அவர் இருப்பார்!



தோழனாய் வந்தவர்! தோள்கொட்டி நின்றவர்!
வாழடா என்றுநமை வாழ்த்திக் கிடந்தவர்!
ஆசிரிய ராகவும் அறிவினைத் தந்தவர்!
பேசுதற் கெளியவர்! பேணும் பண்பை
யாருக்கும் எப்போதும் இழக்காத் தைரியர்!
வேருக்கு நீர்போல வெற்றிகள் சேர்த்தவர்!
சூழ்ந்திடும் மூடரின் சுவையிலாப் பேச்சிடை
வாழ்ந்திட உயர்க்கல்வி வளரக் கொடுத்தவர்!
நேர்மையும் உண்மையும் நெஞ்சினில் அன்புமாய்
ஊரிகழக் கேட்டாலும் உற்சாகம் மிக்கவர்!
வார்த்துதம் அறிவினை வழங்கி மகிழ்ந்தநம்
பார்த்தசா ரதியெனும் பல்கலை வித்தகர்
வேலியாய் நின்றவர் எம்மிடை இன்றிலை
காலமா னாரெனும் கலக்குறும் செய்தியெம்
நெஞ்சை நிறுத்தி நெருப்பள்ளிக் கொட்டியே
நஞ்சினை உண்ட நடுக்கம் விளைத்ததை
எங்ஙணம் சொல்லுவோம்? எப்படி மீளுவோம்?
இங்ஙணம் இவ்விடம் இவராண்ட கணினித்தளம்
எப்படி மாற்றுவோம்? எப்படி மாறுவோம்?
எப்படி இறைவனே எங்களைத் தேற்றுவோம்?
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகென நகைக்கிறாய்!
ஆசான் விலகினும் அறிவு தடம்மாறா!
நேசம் மாறா! நெஞ்சுறுதி தான்மாறா!
நினைவு மாறா! நிகழ்ச்சிகள் கலையா!
கணினிப் பொறிக்கல்வி காட்டிய மேதை
இனியெம் கலைவழி அறிவு வழிவாழ்வார்!
நிலையாமை தந்தி சிரிக்கும் நிஜமே!
கலையாமை கொண்ட கனவுடையோர் அழுகின்றோம்!
கண்ணீர்த் துளிமட்டும் கஷ்ட்டம் மனத்திருக்கும்!
எண்ணம் உளவரைக்கும் எம்மோ டிவரிருப்பார்!! 


அழுகையுடன்
விவேக்பாரதி
09.02.2019

Comments

Popular Posts