மனம் மனிதன் மனு



வாருங்கள், வணக்கம் என்று வந்ததும் புன்னகை தவழ வரவேற்கும் ஓலா அல்லது ஊபர் ஓட்டுநரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்றாவது சந்திக்க நேர்ந்தால் அது அவராகத்தான் இருக்கும். கருத்த, மெலிந்த உடல், கம்பீர மீசை, கருணை தவழும் கண்கள், மனம் போல வெளுத்த ஆடை என்று அனைத்து லட்சணங்களும் பொருந்திய ஒரு ஓட்டுநராக அவர் தென்படுவார். அவசரம் என்றால் எங்கே வாகன நெரிசல் குறைவு என்பதை அறிந்து, அவருக்கு மிகவும் சுற்றான பாதை என்றாலும் கொண்டு சேர்க்கும் வல்லவராக, சில சமயங்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் பயணச் செலவில் சில காசுகள் குறைந்தால் "அட பரவால்ல, இருக்குறத கொடுங்க" என்று அவர் நம் வண்டியில் ஏறியது போலப் பாசமாய்க் கேட்கும் நல்லவராகவும், எந்த இடத்தில் அவருக்கு வந்து சேரும் பயணக்கார எஜமானர்கள் துன்புறுத்தினாலும், வற்புறுத்தினாலும், இன்பம் தந்தாலும் தன்னிலையை மறக்காத, துறக்காத ஒரு சித்தநிலை உள்ளவராகவும் அவர் காணப்படுவார். அவரது திருப்பெயர் எதுவாக இருப்பினும் கவலை இல்லை என்று நான் அவருக்குச் சூட்டியிருக்கும் சிறு பெயர் மனு”. இந்த மனு என்ற சொல்லும் அவரது வாயிலிருந்தே தான் எனக்குக் கிடைத்திருக்குமோ என்று எனக்கு நினைவில்லை, ஆனால் அவருக்கு இப்பெயர் சாலப் பொருத்தம். மனிதனை மனிதனாய்ப் பார்க்கும் மனுதர்ம சாத்திரம் தொடங்கி, பாரதிதாசன் பாரதியார் தன் கவிதைகள் அரசியல் வேதாந்தம் என்று எல்லாம் பேசுவார். இடையூறோ தடையோ நீங்கள் சொல்லவே முடியாது. அவ்வளவு எளிமையும் வசீகரமும் அந்தச் சின்ன உடலிலிருந்து வரும் கம்பீரக் குரலுக்கு எப்படித்தான் அருளினாளோ வாணி என்று எண்ணத் தோன்றும். எப்படி கோவலன், கண்ணகி, இராமன், அனுமன், சீவகன், தத்தை, கன்னன், அருச்சுனன் போன்றவர்கள் இலக்கியவாதிகளோ (இலக்கியத்துள் பேசப் படுபவர்களும் இலக்கியவாதிகள் தானே) இந்த மனுவும் ஓர் இலக்கியவாதி. இவர் படித்த, படைத்த இடம் பிடித்த இலக்கியம் மனித மனங்கள், சில சமயங்களில் அவரவர் குணங்கள்.

"நான் ஒரு நாளைக்கு அம்பது பேருக்கு மேல சந்திக்குறேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு குணக்காராங்க தம்பி! ஆனால் எல்லாரும் எதோ ஒரு விதத்துல அவசரக் காரங்க." என்று திருக்குறள் அளவில் விளக்கம் கொடுத்த மனுவின் மதியை எண்ணி வியக்கலாம். "அதையெல்லாம் நானும் எழுதனும்...ஒரு புஸ்தகமா போடனும்! ஆனா ஆரு தம்பி படிப்பா? எனக்கே படிக்க நேரமில்ல!" என்று ஆசையை வெளிப்படுத்தியவர் பேச்சுவாக்கில் பின்னர் சொன்னது அவர் எம்.சி.ஏ பட்டாதாரி என்பதை.

"வர்றவனெல்லாம் ஏதோ வண்டி ஓட்டுறவன் கிராமத்துலேந்து குதிச்சா மாதிரி பாப்பானுங்க, அவனுங்க தான் என்னமோ வானத்திலேந்து வந்தது மாதிரி பன்னுவானுங்க. கொடுக்குற முந்நூறு நானூறு ரூவா காசுக்கு ப்ளைட்ல போற மாதிரி சொகுசு கேப்பானுங்க" என்பது போன்ற சாதாரண பழிசொல்லல்களில் தொடங்கும் அவரது ஒவ்வொரு சிற்றுரைக்குள்ளும் ஒரு கதை உண்டு.

