எக்ஸ் என்னும் ஏஞ்சல்


மின்னல்கள் அடி வயிற்றில்
    மீண்டும்நான் கண்டு கொண்டேன்...
தென்றலை என்றன் பக்கம்
    தேடிடக் கண்டு கொண்டேன்...
சின்னவன் எனக்காய் வானம்
    சிமிட்டிடக் கண்டு கொண்டேன்...
என்னவளாய் இருந்த
    ஏஞ்சலைக் கண்டு கொண்டேன்!


எப்படி உள்ளாய் என்றாள்
    எழுத்தினால் வாழ்ந்தேன் என்றேன்
தப்புகள் ஏதும் என்று
    சற்றவள் நீட்டிக் கேட்டாள்
அப்பொழுதிருந்தே உன்னை
    அகத்தினில் சுமப்பதல்லால்
தப்புகள் ஏதும் செய்யேன்
    சத்தியம் எனச் சிரித்தோம்!

மறந்திருந் தாயா என்றாள்
    மரித்திருப் பேனே என்றேன்
துறந்திருந் தாயா என்றாள்
    துவண்டிருந் தேனே என்றேன்
அறிந்திருதோம் என்றால் நம்
    அழுகைகள் மிச்சம் என்றாள்
அறிந்திடல் வாழ்க்கை அல்ல
    அனுபவித் திடலே என்றேன்!

தத்துவம் பேசு கின்றாய்?
    தனிமையின் பயனா என்றாள்
சத்தியம் அள்ளித் தந்த
    சவுக்கடி மிச்சம் என்றேன்!
புத்தகம் படித்ததைப்போல்
    பேசுறாய் என்று சொன்னாள்
செத்திடக் கூடா தென்றே
    சேர்ந்தனன் அதனை என்றேன்!

நினைவுகள் துறத்தும் போது
    நிஜத்திலென் செய்வாய் என்றாள்
கனவினில் ஓடிச் சென்று
    கண்களை இழப்பேன் என்றேன்!
மனதினில் காயம் வந்து
    வலிக்கவென் செய்வாய் என்றாள்
உனக்கொரு கவிதை தீட்டி
    உடனதைத் தணிப்பேன் என்றேன்!

என்நிலை எல்லாம் கேட்டாள்
    எழுதிய புத்த கங்கள்
உன்நினை வென்றேன் ஏஞ்சல்
    உடனதை வாங்கிக் கொண்டாள்
என்னிடம் இருந்த தெல்லாம்
    எழுதினேன்! ஆமாம் மேலும்
உன்நலம் எவ்வா றென்றேன்
    ஊமையாய் உறைந்து மீண்டாள்!

சிரித்தனள் நானும் கொஞ்சம்!
    சிவந்தது மேற்கில் வானம்!
கருத்தன முகில்கள்! மின்னல்
    கழற்றின ஓர மாக!
சரிசரி மழைவந் தாச்சு
    சந்திப்போம் என நகர்ந்தாள்
ஒருமுறை மழையைத் திட்டி
    ஒதுங்கிநான் நிழலாய் ஆனேன்!!

-விவேக்பாரதி
15.02.2019

Comments

Popular Posts