இரவின் விளையாட்டு

வெண்ணிலா தலைக்கு மேலே
    வெள்ளொளி வீசிக் கொண்டே
எண்ணமெல் லாமுந் தோன்றி
    எழுதடா பாடல் என்கும்,


என்னையான் பாடப் பாட
    எப்போதும் போல்சி ரித்து
மின்னலாய்க் கைகள் தட்டி
    மீண்டுமோர் பாடல் கேட்கும்!

காதலைப் பாடி விட்டால்
    கார்முகில் திரையுள் நாணும்!
மோதலைப் பாடி னாலோ
    முழுவதும் கண்ணீர் சேரும்!

காளியைப் பாடும் போதோ
    கால்களில் ஜதிகள் போட்டுத்
தோளிலே என்னை ஏற்றித்
    தொடர்ந்தொரு பாடல் கேட்கும்!

கவிதைகள் போது மென்றால்
    காதினைத் திருகும்! அம்மா
தவிக்கிறேன் என்று சொன்னால்
    தண்ணொளி கொண்டு நீவும்!

இரவுடன் நிலவும் கூட்டு
    இயற்றுவேன் பலவாய்ப் பாட்டு!
விரிகதிர் வரும்வ ரைக்கும்
    விளையாட்டு நடந்தி ருக்கும்!!

-விவேக்பாரதி
01.03.2018

Comments

Popular Posts