பொற்புரம்

பிரதோஷக் கவிதை

பொன்னிறச் சடையி னானைப்
   பொலிவுடை மேனி யானை
நன்னிலா வொன்றைத் தாங்கும்
   நச்சர வணிந்து வாழும்
வன்மைசேர் தோளி னானை
   மங்கையின் பாதி தாங்கும்
மன்னனை வாழ்த்திப் பாடி
   வாழ்ந்திடு வாயென் நெஞ்சே! 

நெற்றியில் நீறு பூசி
   நெஞ்செலாம் அவனை எண்ணி
ஒற்றிடத் தாள்கள் உண்டு
    உறைவிடம் கோவில் என்று
சுற்றமும் பகையும் நீங்கிச்
   சுகத்துடன் நீடு வாழப் 
பற்றிலான் தாள்கள் பற்றிப்
   பாதையைக் காண்க நெஞ்சே!

உடுக்கையும் செண்டை மேள
   ஓசையும்! புலியின் தோலில்
படுக்கையும் மேனி தோயப்
   பூசிய நீறும் துள்ளும்
இடக்கையில் மானும் அன்பர்
   இடரறப் பிடித்தான் பாதம்
பிடிப்பதை அறிந்து கொண்டு
   பிழைத்திடு வாயென் நெஞ்சே!

கனல்விழி ஒன்று முண்டு
   கருணையின் வழியாய்ப் பார்க்கும்
புனல்விழி அவையும் உண்டு
   புலன்வழி அடையும் பாவம்
மனவழி அடையும் காமம்
   மற்றுநம் துயர மெல்லாம்
வனவழி முன்னம் தீர்ப்பான்
   வடிவினைப் பேசு நெஞ்சே! 

நாற்புறம் எட்டு கால்கள்
   நகர்ப்புறம் விட்டு நீங்கி
ஊர்ப்புறம் கொண்டு செல்லும்
   ஒருபொழு தாகு முன்னம்
வேர்ப்புரம் ஆன ஈசன்
   வேந்தனைப்  பற்றி வாழ்ந்தால்
போர்ப்புரம் நீங்கப் பெற்று
   பொற்புரம் அடையு வாயே!!


-விவேக்பாரதி
02.02.2019

Comments

Popular Posts