தென்றலே நீ


புழுக்கத்தில் தவிக்கையிலே எங்கிருந்தோ
   புத்துணர்ச்சி தருவதற்காய் வருடிவிட்டு
இழுத்தென்னுள் அனுபவிக்கும் முன்னே ஓடும்
   இன்தென்ற லேஉனக்கு நன்றி சொல்வேன்!
அழுத்தத்தில் நான்வாழ்ந்த கணத்தில் எல்லாம்
   அவதரித்தாய் தாயாக அள்ளிக் கொண்டு
விழுந்தபோது பட்டதூசைத் துடைத்தெறிந்து
   விசுக்கென்று மறைந்திடுவாய் கண் பாராமல்!

உரிமையென உனைக்கொள்ள வழியும் இல்லை
   உன்னோடே எனைவைக்க வாய்ப்பும் இல்லை
பெரியதென நான்நினைக்கும் குப்பையை நீ
   பெரிதில்லை எனக்காற்றில் தூற்றி விட்டுச்
சிறுசிறிதாய் அதுபறக்கப் பார்த்து நானும் 
   சிரிக்கையிலே அதைக்கண்டு புன்னகைப்பாய்
வறியவனை வாழ்விக்க தோன்றும் தெய்வ
   வடிவமேநான் உனக்கென்றும் நன்றி சொல்வேன்!

என்வியர்வை எப்படியோ அறிவாய் நீதான் 
   எங்கிருந்தோ முன்தோன்றி தலையைக் கோதி 
பொன்முத்து கீழ்சிந்தும் முன்புலர்த்தி
   போவாய்நான் அதைரசித்து முடிக்கும் முன்னம்! 
நின்வித்தை யாரறிவார் தென்றலே நீ 
   நிலையற்ற மனத்தைப்போல் உலவுவாயோ
உன்மத்தம் கொள்வாயோ அறிகிலேன் நான் 
   உன்மொத்த உழைப்புக்கும் நன்றி சொல்வேன்! 

எதிர்பார்க்கும் நேரத்தில் வருவதில்லை
   ஏனென்று நான்கேட்க வழியும் இல்லை
பதிலில்லாக் கேள்விக்குள் விக்கும் நேரம்
   பாதையில்நீ வருவதுதான் புரிவதில்லை
எதுவந்த போதிலும்நீ எப்போதேனும்
   எதிர்ப்படுவாய் எனும்நினைப்பில் பாலையில் நான் 
மெதுவாக மெதுவாக நடப்பேன் நீதான் 
   மிருதுவென வருடுகையில் சிலிர்ப்பேன் நானே!!

-விவேக்பாரதி
07.04.2023
இரவு 11.50

Comments

Popular Posts