண்டுகொண்ட ஏந்திழையள் செல்லம்மாள்!
ஓர்பால் வளர்த்த ஒழுக்கங்கள்! நேரெதிரில் 
போர்போல் முரண்பிடிக்கும் போட்டிக் கணவர்சொல்!
இவ்விரண்டின் மத்தியிலே என்ன நினைத்திருப்பாள்?
கவ்வியதோர் பட்டினியில் கானம் ரசித்திருப்பாள்!

எல்லார்க்கும் ஞானம் எடுத்துரைத்த பாரதியார்
செல்லம்மாள் கண்முன்னம் சேயாய்த் திரிந்திருந்தான்!

மங்கை நினைத்திருத்த மாக்கனவைக் கேட்கவில்லை,
சங்கப் புலவன்போல் செந்தமிழில் பாட்டுதந்தான்!
கண்ணே எதுவேண்டும் காதுபடக் கேட்கவில்லை,
பண்ணே பரவசமே பன்மொழிகள் பேசிநின்றான்!

செய்கை அனைத்திலும் சேர்புதுமை செய்கவிஞன்
வைகறைச்செவ் வானழகி வாழ்த்தில் உலவிவந்தான்!

(வேறு)

பட்டினியும் பசிதனையும் இவள்தாங்கிக் கொண்டாள்
   பாட்டுத்தேர் பூட்டியவன் பவனிவர லானான்
முட்டுகிற கடன்தொல்லை இவள்தாங்கிக் கொண்டான்
   மூளுமொரு ஞானத்தீ அவனேற்ற லானான்
கொட்டிவரும் வசைச்சொற்கள் அவள்தாங்கிக் கொண்டாள்
   கொடியுயர நாட்டுப்பண் அவன்பாட லானான்
வெட்டுகிற விதிக்கோரம் இவள்தாங்க லானாள் 
   வெற்றியென எப்புரத்தும் அவன்பாய லானான்!

ஒருதடவை குழந்தைக்குக் காய்ச்சலெனும் போதே
   ஒப்பரிய தெய்வத்தைச் சாடிடவா என்றான்!
வருடங்கள் மாதங்கள் எத்தனையோ நாட்கள்
   வந்தபிணிப் போதிலிவள் சக்திசரண் என்றாள்!
தருணங்கள் அறியாமல் பாடுபவன் பாட்டில்
   தமிழ்ச்சுவையில் இவளும்தான் பசிகள் துறந்தாள்
கருணைமகள் பெண்டாட்டி உருகொண்டு வந்தாள் 
   கவிராஜன் நமக்காக எழுதவழி செய்தாள்!

மனத்தினிலோர் சஞ்சலத்தில் வாழ்ந்தாள் செல்லம்மா
   மக்கள் சொற்கள் கேட்டுப் பயந்தாள் செல்லம்மா
உனக்கென்ன விருப்பமென அவன்கேட்ட தில்லை
   உங்களுக்காய் என்றவளும் வரிசொன்ன தில்லை!
இனப்பிரிவின் மரபினிலே வந்தவளை மாற்ற
   இலையிட்டுத் தாழ்ந்தோர்க்குப் பரிமாரச் சொன்னான்!
கனகலிங்கம் வீட்டுக்குள் தான்நின்று கொண்டு
   கவிகேட்க வரச்சொல்லி யொருதூது செய்தான்!

(வேறு)

கண்ணம்மா கண்ணம்மா எனச்சொல்லி மாகவிஞன் கண்ணன் பேரைப்
பெண்ணாக்கிப் பார்த்ததெலாம் செல்லம்மாள் மேலிருந்த பிரியத் தால்தான்!
கண்ணன்பாட் டென்றிங்கே தனியாயோர் தொகுப்புண்டு! கவிஞன் சொன்ன 
பண்ணழகு தனிப்பாடல் கண்ணம்மா செல்லம்மாப் பாட்டென் றாகும்!

என்னென்ன அதிற்சொல்வான் நகைபுதிய ரோஜாப்பு எனச்சி ரிப்பான்!
மன்மதனின் வில்லென்பான் புருவத்தை, வானமிழ்தம் வார்த்தை என்பான்,
கன்னிநுதல் இளமைமிகு சூரியனென் பான்,முகமோ கமலம் என்பான்!
விண்ணிந்த்ர நீலப்பூ விழியென்பான் அவளெழிலை மின்னல் என்பான்!

நம்கவிஞன் தம்புரட்சிச் சிந்தனையின் சோதனைகள் நடத்த வேண்டித்
தம்மினத்து மக்களிடம் சமவுரிமைக் கோட்பாடு தழைக்க வேண்டி
வம்படியாய்ப் பலசெய்த வேளைகளில் பிறவீட்டு மக்கள் போலத்
தெம்புடனே இல்லறத்தை நடத்தியவள் அவன்மனைவி செல்லம் மாள்தான்!

