அப்துல் கலாம் ஒருபா ஒருபஃது

தானாய் உதித்துத் தரணி முழுவதும் 
வானாய் வளர்ந்துன்றன் வாக்காலே - காணாத 
மாற்றங்கள் செய்ய மனக்கனவு கண்டவனே !
ஏற்றுகின்றோம் உன்னை எடுத்து ! 

எடுத்த பிறப்பும் எதற்கென்(று) அறியா(து) 
உடுக்கை உறக்கம் உணவென்(று) - இடர்க்குள் 
வாழும் மனிதரிடை வந்த விடிவெள்ளி 
தாழும் உமக்கெம் தலை ! 

தலையில் அறிவேற்றித் தண்மை மனத்தில் 
நிலையாய் நிறுத்தி ! நிஜமாய்க் - கலைகாட்டி 
நாட்டையும் நாட்டுமக்கள் நம்பிக்கை யும்வென்ற 
பாட்டையைச் சொல்லுமெம் பாட்டு ! 

பாட்டுக்கும் கூத்துக்கும் பாழும் இளைஞர்குலம் 
நாட்டத்தைக் காட்டி நலிகையிலே - ஈட்டிமுனை 
ஏவுகணை காட்டி அறிவியலில் நாட்டத்தை 
மேவு(ம்)வகை செய்தவினை மேல் ! 

மேல்வானை ஆண்ட மெலிவான மாந்தர்கள் 
சூல்கொண்ட விண்ணின் சுடராள - நூல்கொண்ட
நுண்ணறிவால் பல்வித்தை நல்கி நகர்ந்தாயே 
பண்ணறிவும் கண்டோம் பணிந்து ! 

பணிவே மனங்கொண்டாய் பாசமே வீசும் 
குணமே உடையாய் குலையா(து) - அணிசேர்த்(து) 
அழியா வலிமையுடன் அக்னிச் சிறகை 
எழிலாய் விரித்தாய் எழுந்து ! 

எழுப்பிக் கனவை எழிலாகக் காண 
முழுதாய் எமையே முடுக்கி - விழுந்தால் 
விதையென்(று) உரைத்து விசைதந்து சென்ற 
கதைசொல்லும் எங்கள் கனவு ! 

கனவென்று பல்லோர் கதைசொன்ன போது 
மனமொன்றும் ஒன்றே கனவாம் - தினமதைக் 
கண்டு களிப்பெய்தக், கண்ட கனவடையக் 
கொண்டு கொடுத்தாய்தீக் கோல் ! 

கோலேந்தி நில்லாத கோமகன்நீ ! அன்பென்னும் 
பாலேந்தி நின்ற பரிவுத்தாய் ! - நூலேந்தி 
நல்வழிச் செல்ல நடத்துகின்ற ஆசிரியன் 
இல்லா நிலையால் இறை ! 

இறைவனே எங்கள் இயந்திரனைக் கொண்டு 
நிறைவேநீ கண்டிருப்பாய் நித்தம் ! - குறையில்லை 
வாழைமரம் சென்றாலும் வந்திருக்கும் கன்றுகளும் 
தாழா(து) உயர்ந்துவரும் தான் ! 

-விவேக்பாரதி
27.07.2017

Popular Posts