ஈஸ்வரனே என் குருநாதா


வீட்டில் காஞ்சி மகா சுவாமிகளுக்கு பூஜை நடந்தது. பூஜை முடிந்ததும் வழக்கம்போல் தம்பி பாட்டு பாடினான். ‘கருணா ரச பூர்ண‘ என்று தொடங்கும் பாடலைப் அவன் பாட வீடே மெய்மறந்து போனது. சற்று நேரத்தில், எனக்குள் அதே ராகத்தில் உதயமானது இந்தப் பாடல். இதையும் அங்கேயே பாடி பரவசமடைந்தோம்.  இதோ... 

தன்னந் தனிமையில் நடுக்காட்டில் - நான் 
   தளர்ந்தி ருந்தேனே வழிதேடி, 
சின்ன விளக்கினைக் கையேந்தி - நீ 
   சிரித்து வந்தாயுன் விழிமூடி, 

கண்ட நொடியினில் சரண்புகுந்தேன் - எனைக் 
   காப்பாற் றெனவுனைக் கதறிநின்றேன் 
தண்டம் ஏந்திய சுடராலே - ஒளி
   தந்து நின்றாய்நான் துயிலெழுந்தேன்! 

இந்தக் கனவிது நிஜம்தானா - அந்த 
ஈஸ்வரனே என் குருநாதா! 

நெஞ்சம் ஒன்றையா நினைக்கிறது - அது 
   நித்தம் அலையெனக் குதிக்கிறது 
கொஞ்சம் கொஞ்சமாய் எனையிழந்தேன் - நான் 
   குறையக் குறையவே உனையடைந்தேன் 

காற்றில் பறந்துதான் நான்திரிந்தேன் - எனில் 
   காகிதமோ எனக் குழம்பிநின்றேன் 
ஆற்றல் சத்தியம் என்றுரைத்தாய் - வந்து 
   அகத்தின் சிறகினை நீவிவிட்டாய் 

இந்தக் கனவிது நிஜம்தானா - அந்த 
ஈஸ்வரனே என் குருநாதா! 

புல்லின் நுனியிலே புவியைவைத்தாய் - சின்னப் 
   பூவின் மடியிலே தேனைவைத்தாய் 
அல்லின் அழகிலே இருள்சமைத்தாய் - அதில் 
   ஆயிரம் ஆயிரம் ஒளி நிறைத்தாய் 

என்னில் என்னநீ நிரப்பிடுவாய்? - என 
   எதிர்பார்த்தே உன் அடி அடைந்தேன் 
உன்னை நிரப்புவாய் என நினைத்தேன் - எனில் 
   உள் பார்த்தால் என்னை நான் இழந்தேன்! 

இந்தக் கனவிது நிஜம்தானா - அந்த 
ஈஸ்வரனே என் குருநாதா!! 

-விவேக்பாரதி 
26.05.2021

படம் : நன்றி சுதன் காளிதாஸ் 

Comments

  1. நான்
    குறையக் குறையவே உனையடைந்தேன்
    சிறப்பு கவியே

    ReplyDelete

Post a Comment

Popular Posts