(வேறு)

தோளினில் கையைப் போட்டு தொன்மிகு மக்கள் பார்க்க 
   தோரனைச் செருக்குத் துள்ளத் தெருவினில் நடந்த போதும்,
காளியை மனத்து வைத்துக் கண்டதை உண்டு! காட்டுக் 
   கழுதையைக் கொஞ்சி அந்தக் கவிமகன் திரிந்த போதும்,
நாளெலாம் எழுதிப் பாடி நாட்டினை நினைத்துக் கொண்டு
   நள்ளிராப் போதில் கண்கள் நனைத்தவன் அழுத போதும்,
தூளியைக் காற்று தீண்டி தூக்கமே தருவ தொப்பத்
   தாய்முகம் காணா தானைத் தழுவிய கரம்செல் லம்மா!

பைத்தியம் என்று மாந்தர் பகடிகள் செய்த போதும்,
   பணமிலா நிலையில் வாழ்க்கை பாலையாய்த் தெரிந்த போதும்,
வைத்தியன் என்று சித்தர் வழியிலே விழுந்த போதும்,
   வாளுடை முரடன் என்று வாரன்ட்டு வளைத்த போதும்,
சீர்த்ததன் அறிவை வையச் செவியினில் ஏற்ற வேண்டிச்
   செய்யரும் கடமை ஆற்றி சென்றநம் பார திக்கு
வாத்தியாய் நண்ப னாயும் வளமுடை ரசிகை யாயும்
   வாழ்வுசெய் தேவி யாயும் வந்ததெய் வம்செல் லம்மா! 

(வேறு)

அக்கம் பக்க வீட்டினிலே அரிசி கடனாய் வாங்கிவைப்பாள்
   அடடா குருவி பசிக்குதென அசடன் போட்டுப் பாட்டெடுப்பான்!
மிக்கக் கவலை காசிக்கு வணங்கிக் கடிதம் எழுதிவைப்பாள்
   மீண்டு நீயும் தமிழ்படித்தால் மகிழ்வேன் என்று பதில்தருவான்!
தக்க வேலை கிடைத்ததெனச் சந்தோ ஷத்தில் அவளிருப்பாள்
   தர்க்கம் செய்து வெளியேறி சகிக்க வில்லை எனச்சொல்வான்!
சிக்கல் இல்லாச் சன்மானம் சீரா டைக்குக் காத்திருப்பாள்
   தேடித் தேடிப் பிடித்ததென தெளிநூற் குவியல் அவன்கொணர்வான்!

காலை எழுந்து கிரமமாக காப்பி யோடு வெற்றிலையும்
   கனிவாய்த் தந்து பார்த்திருப்பாள் கட்டுரை இல்லை எனச்சிரிப்பான்!
மாலை போட்ட மறுகணத்தில் மனத்தில் நாணம் கொண்டிருந்தாள்
   மழலைக் கவிதை பாடியொரு முத்தம் வைத்தான் அழுதுவிட்டாள்!
நாலைந் தணாக்கள் கிடைத்தாலும் நம்பிக் கேட்டால் கொடுத்திடுவான் 
   நன்றாய் அதையும் ரசித்தபடி நண்பர்க் குரைத்து சிரித்திடுவான்!
வேலை இல்லை காசில்லை விருந்தா ளிக்குக் குறைவில்லை
   வேந்தன் போல அவன்வாழ்ந்தான் விந்தை எல்லாம் இவள்செய்தாள்!   

கல்வி கற்க வில்லையவள் கவிதை கற்ற பெரும்புலமி
   கண்டு வாழ்க்கைப் பாடத்தில் காலை ஊன்றிய பெரும்ஞானி
செல்வம் பெரிதாய் இலையவட்குச் சேர்த்து வைத்த அவன்கவிதை
   செல்வம் என்று குழந்தைகட்குச் செருக்கிற் சொன்ன தமிழ்ரசிகை!
வெல்லம் அல்ல இவள்வாழ்க்கை வேத னைக்குப் பஞ்சமில்லை
   வேத னைகள் இருந்தாலும் வியக்கச் சிரிக்க மறந்ததில்லை!
செல்லம் மாளைப் பாருங்கள் சேர்த்தே அவளைப் படியுங்கள்
   செல்லம் மாளால் பாரதியார்! செல்லம் மாள்தான் பாரதியார்!!

-விவேக்பாரதி
20.07.2019

Comments

Popular Posts