கிழித்த காகிதங்களில்


கிழித்துப் போட்ட காகிதங்களில்
   கிடப்ப தெல்லாம் நானேதான் - எனை
உரித்துப் போட்ட கைகளைச் சற்றே
   உயர்த்திப் பார்த்தால் நானேதான்
சுழித்துப் பரவும் நீரின் சுனையில்
   சுருண்டு செல்வது நானேதான் - அதன்
சூட்டில் என்னை உருக்கிக் கரைந்து
   சுடர் அடைவதும் நானேதான்!

ஏதோ ஒன்றைக் காலம் என்மேல்
   எனக்கு முன்னால் எழுதியது - அது
ஏதென்றே நான் அறியாமல் தான்
   என்றன் பாதை தொடங்கியது
தோதாய்க் கால எழுத்தில்லாமல்
   தொல்லை எனநான் உணருகையில் - என்
தோலைப் பிய்த்துக் கிழித்துப் போடும்
   சுதந்திரம் கவிதை வழங்கியது

எனக்குக் கீழே சிதறிக் கிடக்கும்
   என்னை நானே பொறுக்குகிறேன் - அதை
என்னோ(டு) ஒட்ட இயலா(து) அதனால்
   ஏக்கத்தோடே பொத்துகிறேன்
மனத்தை மட்டும் சட்டை போல
   மாட்டிக் கொள்ளும் வழியறிந்தால் - என்
வாழ்க்கை ஆஹா எப்படி இருக்கும்?
   வியந்து கொண்டே கிழிக்கின்றேன்

ஆசைப் பசையில் அனுபவக் கிழிசல்
   அள்ளி அள்ளி ஒட்டுகிறேன் - எனில்
ஆங்காங்கே உள ஓட்டை வழியே
   ஆதி வண்ணம் தெரிகிறது
நேசச் சந்தையில் என்னை விற்க
   நேரம் எல்லாம் காத்திருந்தேன் - விடு
நேற்றைய கதைகள் யாருக்குத் தேவை
   நெஞ்சம் ஒன்றே நினைக்கிறது

கிழிக்கும் உரிமை எனக்கே எனக்கு
   கிழிக்கப் படுவதும் நானேதான்
கிழிசல் கண்டு வருத்தமுறாமல்
   கிடைப்பதை எண்ணி மகிழ்கின்றேன்
அழிக்கும் சக்தி இருக்கும் கையில்
   ஆக்கத்தின் வரம் வந்தவுடன்
அழித்தேன் செய்தேன் அழிப்பேன் செய்வேன்
   அனைத்தும் எனக்குச் சரிதானே! - என்
   ஆக்கம் எல்லாம் நான் தானே!!

-விவேக்பாரதி
22.04.2023
காலை 10.47

Comments

Popular Posts