த் பஞ்சாயத்து


பிடித்தல் என்ற சொல்லில்
எத்தனை அழுத்தியும்
உன்மேல் எனக்குள்ள பிடித்தலை
நடுவில் உள்ள ஒற்றை த்
சொல்ல முடியாமல் தோற்கிறது!
பிடித்த்தல் என்றோ
இன்னும் சில த் துகள் சேர்த்தோ
எழுதிப் பார்க்கிறேன்!
அதுவும் அப்படித்தான்!

சரி!
எது பிடித்தது?
ஒருவேளை அந்தக் கேள்விக்குப்
பதில் தெரிந்திருந்தால்
இந்த த் பஞ்சாயத்தில் நான்
லயித்திருக்க மாட்டேன்!
கணக்காக இத்தனை பிடித்ததற்கு
இத்தனை த் என்று இட்டுச்
சென்றிருப்பேன்!

போகட்டும்!
எப்போதில் இருந்து பிடித்தது?
இதற்கும்தான் பதில் இல்லை!
அதுவும் தெரிந்திருந்தால்
அதற்கு முன்புவரை பிடித்திருந்தவருக்கு
எத்தனை த் போட்டிருக்கிறேன்
உனக்கு எத்தனை போடலாம் என்று
தெரிந்திருக்கும்!

எப்படிப் பிடித்தது?
சத்தியமாய்த் தெரியவில்லை!
அதுவேனும் தெரிந்திருக்கலாம்,
அந்தக் கணத்துக்கே சென்று
அதன் அழுத்தம் அறிந்து
த் துகளைச் சேர்த்திருக்கக் கூடும்!

எதனால் பிடித்தது?
ஹான்! இதைமட்டும் யூகிக்க முடிகிறது
உன்னைப் பிடித்திருக்கிறது
என்று நான் உணரும் வரை
என் வாழ்வில் அத்தனை பிடிமானமாய்
ஒரு வல்லின மெய் இல்லாதிருந்தது!

நீ வந்தாய்
வாழ்வு, வாழ்க்கையாகி இருக்கிறது!
பிடித்தல்
எழுதும் ஒவ்வொரு முறையும்
எழுத்துப் பிழையுடனே முடிகிறது!!

-விவேக்பாரதி
19.04.2023
காலை 09.40

Comments

Popular Posts