வாய் திறவாமல் பேசியது

காற்றில் லாத வெளித்தடத்தில் - என்
    கானத் தாலே பயனென்ன?
நேற்றி ல்லாத நினைவலைகள் - இன்று
    நெருக்கு கின்ற நிலையென்ன?


காகித மில்லா ஊருக்குள் - ஒரு
    கவிஞன் வாழ்ந்தேன் கற்பனையில்!
தாகம் தாகம் தாகமென - நான்
    தத்தித் துடித்தேன் நடுவிரவில்

கறைபடி யாத பேனாவில் - நான்
    கால மையை நிறைத்தபடி
மறைந்து மறைந்து வாழ்ந்திருந்தேன் - என்
    மனத்தை மாற்றி நடித்திருந்தேன்!

கவிதை அறியாப் பூமிக்குள் - இக்
    கவிஞன் வந்த தோர்பிழையா?
செவியில் லாத மனிதருக்குக் - கவி
    செப்ப நினைத்தல் தாம்சரியா?

சொற்கள் இருந்தும் ஊமையனாய் - உள்
    சுடரை வளர்த்தும் இருள்மகனாய்க்
கற்கள் நிறைந்த நிலப்பரப்பில் - நான்
    கஞ்சிக் கொருநெல் விதைக்கின்றேன்!

இதயத் துடிப்பின் ஓசைகளை - விழி
    இறக்கி வைக்கும் நீர்த்துளியின்
உதவி யுடனே மொழிபெயர்க்கும் - என்
    உணர்ச்சிக் கென்ன தான்பதிலோ?

வாசித் திருந்த வீணையொன்றை - இருள்
    வசத்தில் பூட்டி வைப்பதுவோ?
பேசிக் கிடந்த குழந்தையொன்றை - இனி
    பேசா தேயென அதட்டுவதோ?

படைத்துக் காக்கும் பணிமறந்து - எனைப்
    பாருக் குள்ளிறை விட்டிடுமோ?
உடைத்துப் பொறுக்கிய துண்டுகளாய் - என்
    உள்ளம் கண்ணில் பட்டிடுமோ?

உள்ளே மோதும் உணர்வலைகள் - சிறு
    ஊமை போலே என்வேடம்
கள்ளில் இல்லாப் போதையினை - என்
    கவிதை தருதல் தான்பாவம்!

யானே எனக்குள் பேசுகிறேன் - தனி
    யாழை மெதுவாய் மீட்டுகிறேன்!
வானே என்னைக் கேட்கிறது! - இதுநான்
    வாய்திற வாமல் பேசியது!!

-விவேக்பாரதி
04.02.2019

Comments

Popular Posts