ஒரு Fan Club Project - நூல்நோக்கம்

 

இப்படி 4 ஆண்டுகள் கழித்து இதைப்பற்றி ஒரு கட்டுரை வரும் என்று நூலாசிரியனான என் நண்பன் பாம்பன் பிரஷாந்த் நினைத்திருக்க மாட்டான். நானும் எழுதும் நோக்குடன் இப்புத்தகத்தைத் தொடவில்லை. ஆனால், என் குருநாதர் இலந்தையார், எது ஒன்று எழுதியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறதோ அதுவே சிறந்த படைப்பு என்பார். அப்படி என்னை எழுத வைத்துள்ளது இப்படைப்பு.

தலைப்பு, கிறுக்குத் துளிகள். எழுதியவன் கிறுக்கன்தான். (நான் ஒருமையில் அழைப்பதை நூலாசிரியர் ஆட்சேபிக்க மாட்டார் என்ற உரிமையுடன்) 

இது கிறுக்கல்களை ரசிக்கும் உலகமாகிப் போனது. இப்போது கிறுக்கலைப் படைப்பவனே படைப்பாளி ஆகிறான். ஆக, இவன் கிறுக்கனாய் இருப்பதில் அவனைவிட நான் பெருமை கொள்கிறேன். ஞாபகம் இருக்கிறது, இந்தக் கவிதைத் தொகுப்பை நான் முதன்முதலில் படித்ததும் இப்போது வாசித்ததுபோல் ஒரே ஸ்ட்ரோக்கில்தான்.

வாட்ஸாப்பில் எனக்கு அனுப்பி, வாசித்துப் பாருங்க தோழர் என்று அவன் சொன்னது இப்போது அந்தக் குரலிலேயே என் காதில் ஒலிக்கிறது. சரி, இந்தத் தொகுப்புக்கு இப்போது ஏன் நான் எழுத வேண்டும். பரவலாக உலகம் அறிந்த பிரஷாந்திலிருந்து, அவனிடம் நான் ரசிக்கும் கவிஞன் என்னும் அவதாரம் தன் அஞ்ஞாதவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த சுயநலமே இப்போது நான் எழுதுவதன் பிரதான நோக்கம். 

அவன் கவித்துவத்தை உலகத்துக்கு பறைசாற்றுவது, உள்ளூருக்கு சேதி சொல்வது, உள்ளிட்ட இத்யாதிகளெல்லாம் இரண்டாம் பட்சம்தான். 

ம்ம் நேரம் கடத்த வேண்டா, அதற்குள் அவன் போன் அடித்து என் ரகசிய வேலைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளக் கூடும். (நமக்கு ஒரு ஓட்டவாய்) 

வாருங்கள் கிறுக்கனின் தொகுப்புக்குள் செல்வோம். அதற்கு முன் சிறு குறிப்புகள். நூல், 2016 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது எனது யூகம். கிடைக்கும் இடம் www.freetamilebooks.com வலைத்தளம். விலை, பிரஷாந்தின் அன்பைப் போலவே எல்லாருக்கும் கிடைக்கும்படியான இலவசவிலை. (ஓ இப்ப விலையில்லான்னு சொல்லனுமா?) சுமார் 2500 க்கும் மேற்பட்ட டவுன்லோடுகளைப் பெற்றுள்ளது. (படிக்கும் ஒவ்வொருவரும் அதில் சேர்ந்துகொள்ளலாம்)

சரி, சாதாரணமாக பேச ஆரம்பத்து இடையில் பன்ச் அடிப்பது பிரஷாந்த் பாணி அல்ல. முதல் பாலே குருட்டுப்போக்கில் சிக்சர் சுற்றும் ஆள். இதோ புத்தகத்தின் முதல் வார்த்தை,

காதுகளில் இருந்து
தொப்புளுக்கு புலம்பெயர்ந்த தோடுகளாய்
நாமும் நூல்களில் இருந்து
மின்னூல்களை நோக்கி நகர்ந்துவிட்டோம்!

ஆ, நமட்டுச் சிரிப்பு தோன்றுகிறதா? வணக்கம், நீங்கள் பாம்பன் பிரஷாந்த் பேன் கிளபுக்குள் வந்துவிட்டீர்கள்.

இவன் முதல் கவிதை விடியலைப் பற்றி. (ஆத்தி, இப்ப இது ரொம்ப முக்கியமானது ஆச்சே) 

விசாலமாக விடியல்களின் பட்டியலைத் தரும் நம் கவிஞர் முடிவில்,

விளைச்சல் வரட்டும்
பின் விடியல் வரட்டும்

என்று செக் வைத்துக் கடக்கிறார். 

இதிலிருந்தே தெரியவில்லை, ’ஏ அமெரிக்க ஏகாதிபத்யமே‘ என்று மேடைபோடாத அரசியல்வாதி இவரென்று.  

