புண்ய பூமி

காணும் கண்கள் படப டக்கக் 
      காளி தேவி ஆட்டம்
  கட்டி லாத ககனம் மீது 
      காளி தேவி ஆட்டம்
பூணும் வெள்ளை மேகம் யாவும் 
      புதிய கருமை சூட
  புரட்டிப் போடும் சூறைக் காற்று 
      புதிய கீதம் பாட
வேணு மென்று கேட்கும் வீர 
      வெறியில் காளி ஆட்டம்
  வெட்ட வெளியில் நட்ட நடுவில் 
      வெல்லும் காளி ஆட்டம்
நாணு கின்ற தாரை எங்கும் 
      நல்ல கோலம் தீட்டும்
  நன்று நன்று என்று நிலவை 
      நாட்ய மேடை ஆக்கும்!

காளி ஆட்டம் கண்க ளுக்குள் 
      கனலை மொண்டு ஊற்றும்!
  கருது கின்ற நெஞ்சில் வீரக் 
      கங்கை யூற்றைப் பாய்ச்சும்!
காளி ஆட்டம் உலக மெங்கும் 
      களிகொ டுக்கும் ஆட்டம்!
  கலைகள் யாவும் கர்வம் கொள்ளக் 
      காளி ஆடும் ஆட்டம்!
தோளில் தோன்றும் வலிமை காளி 
      தோற்று விக்கும் சக்தி!
  தொல்லை தீர்க்கும் நல்ல சிந்தை 
      தோன்ற வைக்கும் உத்தி!
காளி என்ற சொல்கொ டுக்கும் 
      கவிதை நூறு கோடி!
காளி காளி காளி என்று 
      கானம் பாடும் நாடி!

அவளி லாமல் ஆட்ட மில்லை 
      அண்ட மில்லை இல்லை
  அவளை நெஞ்சில் நிற்க வைக்க 
      அச்ச மேதும் இல்லை
கவலை இல்லை மயக்கம் இல்லை 
      கண்ப னித்தல் இல்லை
  கற்ப னைக்குள் எட்டி டாத 
      காளி வானின் எல்லை!
திவலை யாக உயிர்க சிந்து 
      காளி பாதம் நாடும்
  தினமும் ஓடும் வாழ்வு காளி 
      திரள்ப தத்தை மேவும்!
புவியில் வாழும் வரையில் உண்மை 
      புரிதல் கொஞ்சம் கடினம்
  புரிந்து போகும் மறுக ணத்தில் 
      புண்ய பூமி ஜனனம்!!  

-விவேக்பாரதி 
10.03.2018

Comments

Popular Posts