"இப்டிதான் தம்பி ஒருநாளு ஒரு கஸ்டமர் வந்தாரு! அவரு அவங்க அம்மா அவங்க சம்சாரம் எல்லாம் வண்டில ஏறுனாங்க! வந்தவரு இந்திக் காரரு. 'ஏ காடி பஹுத் கராப் ஹே!' மேன் தூஸ்ரா காடி புக் கியா ஹோகா!' அப்டின்னாரு...அதாவது இந்த வண்டி மோசமா இருக்காம்...அவரு வேற வண்டி புக் பன்னி இருப்பாராம். இதுல எனக்கு இந்தி தெரியாதுன்னு நெனச்சிக்கிட்டு என் வண்டியப் பத்தியே பேசிகிட்டு வந்தாரு. நான் தான் என்னமோ ஒருலட்சம் ரெண்டு லட்சம் காசு வாங்கிட்டு அவருக்கு ஓட்ட கார குடுத்த மாதிரி தன்னோட புது பொண்டாட்டி கிட்ட பேசிட்டே வந்தாரு...அவர் வழிஞ்ச லட்சணமே இப்ப தான் கல்யாணம் ஆயிருக்கு ன்னு காட்டிடுச்சு. நான் பொறுமையா ஒன்னுஞ் சொல்லாம வண்டி ஓட்டிக்கிட்டே இருந்தேன். அவங்க அம்மா திடீருன்னு நாம் எங்க போய்க்கிட்டு இருக்கோம், இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்ன்னு இந்தில கேட்டாங்க, நான் பட்டுன்னு சைதாப்பேட்ட தாண்டி போய்ட்டு இருக்கோம். இன்னும் அர மணி நேரம் ஆகும்ன்னு இந்தில சொன்னேன். ஒடனே என் பக்கத்துல ஒக்காந்திருந்த மனுஷன் வெடவெடத்துப் பொய்ட்டாரு...'அட இவருக்கு இந்தி தெரியும் போல இருக்கே...பேசாம வா பேசாம வா ன்னு சொன்னா கேட்டியா?' ன்னு அவங்க அம்மா சொன்னதும் அவரு அமைதி ஆய்ட்டாரு. அப்றம் அவங்க எறங்கிப் போனதும் அவருகிட்ட 'சார்! அடுத்தவங்கள கேவலப்படுத்தி சந்தோஷம் ஆகாதீங்க சார்! எனக்கும் இந்தி தெரியும்! என் முன்னாடி என் வண்டிலயே ஒக்காந்துகிட்டு அதப் பத்தியே எகத்தாளமா பேசுறீங்க! வீ ஆர் ஆல்சோ ஈக்வலி எட்யுகேட்டட் டு அண்டர்ஸ்டாண்ட் வாட்டெவர் யு டாக். ப்ளீஸ் மைண்ட் யுவர் வர்ட்ஸ் அண்ட் சேஞ்ச் யுவர் ஆட்டிட்யூட்'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்." என்று அவர் சொல்லிச் சிரித்த அசட்டுச் சிரிப்பில் ஒரு கணம் இறைவனின் கலை தாண்டவமாடியது.

எத்தனை முறை ஆனாலும் அவர் அடிக்கடி சொன்ன ஒரே வசனம், "இதெல்லாம் ஒரு புத்தகமா எழுதனும் தம்பி! அப்பத்தான் மக்களுக்கு எங்க மனநிலையும் புரியும்!" என்பதே. இப்படி ஒரு பொது மனப்பான்மை கொண்ட மனுவை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்தால் என் போலவே நீங்களும் பேறு பெற்றவர் ஆகலாம். அவர் நட்பு அப்படிப் பட்டது.

