காளி கலிவெண்பா



ஒன்றான தேவியை ஓங்கும் மறைப்பொருளின்
நன்றான நாயகியை நான்பாடக் - கன்றாவின்
நாவாடும் ஆவென்னும் நல்ல தமிழ்சொல்லிப்  
பாவாடும் வன்மை படைத்தளித்தாள் - பூவாடும் (4)

கொன்றை சடையானும் கோவிந்தன் நான்முகனும்
நன்றாய்ப் பணியும் நலத்தழகி - மன்றாட
வாயளித்த வல்லி வளர்கொங்கை தாம்போற்றி
தாயளித்த செல்வத் தமிழ்பாடும் - சேயெனக்குச் (8)

சித்தியும் புத்தியும் சீவனார்த்த சக்தியும்
பத்தியும் பாடலும் பல்லறிவும் - முத்தியும்
மும்மைக்கு மிங்கே முகிழாத தன்மையும்
அம்மையே நல்கி அடக்கிடுவாள் - எம்மையும் (12)

வேதம்போல் பாடல் விரைவாய் எழுதவைத்துத்
தீதெம்பால் அண்டாத் திணவுதந்தாள் - போதம்பால்
கற்பனைப்பால் காட்சிப்பால் காணாத தெள்ளரிய
சொற்பதப்பால் ஊட்டிச் சொலிப்புதந்தாள் - முற்பொழுதும் (16)

ஓம்சக்தி என்றே உரைக்கும் இதழ்தந்தாள்
நாம்சக்தி கொள்ளும் நலம்தந்தாள் - ஆம்சக்தி
அண்டபகி ரண்ட அதிசயங்கள் யாவுமிங்கு
விண்டெனக்குக் காட்டி விரித்திதுரைத்தாள் - கொண்டதெலாம் (20)

அன்னாள் கொடையென் றறிவிப்போம் எந்நாளும்
பொன்னா ளவளென்று பூசிப்போம்! - மண்ணாள
ஆசை நெருக்காமல் அன்பில் சறுக்காமல்
பாசம் பிணைக்காமல் பார்த்திடுவாள் - ஓசைக் (24)

கவிபாடி வாழக் கனல்தந்தாள் நல்ல
புவிபாடப் பாட்டாய்ப் புகுந்து - தவிப்பாடி
யாங்கொட்டும் சொல்லாகி யௌவணத் தில்லாகி
பூங்கொப்பு மென்னகையும் பூட்டிநிற்பாள் - தேங்காத (28)

ஞானப் புனலரிய ஞாலத் திடையொழுகக்
கானப் புனலருவி காட்டுவித்தாள் - வானத்
திடலுடைய மாகாளி திக்கணியும் ஈசர் 
இடமுடைய ஆதி இருப்பு - மடலுடைய (32)

செவ்வாழை வண்ணவிதழ் செக்கச் சிவந்தவிழி
கவ்வும் இருட்டுக் கருமைநிறஞ் - செவ்விய
நேர்கூந்தல்! சொல்லில் நெருப்பின் பொறி!சிதறிப் 
போர்க்கூட்டம் கூட்டும் பொலிவிடையாள் - தேர்கூட்டிச் (36)

சிங்கத் தரியனையில் சீறிவரும் சோதிமணிக்
கொங்கைக் கொலுவழகி! கோவிலிலே - மங்கா
விளக்கொளியாய் மூலைதனில் விம்மிச் சுடரும்
இளமனத்தாள் இன்னும் இயம்பி - விளக்கறியா (40)

ஆனந்தப் பாராய் அகிலத்துக் காரிருளாய்த்
தானந்த மான தவவுருவில் - கானென்னும்
நெஞ்சத் திடையுலவும் நேரிழையாள்! அச்சப்பேய்
அஞ்சற் குதவும் அணங்காவாள் - மஞ்சஞ்கொள் (44)

காமக் கழிவகலக் காணும் பிணியகல
ஏமக் கனவே இழைக்கின்றாள் - மாமதனைக்
கண்ணால் அழித்த கடவுள் உடலத்துப் 
பெண்ணாள் நிழலின் பிரியத்தைக் - கொண்டாடி (48)

ஆதிசக்தி அன்னை அருங்கழலில் வாழ்கின்ற
பாதிபுத்தி வேண்டிப் படர்ந்திருந்தால் - நீதியெனும்
தேரேற்றி ஊர்காட்டித் தேறும் வழிகாட்டிப்
பாரேற்றி மீண்டும் படரவிட்டாள் - ஊரேத்திப் (52)

