புன்சிரிப்பே எங்கிருந்தாய்?


முள்ளிருக்கும் பூக்களிலே முள்ளில்தான் நான்நின்றேன்
கள்ளிருந்தும் நாளும் கவலையுண்டு நொந்திருந்தேன்
உள்ளிருந்து பூக்கும் உறுதிமிக்க புன்சிரிப்பே - உன் 
தெள்ளமுது காணாமல் தேடிநின்றேன்! எங்கிருந்தாய்?

காதல் எனும்தெய்வம் காவலுக்கு வந்துநின்று
மோதலற்ற வாழ்க்கையெனும் முக்தியைத் தந்தருளப்
பேதமின்றி உள்ளிருந்து பீறிவரும் புன்சிரிப்பே - உன்
நாதவெள்ளம் இன்றி நலிந்திருந்தேன்! எங்கிருந்தாய்? 

எண்ணியெண்ணிக் கத்துவதும் எண்ணாமல் சுற்றுவதும்
முன்னும்பின்னு மாக முரணாய் இழுக்கையிலே
வண்ணமய மாயென்னுள் வந்துநிற்கும் புன்சிரிப்பே - நான் 
உன்னை மறந்தேன் உருக்குலைந்தேன்! எங்கிருந்தாய்?

நம்பிக்கைத் தென்றல் நயந்துதொடும் நேரத்தில்
வம்புக்கும் தும்புக்கும் வாழ்க்கைச் சவாலாக
தெம்புற்றென் உள்ளில் தெறித்துவரும் புன்சிரிப்பே - உன் 
அன்புக்கு அடிமை அடைந்திருந்தேன் எங்கிருந்தாய்?

ஒவ்வோர் உணர்வும் உயரலையாய் மேலெழுந்து
ஒவ்வொர் நினைவை உளத்துக்குள் மூட்டிவிட
ஒவ்வோர் நிலைக்கும் உதவவரும் புன்சிரிப்பே - உன் 
ஒவ்வோர் அசைவையும் பார்த்திருந்தேன் எங்கிருந்தாய்?

எங்கிருந்தாய் என்றே ஏழை அறியவில்லை
எங்கிருந்தால் என்ன எனக்குற்ற நேரத்தில்
பொங்கிவந்து நெஞ்சில் பொழிந்தாயே புன்சிரிப்பே - உன் 
மங்கலத்தால் நானும் வழியிருளைத் தாண்டுகிறேன்!

பெருமூச்சின் மேளவொலி கண்ணோரம் கண்ணீர்
உருகும் வரவேற்பு! உளத்தினில் மென்மை
அரும்பும் படிக்கே அவதரித்தாய் புன்சிரிப்பே - நீ
திரும்பிய தால்தான் திசையையே பார்க்கின்றேன்!

வந்தாய் இதுபோதும் வாழ்க்கைநான் வாழவழி
தந்தாய் இதுபோதும் தாழ்ந்த சுவடின்றி
முந்துகிறேன் ஊக்கத்தில் மூச்சான புன்சிரிப்பே - உன்
மந்திரத்தால் வாழ்ந்திருந்தேன் வாழுகிறேன் வாழ்ந்திடுவேன்!!

-விவேக்பாரதி
10.04.2023
மாலை 4.16

Comments

Popular Posts