ஓலா அல்லது ஊபர் ஓட்டுனர்களைச் சந்திக்காமல் உங்கள் சென்னை பயணமோ வாழ்க்கையோ கண்டிப்பாக முழுமை அடையாது. தெருப்பிள்ளையார்களை விட தற்போது சாலைகளை அதிகம் தன்வயப் படுத்துவது மஞ்சள் பலகை பொருந்திய வண்டிகள் தாம். ஒவ்வொரு ஓலா அல்லது ஊபர் பயணமும் ஒவ்வொரு அனுபவத்தைத் தரும். சில கசப்பு, சில இனிப்பு, சில அறிவுசார்ந்து, சில தொல்லையாக இப்படிப் பல்வேறு முகங்களை இத்தகு நவீன வாடகை மகிழுந்து வாழ்க்கையில் நாம் பார்க்கக் கூடும். ஆனால் இத்தகு அனுபவங்களில் ஒருவராக மனுவை நம்மால் விட்டொதுக்கிவிட இயலாது. நேரம் கடந்துகொண்டே சென்றது, அவரது வாழ்க்கை வழக்கங்களிலிருந்து கீதோபதேசம் எஃபெம் ரேடியோவைப்போல் வழிந்து கொண்டே இருந்தது. திடீரென்று கவிதை சொல்வார். காலத்தின் மாற்றத்தால் மனித மனத்தின் பரினாமம் பற்றி பேசுவார். திரைப்படங்களின் தோல்விகளையும் குறைபாடுகளையும் ஆராய்வார். ஆனால் இத்தனைக்கும் அந்த மகிழுந்து என்னும் நகரும் ஒண்டிக் குடித்தனத்தை விட்டு ஒருபோதும் விலகாத சாதாரணன். சடாலென்று ஒரு மின்னல், திருமூலரையும் பாரதியையும் காட்டி மறைந்தது. நானறிந்த வரையில் இருவரும் ஓரிடத்தில் அமர்ந்தே உலகப் பார்வை கண்டவர்கள். மனுவை அவ்விடத்திற்குத் தாராளமாக உயர்த்தலாம். பேசிக்கொண்டே செல்கையில் இடையில் இன்னொரு பயணி ஏற வேண்டிய சூழ்நிலை வந்தது. பொதுவாக நான் சென்ற, செல்லும் ஓலாக்களின் ஓட்டுநர்களுக்கு நானே அழைத்து, என் இடத்தையும், அடையாளங்களையும் சொல்வது வழக்கம். நானே வலிய அழைத்துச் சொல்வதற்கு ஒரு காரணமும் உண்டு. அந்தக் காரணத்தையும் மனுவே சொல்வார். “இந்த மாதிரி பிக்கப் வந்தா பட்டுனு கால் பன்னி முடிஞ்ச அளவுக்கு நம்மளே அவங்க லொக்கேஷன தெரிஞ்சுக்குறது தம்பி! செல பேரு மதிச்சு சொல்லுவாங்க, செல பேரு மேப் பாத்து வாங்கன்னு கட் பன்னிடுவாங்க, ஓட்டுறவனும் மனுஷன் உக்காந்து போறவனும் மனுஷன். ஒருத்தருக் கொருத்தர் ஹெல்ப்பா இருந்தாலே போதும் கண்ணுஎன்றார். ஓட்டுபவரும் மனிதர், செல்பவரும் மனிதர், நம்மால் இயன்றவரை அவரை அலையவிடாமல் குழம்ப வைக்காமல் தெளிவான பயணத்தைப் பயணிக்க வேண்டும் என்று என் எண்ணம் அதனையே அவரும் சொல்லக் கண்டு ஒருகணம் திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன்.

பார்த்த கணத்தில் அவரும் என்னைப் பார்த்து, “இதான தம்பி நீ எறங்கவேண்டிய எடம்?” என்றார். அவர் அடித்த ப்ரேக்கில் ஒரு இடி விழுந்தது. நெடுநாள் பழகிய கல்லூரி நண்பனை விட்டுப் பிரிந்த போது ஏற்பட்ட இடியின் நகல் அது. தாங்கிக் கொண்டு பர்ஸ்ஸைத் துழாவினேன். கொடுக்கவேண்டிய தொகையை விட பத்து ரூபாய் குறைவாக இருந்தது. வீடு வரை வந்தால் கண்டிப்பாகக் கொடுத்துவிடுகிறேன் என்றேன். "இந்தச் சந்துக்குள்ள வண்டி போகாது தம்பி...ஒண்ணும் பிரச்சன இல்ல நீங்க அடுத்த முறை கொடுங்க..." என்றதை என்னிடமும் சொல்லிவிட்டு இருப்பதை வாங்கிக் கொண்டு கிளம்பினார். கார் சாலையில் விருட்டெனப் பாய்ந்ததில் கொஞ்சம் புழுதி பறந்தது. அதன் தூசில் எங்கள் நினைவுகள் அப்படியே.

Comments

Popular Posts