காலப் பெண்

என்னை அலையவைத்துச் சிரிப்பதென்ன – அடி
   எங்குந் திகழ்கின்ற காலப்பெண்ணே !
உன்னைப் புகழ்வதன்றி இந்தச்சிறுவன் – எழில்
   ஊறுஞ் சொல்வேறு சொல்லியதுண்டோ ?
மின்ன லெனப்போகும் காலப்பெண்ணே ! – எனை
   மீட்டி இயக்கிடுவை காலப்பெண்ணே !
சின்னஞ் சிறுவனென நானிருப்பதால் – உன்னில்
   சிக்கி உழல்கவென நீவிடுப்பதோ ?

எத்த னைதூரம் செல்லவைக்கிறாய் – சின்ன
   ஏழைக் குடலலுப்பை நீயளிக்கிறாய்
பத்துப் பதினைந்து மைல்நடக்கிறேன் – எனைப்
   பார்த்திங் கமர்ந்தபடி பரிகசிக்கிறாய் !
நித்தம் உனைக்கேட்ப தொன்றுமட்டுமே – வழி
   நீளம் குறைக்கும்வழி தந்துசென்றிடு
பித்தைத் தீர்க்கவழி எண்ணுவையெனில் – கவி
   பீறிட் டெழும்வேகம் நீவழங்கிடு !

காற்றைக் கவியாக்கிக் காலம்கழிப்பேன் – அடி
    காக்கை ஒலியினிலுஞ் சந்தம்பிடிப்பேன்
நேற்றை இன்றாக்கி நாளைவகுப்பேன் – இந்த
   நெஞ்சம் தூங்கும்வரை பாடல்படிப்பேன் !
ஆற்றல் அறிவென்று பேசிக்களிப்பேன் – என்றன்
   அம்மை முகஜாலம் சொல்லிரசிப்பேன்
போற்றி உனைச்சொல்லி வாழ்த்தையொலிப்பேன் – பெரும்
   போதந் தருகின்ற வார்த்தைபடைப்பேன் !

-விவேக்பாரதி
23.06.2017

Popular Posts