அழுகையந்தாதி

"கற்றதுகைம் மண்ணளவு" என்ற ஔவையாரின் வெண்பாவை நண்பர் ஒருவருக்குச் சொல்லுகிறேன். அதே வெண்பாவின் மூலம் கைநீட்டி ஔவை என்னைப் பளாரென்று அடித்துத் திரும்புகிறாள். ஓவென்று அழுத கண்ணீர்க் குரல் வாணிக்குக் கடிதம் எழுதுகிறது....


கற்றதுகைம் மண்ணளவாம் கல்லா துலகளவாம்
உற்ற கலைமடந்தாய்! ஔவையெனும் - கற்றாள்
உரைத்துவிட்டாள் யாதிந்த ஊமைதான் கற்றேன்?
உரைத்திடம்மா உண்மை உரு!


உருவற்ற கல்வி உருவாக்கும்! சற்று
கருவத்தை ஆக்கிக் கனலும்! - வருமெந்தப்
போழ்திலும் மௌனமே போக்கெனக் கொண்டுயான்
வாழ்தலும் நின்றன்கைம் மண்!

கைம்மண் ணளவென்றால் கையோ சிறிதெனக்குப்
பொய்ம்மை அழுத்தும் புழுதியிலே - அம்மாவோ
காற்றில் பறந்து கலந்ததுதான் ஏராளம்
ஆற்றில் விழுந்த இலை!

இலைபோல யாரும் இயக்காமல், காற்றில்
அலைமோதும் வாழ்விலா ஆட? - நிலையென்ன
என்றறியா தேகும் எனதுவழி யார்சொல்வார்?
கன்றறுத்த கட்டாயென் கை!

கையளவு மண்ணையான் கற்றதற்கே கர்வப்பேய்
பையவந்து பற்றிப் படர்கிறதே - உயவைக்கும்
வாணி! வழக்காடும் வார்த்தையிலே கர்வமது
நாணி விழத்தேர் நடத்து!

நடத்தும் விதித்திட்டம் நாமறியோம்! மாயை
கிடத்தும் வழியில் கிளர்ந்து - தடமென்று
நாடி நகர்கின்றோம் நானந்தக் கூட்டத்துள்
பாடிக் கடக்கும் பழுது!

பழுதறக் கற்றோனும் பாரிலி்லை! யாவும்
முழுதுறக் கற்றோனும் இல்லை! - பழக்கத்தால்
கொஞ்சம் அனுபவம் கொஞ்சம் அறிவென
விஞ்சி நடக்கும் வியப்பு!

வியப்புக் கிடமாய் வியனுலகம்! எல்லாம்
சுயம்போல் தெரியும் சுழல்நீர்! - பயமொன்று
பற்றாய்ப் பிடிக்கப் படித்த படிப்பெல்லாம்
எற்றைக் குதவும் எழ?

எழுகின்ற போதினிலும் ஏங்கி உழன்றே
அழுகின்ற போதினிலும் ஆற்றி - விழவந்த
கண்ணீர் துடைக்கின்ற கல்வியே நீகொடு
தண்ணீர் கடக்கும்வித் தை!

வித்தைக் கருவத்தில் வீணாசை ஆழியிலே
செத்தை எனவீழுந்து சேருவதோ? - முத்தைப்போல்
தங்கி மௌனத்தே தானொளிரும் துய்யநிலை
எங்கு கிடைக்கும் எனக்கு?

-விவேக்பாரதி
11.03.2018

Comments

Popular Posts