நான் கண்ட காட்டாயி - நூல்நோக்கம்

ஒரு ஊருல, ஒரு நாட்டுல என்று தொடங்கும் சாதாரண கதைகளுக்கு கதாசிரியன் போதும். யதார்த்தவாதிகளைப் படம்பிடிக்கக் கதைசொல்லிகள் வளர்ந்து வருகிறார்கள். ஆனால், கதைக்குள் அரசியலையும், வரலாற்றையும் இழைக்க ஒரு செய்தியாளர் தேவைப்படுகிறார். உறவுகளின் வெளியில் சொல்லப்படாத உணர்வுக் குரல்களைப் பேச ஒரு கவிஞர் வேண்டும். இவற்றுக்கெல்லாம் மணிமுடிபோல் ஓர் இனத்தின் அகத்தையும் புறத்தையும் அதன் தன்மை மாறாமல் பதிவு செய்ய வரலாற்று ஆசிரியரின் அவசியம் உறுதியாகிறது. இப்படிப்பட்ட தன்மைகளை தனக்குள் அடக்கியவராக உருவெடுக்கிறார் நூலாசிரியர் அரவிந்த்குமார்.

தலைப்புக்கான கதையைப் படிக்க ரொம்ப நேரம் ஆகுமோ என்று நினைத்து புத்தகத்தைப் புரட்டுகையில் முதலிலேயே புன்னகைத்து வரவேற்றாள், அண்ணாவின் கூட்டத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த காட்டாயி. அவளைக் கண்டதும் ஒருகணம் திகைத்துத் திரும்ப திரும்ப படித்தேன். வடசென்னைச் சுரத்தின் கொற்றவையாக என் கண்களுக்குத் தெரிந்த அந்த இழவாட்டக்காரியின் அரசியல் ஈடுபாடு மெய்சிலிர்க்க வைத்தது. கதையின் ஓட்டத்தில், போகிற போக்கில்தான் எத்தனை வரலாற்று செய்திகள். முதல் வாக்குரிமை உட்பட. அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் ஆடி அப்படியே புகழாக உரைந்த காட்டாயியை இனி மெரினா செல்லும் போதெல்லாம் நினைத்துக் கொள்ளத் தோன்றும். இதுதான் ஒரு கதையின் வெற்றி. 

பொதுவாக நாவல், குறுநாவல் வடிவங்களை விட சிறுகதைத் தொகுப்புகளில் எனக்கு நாட்டம் அதிகம். ஒவ்வொரு கதையையும் ஒரு குறும்படம் போல் முழுதாக மனத்திரையில் ஓட்டிப் பார்த்திடவும், அப்படியே சொல்லிடவும் ஏற்ற வடிவம் அவை. இந்த எனது அபிப்ராயத்தில் காட்டாயி அடுத்த கட்டத்தைக் காட்டினாள். அதன் விளைவாக நாளொன்றுக்கு ஒரு கதை என்றபடி புத்தகத்தை முழுதும் படித்துமுடித்தேன்.

சங்க இலக்கியத்தில் ஆழங்கால்பட்டிருக்கும் நூலாசிரியர் இரண்டாவதாக நமக்குக் காட்டுவது அக இலக்கியத்தின் முகமான சந்திராவை. தொடையில் கடித்து காதல் வெளிப்படுத்திய கணவன், கழுத்தில் கடித்து குரோதத்தையும் காட்ட, பாவங்களின் பிரதிபலனாய் அவள் மட்டும் காற்றில் ஈக்களைக் கடித்து முடிந்த காட்சி நெஞ்சை உறைய வைத்தது. மனதில் இருப்பதை சொல்ல முடியாமல் மறைத்து வாழும் மாதவியாகவே முடிந்துவிட்டது சந்திராவின் கதை. இந்தக் கதைக்கு அடுத்ததைப் படிக்கச் சில நாட்கள் ஆனதால், நினைக்கும்தோறும் மனக்கண்ணில் காட்சிகள் திரைகதையாக நிழலாடின. அது ஆசிரியரின் சொல்லும் விதம்.  

