தெய்வமும் நெஞ்சமும்

கோவிலுக்குள்ள மூலையிலை கையக்
கொட்டிச் சிரிக்குற தெய்வம்! - தன்னக்
கொஞ்சுறத்துக்கே கெஞ்சிக் கெடக்கும்
கோமாளி இந்த நெஞ்சம்!


ஆனத எல்லாம் ஆட்டி விட்டே
ஆடிக் குதிக்குற தெய்வம்! - இங்க
போனத எல்லாம் நெனச்சுக்கிட்டே
பொலம்பித் தவிக்கும் நெஞ்சம்!

மலையுமாகிக் கடலுமாகி
மலப்பு காட்டும் தெய்வம்! - தானும்
மலை என்பத மறந்துப்புட்டு
மருதலிக்கும் நெஞ்சம்!

அது தெய்வம்! இது நெஞ்சம்!

காத்தோட பல காட்சி படச்சு
கண்ணு சிமிட்டும் தெய்வம் - வெறும்
காலத்த எண்ணிக் கணக்குப் போட்டுக்
கண்ண ஒசத்துற நெஞ்சம்!

பாலூட்டி, நம்மச் சீராட்டிக் கொஞ்சம்
பார்த்து ரசிக்குற தெய்வம்! - அதப்
பாத்துக்கிட்டே குத்தங் கொறசொல்லிப்
படுத்துப் பொரளும் நெஞ்சம்!

அது தெய்வம்! இது நெஞ்சம்!

பேசுறத்துக்கும் ஆச வந்தாப்
பக்கத்துல வரும் தெய்வம்! - பே
ராசைச் சுவத்துல வீட்டக் கட்டிப்
பெரும பேசும் நெஞ்சம்!

நெஞ்சமும் ஒன்னு தெய்வமும் ஒன்னு
உணரும் போது புரியும்! - இந்த
நெஞ்சமும் தெய்வமும் ஆட்டுங் கதையில
நாளும் பொழுதும் விரியும்!!

எது தெய்வம்? எது நெஞ்சம்?

-விவேக்பாரதி
27.02.2018

Comments

Popular Posts