அகமியின் பெருமூச்சு


பொந்தில் மறைந்துகொண்டு
பொழுதுபோகப் பாடும் குயில்
ஒருபோதும் காட்டுவதில்லை
அதன் முகத்தையோ
அழகையோ!

இரவில் கீச்சடிக்கும்
ராக்கோழிகளின் சத்தம்
உங்கள் செவிப்படுமே அன்றி
பார்த்திருப்பவர்கள் இருந்தால்
கைத்தூக்குங்கள் பார்க்கலாம்!

எங்கிருந்தென்றே தெரியாமல்
திடீரென்று மாலையில் வருமே
ஒரு மெல்லிய இசைச் சத்தம்
அதன் ஆதி மூலத்தை உங்களால்
தேடிவிட முடியுமா?

கண்கள் படபடக்கும் சத்தத்தில்
இதயமும் கலங்கும் படிக்கான
ஒவ்வொருவரின் நெருக்கமும்
உணரும்போது
விட்டு விடுதலையாகி நின்று
நம்மை நாமே கட்டிக்கொள்ளும்
சுகத்தை உணர்ந்திருக்கிறீர்களா?

ஒன்று நினைத்து
அதைச் சொல்ல முனைந்து
அதற்குள் இன்னொன்றை நினைந்து
முந்தைய ஒன்றின் வலுவெல்லாம்
தகர்த்தெரியப்படும்போது
கேள்விகளின் சுக்கல்களுக்கு நடுவே
கருத்தைப் பொறுக்கச் சோம்பி
இரு சொற்களில்
உங்கள் உரையாடல்களை
முடித்திருக்கிறீர்களா?

இதில் எந்த அனுபமும்
இல்லாமல் வாழும் உலகத்திற்கு
எப்படிச் சொல்வேன்
இன்ட்ரோவர்ட் என்னும்
அகமிகளின்
பெருமூச்சே பெருங்கூச்சல்,
தனிச்சூடே பேருஷ்ணம் என்று!!

-விவேக்பாரதி
25.04.2023
இரவு 12.06

(Introvert என்ற சொல்லுக்குத் தோன்றிய தமிழ்ப்பதம் ‘அகமி’)

📍 Edakkal Caves, Wayanad
📸 Vaishnavi Anusuya

Comments

Popular Posts