வெற்றி வாசகம்

எதுதான் உலகில் நிரந்தரமோ - நாம் 
   எதனைத் தேடி அலைகிறமோ ? 
எதுதான் முடிவோ விளையாட்டில் - யார் 
   எழுதி வைத்தார் தலையேட்டில் ? 

வானம் வெளுக்கத் துவங்கியதும் - நம் 
   வாழ்க்கை துவங்கி விட்டதென 
மோனம் நீங்கி ஓடுகிறோம் - வெறும் 
   மோனம் கலைப்பதுவா வாழ்க்கை ? 

யாரோ சொல்ல நாம் கெட்டு - வழி 
   யாவும் கண்டோம் என்கின்றோம் !
ஊரோடு அவ்வழி போகின்றோம் - பிறர் 
   உருவாக்குவதா நம் மார்க்கம் ? 

செல்வம் கொஞ்சம் சேர்ந்துவிட்டால் - நாம் 
   செழித்து விட்டோம் என்கின்றோம் 
நில்லாப் பணமா நம் செல்வம்? - ஒரு 
   நிலையில்லாமை செழிப்பாமோ ? 

தலை தான் நரைத்து விட்டாலே - அவர் 
   தளர்ச்சி கண்டார் என்கின்றோம் ! 
மலைக்கும் நரைக்கும் மேகத்தால் - அம் 
   மயக்கம் கூடத் தளர்வாமோ ? 

வாழ்க்கை யாதென்று அறியாமல் - இவ்
   வழியில் எங்கு ப்ரயத்தனமோ ?
வாழ்ந்து முடிக்கும் கணத்தில் தான் - இதன் 
   வாய்மை என்பது புலப்படுமோ ? 

நம்மை நாமே நேசிக்க - வரும் 
   நன்மை மட்டும் சுவாசிக்கப்
பொம்மை போலே இருந்தாட - மனப் 
   பொய்மை அகற்றி உறவாடக் 

கற்றுக் கொள்ளப் பார்ப்போமா ? - இல்லை 
   கடைசியில் போய்த் தோற்போமா ? 
வெற்றுத் தாளாம் உடல் மேலே - பெரும் 
   வெற்றி வாசகம் பதியாதா ?

-விவேக்பாரதி 
08.07.2017

Popular Posts