நினைவுறுத்தல்


அண்ணா(து) உயரே பார்க்கின்றேன்
அங்கே நகரும் மேகங்கள் 
உண்மை ஒன்றை நினைவுறுத்தும் - இன்னும் 
உயரே இருப்ப(து) என்னிலக்கு! 

கொஞ்சம் குணிந்தும் பார்க்கின்றேன் 
குதிக்கும் கடலின் மீனெல்லாம்
நெஞ்சுக் குள்ளே நினைவுறுத்தும் - இன்னும்
நெருங்கா(து) இருக்கும் என்னாழம்!  

காற்றின் தீண்டல் பார்க்கின்றேன் 
கன்னம் தொட்டுச் செல்லுமது 
மாற்றா(து) ஒன்றே நினைவுறுத்தும் - இன்னும் 
வாடா(து) ஓட வேண்டுமென! 

விதையை எடுத்துக் கண்பார்ப்பேன்
மண்ணில் விழும்முன் அந்தவிதை
கதையாய் ஒன்றை நினைவுறுத்தும் - இன்னும் 
காத்திருத்தல் வேண்டுமென! 

மூங்கில் ஒன்றைப் பார்க்கின்றேன் 
முள் கொண்டாலும் வெட்டுகளை 
ஏந்தும் அதுதான் நினைவுறுத்தும் - காயம் 
ஏற ஏற இசைபிறக்கும்! 

சிப்பி பொறுக்கிப் பார்க்கின்றேன் 
செரித்த முத்தைக் கொண்டவது 
தாப்பா(து) ஒன்றை நினைவுறுத்தும் - எதையும்
தனதென்றாக்கும் வித்தையது

பார்ப்ப(து) எல்லாம் ஒன்றொன்றாய்ப் 
பாடம் சொல்லும் பொழுதில்,அதைச் 
சேர்க்கும் முன்என் நினைவுறுத்தல் - வந்து 
சரியாய் என்றன் முன்னிற்கும் 

எல்லாம் உனக்கு விளங்கியதா 
என்றே என்னை முன்கேட்கும் 
சொல்லால் திருப்பிச் சொல்லுமுனம் - நெஞ்சம் 
சோம்பலுக்குள் சென்றொளியும்! 

மீண்டும் உடலம் மனிதரைப்போல் 
மீளாக் காலச் சுழலாழ்ந்து 
வேண்டும் யாவும் பொருளென்றே - கொண்ட 
வேகம் எல்லாம் இழந்தழியும்! 

தினமும் பாடம் நடக்கிறது 
தினமும் நெஞ்சம் மறக்கிறது 
தினமும் உடலம் உழைக்கிறது - ஆனால் 
திருந்தாமல் கவி பிறக்கிறது!! 

-விவேக்பாரதி
03.04.2023 | இரவு 11.40 

Comments

Popular Posts