அனுபவங்கள் வேண்டும்

அனுபவங்கள் வேண்டும்! அம்மா
அடியன் கேட்கிறேன்!

பனுவல் நூறு பாடல் கோடி
   படைக்கத் தேவை அனுபவம்!
கனவை நினைவைச் சுமந்து கொண்டு
   கதைக்கத் தேவை அனுபவம்!
இனத்தை மனத்தை யாதென் றறிந்து
   இயம்பத் தேவை அனுபவம்!
புனைந்தி ருக்கும் வேஷம் கலைந்தால்
   புதுக்கத் தேவை அனுபவம்!

கடலுக் குள்ளே முத்தாய்ப் போகும்
   காட்சியும் ஓர் அனுபவம்!
கடல்விட் டேகி விண்ணை நாடிக்
   கார்விட் டிறங்கும் அனுபவம்!
உடனே இரண்டும் வாய்க்கும் வண்ணம்
   உதவு வாயென் காளியே!
அட!நான் பொன்னா பொருளா கேட்டேன்
   அடியன் கேட்ப தனுபவம்!

ஈரச் சிறகை உலுப்பிக் கொண்டு
   இமயம் தாண்டும் அனுபவம்!
பாரம் தூக்கி உணவை உழைத்துப்
   பதுக்கத் தூண்டும் அனுபவம்!
நேர மெல்லாம் பாடிய வண்ணம்
   நேரா யோடும் அனுபவம்!
வாரம் மாதம் ஆண்டு மறந்து
   வாழ்க்கை வாழும் அனுபவம்!

நீதர மாட்டேன் என்றா சொல்வாய்?
   நிச்சய மாகத் தந்திடுவாய்!
தீதர வில்லை என்றால் சின்னத்
   தீப்பொறி யேனும் நீதருவாய்!
ஏதும் கேட்காச் சிறுவன் வாழ
   எல்லாம் இங்கே தருபவளே!
தோதென் றிதனைக் கேட்டேன்! அடைதல்
   தொலைவா யிலையோ சொல்வாயே!!


-விவேக்பாரதி 
04.06.2017

Comments

Popular Posts