செங்கதிர்த்தேவன்

கிழக்கென்னும் திசைக்கிண்ணம் வழியக் கொட்டும்
    கிளர்ச்சிமிகு கதிரொளியாம் மதுவை வானம்
வழங்கித்தான் தானுமுடன் பருகும் கோலம்
    வனப்புடைய கண்களுக்குள் வனப்பைக் கூட்டும்!
விழுகின்றான் எனமுன்னாள் நினைத்த வீரன்
    வியப்பாக மறுபடியும் எழுதல் கண்டோம்!
தொழுகின்றோம் தொழுகின்றோம் இயற்கைத் தேவைச்!
    சோம்பரினால் வீழும்நிலை நீக்கு மாறே!


உயிர்களுக்கு மாதாரச் சுருதி ஆகி
    உயரத்தே தோன்றுகிற வெளிச்சக் கீற்றைக்
கயிறாகத் திரிக்கின்ற கனவுக் கெல்லாம்
    கவிதைதான் மூலதனம்! ஊருக் குள்ளே
வெயிலாகி பனிநீக்கி வெளிச்சங் காட்டி
    வேகமழைப் பொழிவுக்கும் வித்தாய் வாழும்
ஒயிலானைத் தொழுகின்றோம் ஒழுக்கம் என்னும்
    உச்சத்தை நமக்கள்ளிப் பாய்ச்சு மாறே!

தானுமொரு விண்மீனாய் விரிந்தும், அண்டத்
    தண்பரப்பைத் தன்மயமாய் ஆட்சி செய்தும்,
வானிலொரு மன்னன்போல் வளர்ந்து கொண்டே
    வாழ்க்கைக்குத் துணையாகும் சத்தெல் லாமும்
ஆனவரை நாமடையக் கரங்கள் நீட்டி
    அளக்கின்ற செங்கதிராம் சூரி யன்றன்
ஞானநிலை வாழ்த்துகிறோம் எம்மைப் பற்றும்
    நடுக்கங்கள் போகவொளி நல்கு மாறே!

இருளுக்குள் சண்டைகள் இருப்ப துண்மை!
    இருளுக்குள் பொய்வேடம் தரித்த லாகும்!
இருளுக்குள் அறியாமை ஆட்சி செய்யும்!
    இன்னலுக்கு மிருளேதான் நகர மாகும்!
இருளின்றி யாங்கணுமே ஒளியின் பாட்டை
    இம்மென்னும் முன்னாக்கும் புலவன்! மூலப்
பொருளாகி நிற்கின்ற கதிரை நாங்கள்
    போற்றுகிறோம்! மதிமலரை மலர்த்து மாறே!

உழைக்கின்ற மக்கள்தம் கண்ணில் தோன்றி,
    உயர்வுற்ற ஞானியரின் நெஞ்சில் தோன்றி,
இழைக்கின்ற மகளிர்தம் வாக்கில் தோன்றி,
    இதயங்கள் எவற்றுள்ளும் இயல்பாய்த் தோன்றி,
அழைக்கின்ற போழ்துவரும் நேர்மை வீரம்
    அறிவாற்றல் என்றெல்லாம் கதிர்ப ரப்பித்
தழைக்கின்ற சூரியனை வனங்கு கின்றோம்!
    தளையெல்லாம் எம்மண்ணில் விலகு மாறே!

ஆராயும் மக்களுடை அறிவா யாகி
    அன்புடையார் நெஞ்சத்தின் அகலா யாகி
பாராளும் மக்களிடை நேர்மை யாகி
    பண்பாடும் புலவரது வாக்கு மாகி
நீராகி நெருப்பாகி வான மாகி
    நீள்கின்ற மண்ணாகிக் காற்று மாகி
தேராளும் தெய்வத்தைப் போற்று கின்றோம்
    தெளிவெல்லாம் யாம்பெற்றே உய்யு மாறே!

நாமன்றி வேறொன்றும் நம்மை மாற்றா!
    நாமாக நாமிருந்து கடமை செய்தால்
தாமென்றும் உச்சநிலை யடைவோ மென்று
    தரணிக்குக் காட்டவந்த ஆற்றல் ஊற்றைப்
பூமன்றம் புதுப்பிக்கும் புதுமை ஊற்றைப்
    புகழ்கின்றோம் யாம்பெற்ற புனித மெல்லாம்
போமென்று திண்டாடும் புன்மை கெட்டுப்
    புவிவாழ யாம்வாழப் புரக்கு மாறே!!

-விவேக்பாரதி
25.03.2018

Comments

Popular Posts