இவற்றைக் கடந்த அடுத்தடுத்த கதைகள், நெரிசல் மிகுந்த சென்னை மாநகரின் ஆதி வடிவமான கிராம பின்னணியைக் காட்டியது. சொற்கள் வழி தொட்ட பழைய சென்னையின் பழ வாசத் தென்றலில் புகை இல்லாத புன்னகையைக் காணமுடிந்தது. மனதுக்கு இதமாக இருந்த பின்புலங்கள் சென்னையை அதிகம் நேசிக்க வைத்தது. ஆசிரியரின் கூற்றுப்படி அந்த தலைப்பிரட்டை பகுதிகளின் தலைமையில் அனேக கதைகளில் தொடர்ச்சி மாறாமல் வந்தது அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி. நானும் அந்தப் பள்ளியில் வாசிக்கும் நாட்களில் எல்லாம் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மாருதி டெய்லரின் ஸ்பெஷல் பின்னல், நான் பள்ளி படித்த காலத்தில் ஸ்கூல் யூனிபார்ம் தைத்துக்கொடுத்த பாய் கடையை ஞாபகப்படுத்தியது.

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்ற சுகுமார், தன் திறமைக்கு இழுக்கு வந்ததும் வெயில் சூடு பார்க்காமல் அடித்த மேளம், காதுக்குள் கேட்டு மெய் சிலிர்க்க வைத்தது. இனி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தைக் கடக்கும் போதெல்லாம் சுகுமாரைக் கண்கள் தேடப் போவது உறுதி. ஜாக்கிசானின் ஓட்டம் கதையை வீட்டில் உள்ள அனைவருக்கும் படித்து காண்பிக்க நேர்ந்தது. கதையில் இடையிடையே நிறுத்தி தங்களுடைய பள்ளி அனுபவங்களையும், முதல் ஐஸ்கிரீம், முதல் சினிமா என்பதுள்ளிட்ட விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு சிலிர்த்தனர். கடைசி இரண்டு பக்கங்களை நான் வாசிக்க வாசிக்க, அனைவரின் முகத்திலும் தெரிந்த பாவங்கள் சொல்லாத அனுபவங்களைச் சொல்லின. அசோகரின் மொழிபெயர்ப்பாளனைக் கண்டதும் என் பால்ய நண்பன் நினைவுக்கு வந்தான். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது தொடர்ந்து தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்து வந்த என் நண்பன் ஒருவனிடம் காரணம் கேட்டதற்கு, நீ அதிக மார்க் எடுக்கத்தாண்டா நா கம்மியா மார்க் வாங்குறேன் என்று சொன்ன பதில் நினைவுக்கு வந்தது.

நூலாசிரியருக்கு எங்கேயும் ஒட்டிக்கொண்டு வரும் செய்தியாளரின் பண்பு, கதைகளை வர்ணிக்கையில் மக்கள் நிறைய விரும்பும் விஷயங்களைப் பதிவு செய்வதுடன் நிற்காமல், மக்கள் அதிகம் பார்த்திராதவற்றையும் பதிவு செய்துள்ளது. அதற்கு உதாரணம், நீலமும் பின்னர் மஞ்சளுமாய் எரிந்த கள்ளச் சாராயம்.

கதைக்குக் கதை டெய்லர், மிருதங்க வித்வான், அரசியல்வாதி, பின்னணிப் பாடகர் என்று அவதாரம் எடுக்கும் நூலாசிரியர் எத்தனை கலைகளைக் கரைத்துக் குடித்தார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். கதை சொல்லத் தேவைப்படும் நேர்த்தி என்பது இதுதான். பதிவுக் கோவை என்பதைக் கடந்து பலம் பொருத்தும் கதாபாத்திரங்களின் பின்னணியில் சுருதியின் சத்தம்போல் மெலிதான சப்தமாய் நிறைந்திருப்பது நூலாசிரியரின் குரல். 

வரலாறு, அறிவியல், கலை என்று எடுத்திருக்கும் பேசு பொருள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம். அமானுஷ்யத்தை விட அதீத அறிவியல் என்னை பயமுறுத்தும். அப்படி பயப்பட வைத்து, பெல்ஸ் பாசியை முகம் கதை எனக்கு அறிமுகப் படுத்தி அதிர வைத்தது. 

