தற்காலிகப் பூச்சு


காலை மங்கலின்
பனி மூட்டம் போல நீ
என் முன் தோன்றுகிறாய்!
உன் கையில்
உலகம் பார்க்காத ஒரு
பின்க் பூ சிரிக்கிறது!

அதன் முனையைப் பிடித்து
புன்னகையை என் பக்கம் திருப்பி
எனை எழுப்புகிறாய்
ஏந்தும் உன் கைகளில்
நகப்பூச்செல்லாம்
பழசு கண்டிருக்கிறது!

அத்தனை புதிய ஆடையையும்
அணியவில்லை நீ
அதன் வெளிறிய நிறம்
கண்ணுறுத்தலாய் இல்லை எனினும்
கண்கூடு!
சாதாரண நாள் ஒன்றின்
வாசம்போல்நான் நீ
நெருங்கி வருகிறாய்

நீ, உன் தோற்றம்,
இந்த மங்கல்,
அந்த அழகு,
பூ எல்லாமே தற்காலிகம்தான்
ஆனால்
உரித்த உண்மைக்கு
எப்போதும் பயந்துபோய்
நிதமும் தற்காலிகங்களையே
நாடிச் செல்கிறது
சின்ன மனம்!

ஏழடுக்கு பாதுகாப்பு உடைக்கு மேல்
நூறடுக்கு தற்காலிகங்களை
பூசிக்கொள்ள முயல்கிறது!
ஒன்று உதிர்ந்து பழையதானால்
இன்னொன்றைத் தேடுகிறது....
என்னவோ ஜெயித்துவிடுவதுபோல்!

ப்ச்! அது என்னவோ செய்யட்டும்
நீ கை நீட்டு
உன் நகப்பூச்சையேனும்
இன்னொரு பூச்சு
போட்டு விடுகிறேன்!!

-விவேக்பாரதி
17.04.2023
மாலை 05.22

Comments

Popular Posts