விளம்பிடும் பலகை


ஆள்நடமாட்டம் அதிகமிருக்கும் 
அரசாங்கத் தெரு ஒன்றில் 
ஒரு விளம்பரப் பலகை வைத்தேன்!

நானும் வெறும் பலகையும் 
போதுமென்ற போதினும் 
பழக்க தோஷத்தில் 
சில வார்த்தைகள் எழுதிப் போட்டேன்! 

சொந்தமாய் உலகம் இல்லாதவர்கள் 
காதலிக்க வர வேண்டா
சொல்லைச் செயலாய் மாற்றுபவர்கள்
காதலிக்க வரவேண்டா! 

கண்ணீரோடு பழகிய நபர்கள்
காதலிக்க வர வேண்டா 
கவிதை எழுதிப் புலம்புபவர்கள் 
காதலிக்க வரவேண்டா! 

தான் எனும் அகந்தை 
தெரியாதவர்கள்
காதலிக்க வர வேண்டா! 
தனக்குள் மறைக்க 
அறியாதவர்கள் 
காதலிக்க வர வேண்டா! 

வார்த்தைகளை ரசிப்பவரா?
அனுபவங்களைச் சுவைப்பவரா?
நிச்சயம் 
காதலிக்க வர வேண்டா! 

மறக்கத் தெரிந்த மனங்கள், 
சிரிக்கப் பழகிய உதடுகள்
சினத்தைத் துறந்த குணங்கள்
சீக்கிரம் விலகும் நினைவுகள்
இருந்தால் மட்டும் 
காதலிக்க வரவும்!

ஆட்கள் தேவை என 
அறிவிப்பை எழுதியதும் 
வலிப்பலகையாய் இருந்த 
வாசகப் பலகை கூட 
வர்த்தகப் பலகையானது! 

கையில் காசும் 
நெஞ்சில் வலியுமாய் 
நான் அதே தெருவில் நிற்கிறேன்! 
அடுத்த வாசகத்திற்கு 
அட்சரம் கோத்தபடி!! 

-விவேக்பாரதி
20-02-2019

Comments

Popular Posts