சுகக்காலம்

அந்திவானம் மஞ்சபூசி
அதுவாகக் காத்திருக்க
மஞ்சநெறம் கருத்துப் போக
மேகமெலாம் நீர்சுமக்க
பந்தி போடக் காத்து வந்து
பரிசாகப் பாய்விரிக்க
பக்கோடா வாசம் வந்து
பயம் போல பரவி நிக்க!


இடியோச கொலுசுகட்டி
ஈர மின்னல் நகைபோட்டு
கருமேகப் பந்தலுல
வானத்தையே மறச்சிக்கிட்டு
நடமாடி தாயிவரா
நம்ம மாரித் தாயிவரா
நாத்தொசர நெல்லொசர
நம் பக்கம் பாத்துவரா!

மேக முத்து மாரி வந்து
மேல கீழ நனைக்குறப்ப
தாகமென்ன சோகமென்ன
அத்தனையும் சேத்துத் தண்ணி!
ஓலப்பாயி சலசலப்பு
அதுக்குள்ள இசையிருக்கு!
மழைத்தாயி கொண்டுவரும்
மகிமைக்குத்தான் எல்லையில்லே!

மண்வாசம் வரவேற்க
குளிர்காத்து ஒத்தூத
லேசான வேர்வ தந்து
லாவகமா நொழஞ்சுப்புட்டு
நட்டுவாங்கம் நாயகமா
நடத்துறவ மாரியம்மா!
நத்த ஊறும் மழக்காலம்
நமக்கெல்லாம் சுகக்காலம்!

தவளச் சத்தம் சங்கீதம்
தண்ணி முத்தம் ஆனந்தம்
அட்டப் பூச்சி இலையத்தொட
ஆறு கொளம் கரையத்தொட
மாரியம்மா வரவப் பாத்து
மானம் பாத்து பூமி பாத்து
கப்பல் விட்ட கதையெல்லாம்
கண்ணுக்குள்ள நெறஞ்சிருக்கு!

அடுத்த மழை எப்பவரும்?
அன்னாந்து பாத்தபடி
நின்ன காலம் நெனவிருக்கு
நெஞ்சுலையும் இடியிருக்கு!!

-விவேக்பாரதி
20.03.2018

Comments

Popular Posts