மாயத் தொல்லை


நீண்ட தொல்லை என்னென்றால்
நீங்கா உன்றன் மௌனம்தான்!
வேண்டும் என்று மிகஏங்கி
வெறித்து வெறித்து நான்பார்த்தும்,
தூண்டும் உள்ளச் சுடருக்குத்
தூபம் மட்டும் போட்டுவிட்டு
மீண்டும் மீண்டும் நீநகர்வாய்
மின்னலுக்குள் நான் புகவே!

அடங்காத் தொல்லை ஏதென்றால்
அடிக்கடிக்கென் உள்வந்து
நடக்காக் காட்சிக் கற்பனைகள்
ஞான விசாரக் கதைசொல்லி
முடியாக் கனவின் நீட்சியிலே
மூழ்கடித்துக் கண்விழித்தால்
ஒடுங்கா ஆறாய் ஓடுகிறாய்
ஓரத்தில் நான் சாய்ந்திடவே!

தினமும் தொல்லை யாதென்றால்
திணறத் திணறக் காதலித்து
மனமும் உடலும் நான்மறந்தென்
வானத்துக்குள் புள்ளியெனக்
கனக்கும் போதில் தென்றலுமாய்க்
கணநேரத்தில் ஊழிகளாய்
புனைவைக் காட்டி மறைந்திடுவாய்
புலனெல்லாம் நான் வேர்த்திடவே

பெரிய தொல்லை எதுசொல்வாய்?
பேராசைக்குள் எனைத்தள்ளி
வருடும் வகையில் வம்புசெய்து
வாராதோடி ஓடவிட்டு
திருடும் உன்னை நான்தினமும்
திரும்பத் திரும்ப தொழுதபடி 
உருகும் நிலைக்கு விட்டிடுவாய்
ஊரெல்லாம் நான் சுற்றிடவே!

உன்னால் தொல்லை மிகவதிகம்
உயிரில் உளத்தில் உடலத்தில்
என்னால் தாங்க முடியாத
ஏராளங்கள் உன் தொல்லை!
என்றாலும் உன் சன்னிதியில்
என்னை மறந்த மயக்கத்தில்
நின்றால் போதும் என்கிறேன்
நீநீ கவிதா! மாயையடி!!

-விவேக்பாரதி
07.04.2023
இரவு 1.30

Comments

Popular Posts