ஒரு புகழாரம் – பாம்பன் பிரஷாந்த் பாடுபடத் தெரிந்தவன். இதை நான் அழுத்திச் சொல்லும்போது எனக்குள் ஒரு ஏளனப் புன்னகை எட்டிப் பார்ப்பதற்கு காரணம்…

கீழே
மணமுறிவு மனிதர்க்கில்லை
சரியாகப் பாடுபட்டு
பெண்ணை அறிந்தால்.

ஆம். இப்போது சொல்லுங்கள். இவன் பாடுபடத் தெரிந்தவன்தானே!

இப்படி நையாண்டி நரம்புகள் புடைக்க பேசிக் கொண்டிருக்கும் கவிஞன் ஓர் இலக்கியவாதியும். ஆம் நம்பத்தான் வேண்டும். இதோ பிரஷாந்த் வழிவழியாக வழிப்பற்றி வந்த மொழிப்பற்றின் சான்று, 

அந்தரத்தின் அந்தரமே
சுந்தரத்தேன் தமிழே
வந்தெனக்கு நற்றமிழை
தந்திடடி நாவினிலே
 
தமிழே!
வினைசெய்த பயனால் இங்கு பிறந்திருக்கிறேன்
இணையில்லா உனைத்தாயாய் அடைந்திருக்கிறேன்
துணைசெய்து உனையுயர்த்தத் துணிந்திருக்கிறேன் – இந்த
துர்பிறப்பு அதற்குத்தானே பிறந்திருக்கிறேன்.

இலக்கியவாதி என்று சொல்லியாயிற்று, அதனாலோ என்னவோ அடுத்து ஐயா தொடுவதே கவிக்கோ அப்துல் ரகுமானைத்தான். கவிக்கோவுக்கு கண்ணீர் அஞ்சலியைக் கசிந்துருகி இவன் வடித்திருப்பது, கவிக்கோவை எவ்வளவு படித்திருக்கிறான், அவர் மறைவில் இவன் எத்தனை துடித்திருக்கிறான் என்பதைக் காட்டும். அதைச் சொல்வதே அவன் வைத்திருக்கும் அப்துல் ரகுமானின் புகழ்பெற்ற முத்தாய்ப்பான முடிப்பு வரிதான். 

வரங்களே இங்கு சாபங்கள் ஆனால் 
தவங்கள் எதற்காக? 

அடடே! தவத்தைப் பற்றியெல்லாம் பேசுகிறானே, ஆக இவன் யோகியா என்று கேட்டால் (கூடப் பழகிய வினையால் சொல்வேன்) நிச்சயம் இல்லை. இவன் ஒரு அக்மார்க் போகி. சான்று? அடுத்த கவிதை ‘மது செய்யும் மாயம்’ என்ற தலைப்பில்... 

இந்த மதுக்கவிதையை நான் படித்துப் படித்துத் தள்ளாடினேன். காரணம் இதன் ஒழுங்கான தாளக்கட்டு. இயல்பாக இவன் யாப்புக்குள் அடங்கிப் போகும் முதல்பெஞ்சு மாணவன் அல்ல, எதையும் உடைத்துப் பார்க்கும் கடைசி பெஞ்சு. ஆனால், இந்தக் கவிதை தனக்கான தாளக்கட்டைத் தானே கேட்டு வாங்கிக் கொண்டது என்பேன். (ஒரு கவிஞனாகவும் இருப்பதில்தான் எத்தனை லாபம்) 

இது மது செய்த மாயம்
மது செய்த மாயம் 

என்று வரிக்கு வரி சொன்னவன், மதுவைக் கையிலெடுத்து நான் அறிந்திலேன். இக்கவிதை எனது பழைய கவிதை ஒன்றைக் கிளறி விட்டது. இதுவரை வெளியிடாத அந்தக் கவிதை வெளியாக இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்ததோ என்னவோ...

எங்கே அந்தக் கிண்ணம் எங்கே 
எடுத்து வாருங்கள் 
உள்ளே கொஞ்சம் கவிதை மதுவை 
ஊற்றித் தாருங்கள்! 
எங்கே அந்தப் பெண்கள் எங்கே 
என்முன் தோன்றுங்கள் 
இசையில் அமுதம் வழியும் வகையில் 
இனிமை பாடுங்கள் 

இது 
போதை ஏறிய தருணம் - என் 
பாதை மாறிய நிமிடம் - இங்கு 
காதல் கொஞ்சம் நிகழும் - மீதி 
காமம் என்றூர் புகழும்! 

இப்படியே அந்தக் கவிதை நீளும். (இதனை எழுதும் என்னையும் இக்கவிஞர் மதுவெடுத்துக் கண்டதில்லை. ஸ்ஸபா... பதிவு பண்ணிட்டேன்பா). கவிதையின் முடிவில், 

சகசண்டி அரசே 
சாராயம் ஒழிக்கப் புது 
பேரையும் அமையுங்கள் 
பேராய முடிவாலே 
சாராயம் ஒழியுங்கள்! 

என்று முடித்திருக்கிறான். ஊரடங்கு அமலில் உள்ள இப்போது திறக்கப்படாத மதுக்கடைகள் இவனுக்கு எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்திருக்கிறது என்பது இதில் தெரியும். (ஐயோ. கொஞ்சம் எசக்கு பெசக்கா மாட்டிவிட்டேனா?)

