உழைக்கும் மக்களைப் பாடுகிறேன்


உழைக்கும் மக்களைப் பாடுகிறேன் - அவர் 
உதவிக் கரங்களை வாழ்த்துகிறேன் 

தழைக்கும் உலகம் உயர்ந்துவிட - அது 
தரமாய் பலமாய் வளர்ந்துவிட 
தங்கள் உழைப்பை எரிபொரு ளாகத் 
தரும்தோ ழர்களை வாழ்த்துகிறேன் - அவர் 
தர்மம் செழிக்கப் பாடுகிறேன்! 

காட்டைத் திருத்திப் பதமாக்கி - அதில் 
கலைசெய் கின்ற உழவர்களை 
கரும்பு சோளம் பழவகை எல்லாம் 
கைமேல் கொடுக்கும் மனிதர்களை - பசுங் 
காடு வளர்க்கும் தெய்வங்களை 

நாட்டைக் காக்க எல்லையிலே - பல 
நாளாய் நிற்கும் வீரர்களை
நாட்டுக் குள்ளே நலம்வ ளர்க்கும் 
நாய கர்களை வாழ்த்துகிறேன் - பெரும் 
நன்றிகள் சொல்லிப் பாடுகிறேன்! (உழைக்கும்)

கடலில் மூழ்கி முத்தெடுத்து - தினம் 
கரையில் காய்ந்தும் உப்பெடுத்து 
கண்துஞ் சாமல் மனமஞ் சாமல் 
காவல் செய்யும் பொறுப்பெடுத்து - அதில் 
கருத்தாய் இருந்தே உயிர்வளர்த்து 

உடலில் தோன்றும் நோய்களைந்து - மன 
உறுதி கொடுக்கும் சொல்புகன்று 
உறுதுணை யாக வாழ்வில் சேரும் 
ஒவ்வொரு வரையும் வாழ்த்துகிறேன் - அவ்
உயிர்கள் வாழப் பாடுகிறேன்! (உழைக்கும்)

தோள்கள் என்னும் தொழிற்சாலை - அவை 
தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை 
தோன்றும் உயரம் யாவும் மனிதன் 
தொட்டுப் பிடித்த உயர்வேலை - அதை 
தொடரும் நண்பரைப் பாடுகிறேன் 

வாள்கள் கொண்டு முன்னோர்கள் - மிக 
வளர்த்த நாட்டை உழைப்பாலே 
வாழ்விக் கின்ற வள்ளல் அவரை 
வாயால் தினமும் வாழ்த்துகிறேன் - அவர் 
வாழ்க வாழ்கெனப் பாடுகிறேன்!! (உழைக்கும்) 

-விவேக்பாரதி 
01.05.2021

Comments

Post a Comment

Popular Posts