சுகநிழல்

துயர்வந்து தூக்கத்தைத் தூரமாக்கும் போது
      தூங்குதற்கு இடமேதடி
  துஷ்டனைப் போல்வந்து நினைவென்னும் வேல்பாயத்
      தூங்கிடற்கு இடமேதடி ?
அயர்வான கண்ணோடும் அன்பான விரல்தேடி
      அலைகின்ற நெஞ்சினோடும்
  அழுதேங்கி வாழ்கின்ற இரவென்னும் மரணத்தில்
      அமைபெறும் வழியேதடி ?
கயலாடும் ஜாடியாய்க் கனவேந்தும் மூடியாய்க்
      காலங்கள் போக்குகின்றேன்
  கனியான நெஞ்சோடு கல்லடிகள் பட்டதால்
      காயத்தில் வாடுகின்றேன் !
பயமென்ன உன்னிடம் பகர்தற்கு, நானென்றன்
      பாதியை இழந்தேனடி
 பக்குவம் கண்டிடும் வழிதேடி வழிதேடிப்
      பாதையை இழந்தேனடி !

உள்சொல்லும் அர்த்தத்தை உணர்வோடு சொல்கையில்
      உயர்வெனக் கருதுவாயோ ?
  ஊமையென் நெஞ்சுக்குள் மூழ்கின்ற போர்களை
      உன்னதக் கவியெனன்பாயோ ?
கள்கூட வெள்ளையே கவலையில் கதறிடும்
      கவிகூட அழகாகுமோ ?
  கண்ணீரைச் சொல்லாக மொழிபெயர்க்கும் கவிஞன்
      கதறல்கள் இசையாகுமோ  ?
முள்ளொன்று நெஞ்சத்தை நோகப்பதம் பார்த்து
      முழுவலியைக் காட்டும்நேரம்
  மூச்சோடு கண்ணீரை நானும் அடக்கியே
      முடியாமல் வாழுகின்றேன் !
சுள்ளென்ற கொடுவெய்யில் சுட்டதைப் போலவே
       சுற்றிலும் தேடுகின்றேன்
  சோகத்தைப் போக்கவும் கேட்கவும் நானொரு
       சுகநிழல் தேடுகின்றேன் !!
-விவேக்பாரதி
31.07.2017

Comments

Popular Posts