தொங்கும் இலைத் துடிப்பு



உன் புறக்கணிப்புக்கு பெயர்
பணிச்சூழல்
உன் சிரத்தையின்மைக்கு பெயர்
ஞாபக மறதி
உன் அக்கரையின்மைக்கு பெயர்
மனநிலை சரியில்லை
ஆனாலும் காத்திருக்கிறேன்
உன் மீது நான் கொண்ட
காதலின் ஒற்றைப் பிடிமானத்தில்!

அதில் உயிர்,
நிதம் வரையப்படும்
இதயத்தின் வடிவில்
முக்கால் காம்பு கிழிந்து
எடை ஏறிப் பழுத்த
இலையாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது!
அதன் முனையைப் பிடித்து
மேலேறுகிறது ஆசை,
தள்ளுகிறது உன் அலட்சியம்!
நடுத்தண்டைக் கெட்டியாய்ப்
பிடித்துக் கொண்டிருக்கிறது ஏக்கம்
பிளக்கப் பார்க்கிறது நேரக் காற்று
நான் மட்டும்
தொங்கிக் கொண்டே இருக்கிறேன்
விடவும் முடியாமல்
ஏறவும் தெரியாமல்!

ஒரு இரவு கழிந்து
ஒரு சூரியன் மலர்ந்து
ஒருவேளை மரம் மகிழ்ந்து
கிழிந்த முக்காலைக் கொஞ்சமேனும் உள்வாங்கிக்
கால்செய்யுமா?
ஒருக்கால் அந்த ஒருகாலில்
காலம் கடப்பேனோ என்று
காத்திருக்கிறேன் நான்
அதற்காக விழிசுருக்கி
வெறித்துப் பார்த்தபடி
தொங்கிங்கொண்டிருகிறது உயிர்!
வெளியை நிறைக்கிறது அதன் துடிப்பு!

மரத்தில்,
அந்தக் கிளையில்
ஓரசைவு வந்தாலும்
நான் விழுவது உறுதி!
ஆனாலும் கிளை எனக்காக
அசைந்து கொடுக்கவே விரும்புகிறேன்!
சேர்த்துக் கொள்வதில்லை எனினும்
நீக்கி விடுவதற்காவேனும்
மரமான நீ
கிளையான உன் கரத்தில்
இலையான நான்
தொங்கிக் கொண்டிருப்பதை
பார்ப்பாய் தானே!!

-விவேக்பாரதி
16.04.2023
இரவு 10.15

Comments

Popular Posts