மதிக்கும் முடிவு

நீந்துகின்ற வெண்ணிலா
   நீ வரைந்த பொம்மையோ ?
பூந்தளிர்கள் வாசனை
   பூத்ததுன்றன் பெண்மையோ ?
ஏந்துகின்ற காதலை
   எழுதி வைத்துச் செல்லவோ ?
மாந்துகின்ற வண்டு நான்
   மலர்கள் நீயிங் கல்லவோ ?

வலிகளை மறைக்கவோ ?
   வார்த்தையில் சிரிக்கவோ ?
நலமிழந்த நாடுபோல்
   நல்லதாய் நடிக்கவோ ?
குலமுயர்த்தக் காதலைக்
   குப்பை தன்னில் கொட்டினோம் !
உலகில் நம்மைப் போலயார் ?
   உளறு கின்றேன் அல்லவோ ?

இரவு குத்தி சாகிறேன் !
   இதயமற்று போகிறேன் !
மரணம் தொட்ட வேதனை
   மனதில் எங்கும் காண்கிறேன் !
நிரம்புகின்ற நெஞ்சிலே
   நினைவுத் தீயில் வேகிறேன் !
வரவழைத்த துன்பத்தை
   வாழ்க்கையில் சுமக்கிறேன் !

நான் வளர்த்த காதலை
   நான் புதைக்க நேர்வதோ ?
தேன் வளர்த்த பூக்களைத்
   தேள்கள் கொட்டிச் சாய்ப்பதோ ?
ஏன் எதற்குக் காதலோ ?
   ஏன் எனக்கும் நேர்ந்ததோ ?
ஊன் கிழிக்கும் பிரிவினை
   உயிர் கிழித்துப் போவதோ ?

யாரை நானும் சாடினேன் ?
   யாதை நோக்கி ஓடினேன் ?
போரையா விரும்பினேன் ?
   போதையா இக் காதலும் ?
மாரை விட்டு ஜீவனும்
   வானம் நோக்கிப் பாயுதே !
கோரமான காலந்தான்
   கோலச் சிரிப்பில் துள்ளுதே !

என்னையே எரிக்குதே
   என்னை விடவும் மென்மையாம்
உன்னை என்ன செய்யுமோ ?
   உணர்வில் ஊசி நெய்யுமோ ?
புன்னகையின் வாசனை
   புத்தி மறந்து போனதே !
என்னையே வெறுக்கிறேன்
   எதனையோ இழக்கிறேன்!

பிரிவினை மதிக்கிறேன் !
   பிரிவிலே தவிக்கிறேன் !
கருதுகின்ற முடிவினால்
   காதலை மறைக்கிறேன் !
உருகுகின்ற நெஞ்சினை
   ஊமை ஆக்கி வைக்கிறேன் !
வருவதைப் புதைக்கிறேன் !
   வலிகளைக் கரைக்கிறேன் !

நினைவுக் கத்தி குத்திய
   நிஜங்களைத் துடைக்கிறேன் !
புனையுகின்ற வேஷத்தால்
   புத்தியை மறைக்கிறேன் !
மனதினை உரைக்கிறேன் !
   மலையைப் போல் பிடிக்கிறேன் !
எனையும் தேடித் திரிகிறேன் !
   எழிலையே வெறுக்கிறேன் !

அழுது தீர்ந்த கண்களை
    ஆழ்ந்து வீழ்ந்த நெஞ்சினைப்
பழுதுபட்ட அறிவினைப்
   பாசம் பட்ட கைகளை
எழுத வைத்த ஆசையை
   எனக்குள் வாழும் காதலை
முழுதுமாய்த் துறக்கிறேன்
   மூச்சினை மறக்கிறேன் - நம்
   முடிவினை மதிக்கிறேன் !!

-விவேக்பாரதி
14.07.2017

Popular Posts