நவீனத்துவத்தில் சர் ரியலிசம் என்ற உத்தியைப் பயன்படுத்தியிருக்கும் சொர்க்கத்தின் சுவரில் ஒரு ஓட்டை, காலத்தின் வீடு இரண்டும் கற்பனைப் புனைவுகள் ஆயினும் கருத்துள்ளவை. சொர்க்கத்தின் சுவரில் ஒரு ஓட்டை கதையில் நான் நீந்திக் கொண்டிருந்த ஒவ்வொரு கணமும் எனக்கு பாரதியாரின் ஞானரதமும், அய்யனார் விஸ்வநாத்தின் ஹிப்பி நாவலும் மாறி மாறி நினைவுக்கு வந்தது. இசங்களும் நிசங்களும் என்று நூலாசிரியரின் பேச்சைக் கேட்ட எனக்கு அவரது சர் ரியலிசக் கதை வியப்பைத் தரவில்லை, மாறாக பெருமிதத்தையே வழங்கியது. 

இப்படி ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு துளியை தெளித்துக்கொண்டே போகலாம். அப்படி அனைத்திலும் புகுந்து ஒரு நிறைவான கோவையை வழங்கி இருக்கிறார் நூலாசிரியர். அவர் பதிவு செய்திருக்கும் வட சென்னையின் வரலாறு நன்றிக் கடனின் உச்சம். இப்பகுதிகள் கடைசி வரை அரவிந்த் குமார் பெயரை உப்புக் காற்றோடு சேர்த்துச் சுமக்கும் என்பதில் ஐயமில்லை. 

திரும்பிய பக்கமெல்லாம் நிறையிருக்கும் புத்தகத்தில் மொழி நடையில் உள்ள குழப்பம் ஒரு சிறு திருஷ்டி மச்சம். பொதுவாகவே கதை எழுதுபவர்கள் சறுக்கும் இடங்களில் அவரும் சற்று இடறி இருப்பது வருத்தமளிப்பது. ஆனாலும் கதையின் போக்கில் கதாசிரியர் கொள்ளை போகும்போது நடக்கும் பிசகலாகவே அது தொணிக்கிறது. பேச்சு வழக்குக்கும், எழுத்து வழக்குக்கும் இடையில் பயணிக்கும் பல கதைகளில் இவை மாறி மாறி ஆசிரியரைக் குழப்பி இருக்கின்றன. அதனால் வர்ணனையிலும் பேச்சு வழக்கு புகுந்து, கடலை சாப்பிடும்போது இடற்படும் மணல் துகள் போல் பற்களைக் கொஞ்சம் நரநரக்கச் செய்கிறது. மேளம் கதையில் மிருதங்க வித்வான் சுகுமார் ஆபேரி ராகத்தில் தாளமிட்டான் என்ற இடம் சற்று ஐயம் கிளப்புகிறது. தாளத்துக்கு ராகம் உண்டா என்பதை ஆசிரியர் என் மீது உள்ள அன்பு கருதி பதிலளிக்க கட்டளை இடுகிறேன். எங்குமே குறையும் நிறையும் கலத்தல்தான் இயல்பு. யதார்த்தங்களின் உச்சமாக பதிவாயிருக்கும் காட்டாயி, அதிலும் தனது அவசியத்தை நிறுவி விட்டது. இப்போது தேசம்மா படிக்க ஆசை உண்டாகியிருக்கிறது. 

படித்த என் மனதை மொத்தமும் நிறைவுகளால் நிரப்பி பல குறும்படங்களை எண்ணத் திரையில் ஓடவிட்டு வெற்றி கண்டு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கும் நூலாசிரியர் அரவிந்த் குமார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளோடு ஒரு வெண்பாவும் பாடி நிறைக்கிறேன். 

காலமிது உள்ளவரை காட்டாயி உன்புகழ்
ஜாலமென நின்றிருக்கும் சாகசமாய்க் – கோலமிகு
சொற்கள் அரவிந்தின் சுந்தரக் கற்பனையும்
விற்பனம் செய்த விதம்!

-விவேக்பாரதி
05.05.2021

Comments

Popular Posts