நான் அமரன்

காற்றைக் கிழிக்கும் மர்மச் சத்தம்
காதில் ஏறிப் பாயும் வேளை,
ஊற்றைப் போலென் னுள்ளத் துள்ளே
உவகை பொங்கி ஊறுங் காலை,
வேற்றுக் கிரக வெளிச்சம் வந்தென்
விழியி ரண்டை மேவும் போது
மாற்றுக் கோண விழியில் பார்த்தால்
வந்த தெங்கள் தமிழின் மாது!
அவளாய் வந்தாள் அமுதச் செவ்வாய்
அவிழ்த்தாள் இசையாள் அகத்தை நிறைத்தாள்!
பவளக் கனிவாய் பணிவாய்த் திறந்து
பாடல் புனைந்தாள் பார்த்துச் சிரித்தாள்
தவழும் குழந்தை எனவும் மாறி
தாலாட் டத்தான் கையிற் சேர்ந்தாள்
கவிழும் சடையின் நங்கை யாகிக்
காத லாகிக் காமம் இழைத்தாள்!
தெள்ளத் தெளிந்த சந்தங் கொண்டும்
தேறும் கவிதைத் தெறிப்பைக் கொண்டும்
கொள்ளை இன்பங் கண்ட பெண்ணாள்
குழந்தை என்னைக் குலவ வந்தாள்!
அள்ளக் குறையா அடங்கா முத்தம்
அறிவில் பாய்ச்சிக் கவிஞ னாக்கிக்
கள்ளை மனத்தில் கனல வைத்துக்
கவிதை என்றாள் ஆஹா என்றேன்!
சொல்லற் கறியா சுவையு மானாள்
சொக்கும் மதுவாய்ச் செவியில் தோய்ந்தாள்
வல்லார் நாவில் வாழ்ந்த தேவி
வணங்கும் என்னை வாரி அணைத்தாள்
இல்லா இன்பப் புரியைக் கண்டேன்
இயலைக் கண்டேன் இசையைக் கண்டேன்
எல்லாம் நடத்தி எங்கோ நிறுத்தி
என்கை வருடும் சிறுமி யானாள்
செம்மைத் தமிழை மாந்தித் திளைத்த
செல்வப் பொழுதி லிருந்து சிறுவன்
தும்மும் போதும் துவழும் போதும்
தோன்றும் களிப்பில் துள்ளும் போதும்
விம்மும் போதும் தமிழாய் அமிழ்தாய்
விளையும் வரமே தந்தும் விட்டாள்!
அம்மா தமிழை அணிந்தேன்!
ஆண்டு கடந்தேன் அமரன் நானே!!

-விவேக்பாரதி
28.03.2018

Comments

Popular Posts