போற்றி இசைக்கும் பொழுதில் கருவத்தைக்
காற்றில் அகிலாய்க் கரைத்திடுவாள்-ஆற்றலென
விஞ்ஞானம் கூறி வியக்கும் உருவத்தாள்
மெய்ஞ்ஞானம் மெச்சுகின்ற மேன்மையினாள் - எஞ்ஞான்றும் (56)

கல்வி அறிவு கவிதை தவநெறிக்குள்
செல்வி அமர்ந்து செழிப்பருள்வாள் - நல்வித்தை
நாயகியை நெஞ்சமெல்லாம் நாட்டியம் ஆடுகின்ற
சாயகியைப் பாடும் சதம்போதும் - மாயவினை (60)
நீக்கும் நிமலை நிகழ்கால விந்தையெனப்
பூக்கும் புதுமலரைப் பூமியினைக் - காக்கும்
குணமுடைய காளியைக் குன்ற விளக்கை
மணமுடைய பூந்தார் மனத்தைத் - துணையெனவே (64)
கொள்ளும் அடியார் குறையகன்ற நல்வாழ்க்கைக்
கள்ளை அடைவார் ககனத்துக் - குள்ளும்
புறமுமாய் நிற்கும் பூரணத்தைப் போற்றி
மறமும் மிகிமையும் மண்ட - அறஞ்செய்து (68)
வாழ்வார்! பிறராசை வாட்டும் நரகிடையே
வீழ்வார்! மறைகள் விரித்துரைக்கும்! - சூழ்வாரை
வெவ்வினை பாயா விதங்காக்கும் காளிபுகழ்
எவ்விதம் சொல்லி எழுதுவது - கவ்விடும் (72)
ஆங்காரப் பூதத்தின் ஆட்டத்தால் நோநொந்து
தாங்கோரச் சீற்றத்தில் தொல்லைபட் - டேங்கிடுவோர்
சாரும் பதில்படியாம் சண்டாள நோயசுரர்
யாரும் பணியும் எரிதழலாள் - வேரடியை (76)
வெல்லப் படித்து வினைதீர நாமங்கள்
சொல்லித் துதிக்கச் சுமையறுப்பாள் - மல்லிகைப்
பூப்பந்தல் புன்னகைக்கும் புத்திளமைப் பீடத்தில்
நாப்பிளந்து கையில் நகங்களுமாய் - வாய்ப்பிழந்த (80)
பொல்லார் தலையும் பொழுதூற்றும் செங்குருதி
வல்லார் வணங்கும் வடிசூலம் - கொல்லாது
தாள்கொள்ளும் ஓரசுரன் தாமொளிரக் காளியவள்
ஆள்கொள்ளும் தீமை அழித்திருப்பாள் - வாள்கொண்டு (84)
நிற்பாள் அனைத்தையும் நீங்கிடுவாள் ஓர்கணத்தில்
கற்பாள் மறுகணத்தில் கற்பிப்பாள் - பொற்பாதம்
மேவும் பதவியெனும் மேலிடத்தை நானடையக்
காவல் இருந்தாள் கவித்திருந்தாள் - ஆவலுடன் (88)
பாடுகின்ற பிள்ளையின் பால்மொழியின் வீச்சினிலே
ஓடுகின்ற தின்னல் ஒளிகொடுத்தாள் - தேடுகின்ற
இன்பமெல்லாம் காளியின்பால் ஈண்டு பெருகக்கண்
டன்பெல்லாந் தீட்டி யளித்துவிட் - டென்னுடல (92)
மாய மகற்றி மறுநொடியே சித்தாந்தச்
சாய உலகதனைச் சற்றுபார்த் - தோய
அரியசித்தி தந்தாள் அனைத்திலும் வேறா
யெரியசக்தி தந்தாள் எழுத்துக் - குரியவளை (96)
மூளை மடிப்பேற்றி மூண்ட சுடருருவக்
காளி வடிவத்தில் கண்டுகண்டு - தோளில்
அவள்தேரை ஏந்தி அகமகிழ்வோம் யாவும்
தவள்தந்த தெய்வத் தமிழ்!! (100)

-விவேக்பாரதி
29.03.2018

Comments

Popular Posts