மாறும் திருடர்கள்


கவிஞர் பெரியசாமி தூரனின்  "அழகு தெய்வ மாக வந்து" காவடிச்சிந்து மெட்டு

கூட்டங் கூடி கோஷம் போட்டுக்
    குலவி நாளும் வேஷம் போட்டுக்
கூத்தடித்து வாழ்வோர் பலருண்டு - நெல்லின்
கூடவே வளர்ந்தவிஷத் தண்டு ! - வாழ்வில்
    குணமி லாதவர் மனமி லாதவர்
    குறியி லாதவர் நெறியி லாதவர்
கூட்டமாய் இருக்குமிடம் கண்டு - வந்து
குட்டையைக் குழப்புவதும் உண்டு!

வேட்டி மீது கரைகள் கொண்டு!
    வெற்று போக்கில் நாட்கள் கொண்டு
வேதனை அளிப்பவர்கள் கோடி -உண்மை
வெல்வதைத் தடுப்பவர்கள் பேடி - வெறும்
    வெறியி லோடுவர் குறையி லாடுவர்
    வெறுமை பாடுவர் பழியி லூடுவர்
வேறுவேறு பொய்கள் சொல்லியாடி - என்றும்
வேற்றுமை வளர்ப்பார்விழி மூடி!

உண்மை தன்னை மண்ணில் விட்டுப்
    பொய்மைப் பேச்சை மட்டுந் தொட்டு
உண்மைபோல் உரைப்பார்களை நம்பி - இந்த
உலகம்போகும் தலைவாவென எம்பி - அவர்
    உள்ள மெங்கிலும் கள்ள வஞ்சனை
    நெஞ்ச மன்றினில் நஞ்சு சிந்தனை
உன்னதம்போல் பேச்சளப்பார் தம்பி - நம்பி
ஊமையானால் நெஞ்சம்படும் வெம்பி!

மண்ண கத்தைத் தின்று தீர்த்து
    விண்ண கத்தைத் தின்னப் பார்த்து
மனதினுக்குள் வைப்பார் பேராசை - சுற்றி
மதியிலாதோர் கோஷமிடும் ஓசை - நாட்டின்
    மங்க லங்களை நிந்தை செய்பவர்
    பொங்கும் வன்முறை தங்க வைப்பவர்
மாறிமாறித் திருடவருவார் காசை - ஊழல்
மக்கள்முன் விதைப்பாரந்த மாசை!!

#கைகளிலே_தனுவுண்டு

-விவேக்பாரதி 
23.02.2019


Comments

Post a Comment

Popular Posts