அவள் பொக்கிஷம்

அவள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருந்த செல்லப் பெட்டிக்குள்ளே எட்டிப் பார்க்க எனக்கும் சுப்புவுக்கும் எப்போதும் ஆசை...எனினும் அந்த சுருக்கம் சுமந்த தாய்க் கிழவி திறந்து காட்டிவிடவும் இல்லை, எங்கள் கண் முன்னே அதைத் திறந்து திறந்து எதையோ பார்த்து மெல்ல புன்னகைப்பதை நிறுத்தவும் இல்லை...ஆர்வமோ அடக்க முடியாக் காட்டாறாக... நாங்கள் மிதக்காமலும் தப்பாமலும் தொங்கிக் கொண்டிருந்தோம். "எப்படியாவது அதன் ரகசியத்தைப் பார்த்தே ஆகவேண்டுமடா அப்பு" என்று சுப்பு என்னிடம் அடிக்கடி கூறுவது கண்ணன் அர்ஜுனனுக்கு சொன்ன மனப்பாடப் பாடல் போல இருந்தது...எப்போது அவள் நகர்வாள் ? எப்போது இரும்பரண் தகர்ந்து போகும் ? என்று காத்திருந்த கண்களுக்கு அன்று கிடைத்தது நேரம்...அவள் இத்தனை நாளும் பொத்தி வைத்திருந்த செல்லப் பெட்டியை மறந்து வைத்துவிட்டு பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியைப் பார்க்கப் போயிருந்தாள் கிழவி ! "இதுதான் சந்தர்ப்பம்!" என்று எங்கள் ஆறு வயதின் மூளை, அப்போதே ராணுவத் திட்டங்களெல்லாம் தீட்டிக் கொண்டு அதை மெல்லத் திறந்து பார்க்க விரைந்தது...ஏழடுக்குப் பாதுகாப்பு வெற்றிலையினாலும் இதர பல அறியாத பொருட்களாலும் மூடப் பட்டிருந்த அந்த பொக்கிஷத்தை ஒவ்வொரு நிலையாகக் கடந்து காத்திருந்த தரிசனம் கிட்டியதும் சீ...இதுதானா என்றானது எங்களுக்கு.....

இருபது வருடம் கழித்து, அந்தப் பெட்டியில்... அப்போது கடைசியாக எங்கள் களத்து மேட்டில் கோவணத்துடன் நின்றிருந்த தாத்தாவை அப்பா எடுத்த ஆவணப் படத்தையும் அவர் கையில் வலம் வந்த செம்புக் காப்பையும், இப்போது கண்டதுபோலவே நினைத்துப் பார்க்கிறேன்...என்னவள் குடித்து வைத்த கொக்கோ - கோலா டின்னை எடுத்த கையனாய்....

"பொழுதுகள் மாறலாம்...பொக்கிஷங்கள் மாறுவதில்லை..." 

-விவேக்பாரதி 
22.06.2017

Popular Posts