மனமே நீ மலர்

ஒருபொருள் மீதே லயித்தி ருந்தே
    உளையாதே மனமே! - நீ
ஒவ்வொரு நாளும் ஒவ்வொன் றாகியும்
    உருளாதே தினமே!
தெருவினை மறந்த மழலையைப் போலே
    திரியாதே மனமே! - ஒளித்
தேருனை அழைக்கும் நாள்வரும் வரைக்கும்
    தேயாதே மனமே!


உனக்கென வேலை உனக்கொரு கடமை
    உலகம் அளித்துளது, - அதன்
உண்மையை மட்டும் உணர்ந்திடு! பின்னால்
    உயரமெல்லாம் நமது!
தனக்கென ஒன்றும் சாராத் தவத்தைத்
    தயவாய்ப் பிடிமனமே! - இல்லை
தண்டனை யாக ஏமாற் றத்தில்
    சரிவாய் சிறுமனமே!

கதிர்வரும் வரையே கடும்பனி மூட்டம்!
காலை ஒளிசேரும் - நீ
கற்றதையும் இனி கற்பதையும் வை
கருத்து கூராகும்!
உதிர்வது மாலை எனத்தெரிந் தாலும்
உயர்மலர் அழுவதில்லை
உள்ளிருப் பதனால் உனக்கென்ன கவலை?
உளறல் விடுமனமே!

நீயுனை நம்பாச் செயற்கையை விட்டு
    நிழலினை உருவாக்கு! - வரும்
நினைவுகள் எல்லாம் பாடங்கள் என்றே
    நிம்மதி கருவாக்கு!
தாயினைப் பிள்ளை அடித்திடும் போதும்
    தாய்சினம் கொள்வதுண்டோ? - நமைத்
தரணியில் சேர்த்தாள்! வினைமுடிந் ததெனத்
    தாய்நமை விடுவதுண்டோ?

உன்பெரும் ஆற்றல் நீயறியாமல்
    உள்ளே உறுமுகிறாய்! - நீ
உச்சியைப் பார்த்து மிரண்டொரு நாளாய்
    உடைந்து கதறுகிறாய்!
மன்பெரும் ஆறு, மலைகளுன் தோற்றம்
    மனமே மாறிவிடு! - உனை
மாட்டும் சகதியில் வளமையைக் கண்டே
    மலர்போல் மலர்ந்துவிடு!!

-விவேக்பாரதி
28.01.2019

Comments

Popular Posts