தப்பும் தப்பு


பார்த்துவிடாத
அழகொன்றும் இல்லை நீ
கேட்டுவிடாததை ஒன்றும்
பேசிவிட வில்லை நீ!
அமர உலகத்துப் பஸ்பங்களை
ஆக்கிச் செய்ததல்ல
உன் மேனி!
தொடுதலை
உணர்ந்தே ஆக வேண்டும் என்று 
ஆசை துள்ளும் படிக்கெல்லாம்
இல்லைதான் நீ!
ஆனால்,
உன்னை வர்ணிக்க நான்
தேடும் சொற்களில்
ஆழ் மனக் கூட்டில் இருந்து
எத்தனையைப் பொறுக்கினாலும்
தப்பித்துக்கொண்டே இருக்கிறது
சரியான அந்த ஒருசொல்!

வார்த்தை இல்லாமல் வறண்டதாகக்
கவிஞர்கள் வர்ணிப்பார்களே,
அந்த ஜாலவித்தை கூட இல்லை!
உன்னைச் சரியாய் உவமிக்க
என்னிடம் ஒரு சொல்லுண்டு
கைக்குத்தான் அகப்படவில்லை!

ஒவ்வொரு பார்வைக்கும்
ஒவ்வொன்று தப்பிக்கிறது!

நேற்று நீ பார்த்தாய்
அப்போது எடுக்க நினைத்த சொல்
இன்று கண்முன் ஆடுகிறது!
போன வாரம் உன் பேச்சுக்கு
நான் உவமிக்க நினைத்த ஒன்று
முந்தாநாள் தோன்றியது!

கணங்களை உறைய வைக்கத்தான்
கவிதை எழுதுகிறேன்,
ஆனால் உன்னை அந்தக்
கவிதையில் கூடச்
சரியாக உறைய வைக்க முடியாத
ஏக்கம் இன்னும் எஞ்சுகிறது!

ஒவ்வொரு அனுபவத்திலும்
சரியான சொல் தப்பிக்கிறது!
ஒவ்வொரு கவிதையில் இருந்தும்
நீ நழுவித் தப்பிப்பதுபோல்!!

-விவேக்பாரதி
10.04.2023
இரவு 1.32

Comments

Popular Posts