தன்னைப் பற்றிச் சொல்கையில் கவிஞர் வாலி இப்படி பேசுவார், 

முச்சங்கப் புலவர்முதல் முந்தாநாள் புலவர்வரை 
இச்சை மதுவெனவே எண்ணிக் குடித்ததிலே 
மிச்சம் மிகுதியுள்ள முத்தமிழ்ப் பாலருந்திக் 
கொச்சைக் கவிபாடும் பச்சைக் குழந்தைநான் 

இப்படி ஒரு அவையடக்கத்தை நம் கவிஞன் சொல்லக் கேளுங்கள்... 

உச்சப்புகழ் பெற்றூரார் மெச்சத்தகு அருந்தமிழே - நான் 
கச்சத்தீவு அருகிருந்து கன்னித்தமிழ் பருகி - மேலோர் 
கற்பனையில் கசிந்துவந்த மிச்சத்தமிழ் பருகி 
மீட்டுகிறேன் கவியொன்று கேட்டிடுவீர் செவிகொண்டு 

எப்படி வாலியை அநாயசமாகத் தொட்டான் பார்த்தீர்களா? அதற்காக இவனுக்கு பலம் கொடுத்தது கம்பன். ஆம், கம்பனில் கரைந்தவன் பிரஷாந்த். தட்டிவிட்டால் அப்படி சில பாடல்கள் கொட்டும். எதற்கெடுத்தாலும் கம்பனை தொட்டு வருவான். அது அவனிடம் அடிக்கடி பேசியவர்களுக்கு தெரியும். 

நெகட்டிவிட்டியே டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் இன்றைய ஊடகத்தில் பணி செய்யும் பிரஷாந்தின் பாசிட்டிவிட்டியை ‘நல்லதே நடக்கும்’ கவிதையில் பார்க்கலாம். போகிற போக்கில் டிஜிட்டல் இந்தியாவை அறிமுகப்படுத்துகிறான் பாருங்கள்

கையிருப்புக் காசெல்லாம் கணினிக்குள் நுழைந்தே - நம் 
பையிருப்பில் அடங்காமல் பாரதத்தை வளர்த்துவர 
ஏடறியா ஏழைமுதல் எல்லாரும் ஈறாக 
கார்டுபோட்டுக் காசுபார்க்கும் நாடு 
நன்னிலை அடையட்டும் 
நல்லதே இங்கு நடக்கட்டும்!

சொன்னது 2017க்கு முன்னே (நோட் த பாயிண்ட்... அன்றே கணித்தார்). இந்தக் கவிதையில் தான் கண்ட உண்மையைத் தனக்கே தெரியாமல் விதைக்கும் இவனை எண்ணி நான் பூரிக்கிறேன். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மத்திய மண்டலம் எனப்படும் டெல்டா பகுதிதான். எனக்கு சோறுபோடுவது வயல்தான். ஆனால் கவிஞன் கூற்றில் ‘சோறுபோடும் கடல்’ என்று அடிக்கடி வருகிறது. இது நெய்தல்காரன் இவன் என்பதைத் தன்னை அறியாமலேயே பதிவு செய்யப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். 

இவனை மகிழ்ச்சியாக்க என்னென்ன தேவையென்று அடுத்த கவிதையில் போடும் பட்டியல், பேராசையின் உச்சம். அதுவும் இந்தியாவின் குழப்பமெல்லாம் மாயும் போது மகிழ்வானாம் (யப்பா, நம்ம பொழப்புல மண்ண வாரி போட்டுடாத) அதில் தொக்கி நிற்கும் அந்த சார்ஜற்ற பேட்டரிக்குள் கவிதை இருப்பது துள்ளலைத் தருகிறது. 

ஊருக்குள் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டால், அடுத்து சிலர் கேட்கும் முக்கிய கேள்வி “நீங்க ஏன் சினிமாக்கு எழுதக்கூடாது”. அதென்ன அத்தனை சுலபமா? கவிதை எழுதுவது போல் சுதந்திரமானது அல்ல, ஒரு மெட்டுக்கு எழுதுவது. அப்படி பாட்டாக பிரஷாந்த் முனைந்திருக்கும் ‘அழகு’.... அழகு! 

வார்த்தைக்கு வார்த்தை இவன் என் நண்பன் என்று சொல்லிக் கொள்கிறேனே, அதற்கு சாட்சி வேண்டாவா? இதோ இது போதும், 

வீண்பேச்சு விடுவிடு
விரல்கொண்டு தொடுதொடு 
விளையாட்டாய் வித்தைகள் செய்திடுவேன்!

காச்சுமூச்சு சத்தம்விட்டு
மூச்சழுந்த முத்தமிட்டு 
என் மார்பில் உன் காதல் பதித்திடுவேன்! 

அதுல எங்க பன்ச், மூச்சழுந்த முத்தம். சந்தேகமே இல்லை நானும் இவனும் நண்பர்கள்தான். 

பட்டாசுப் பிஞ்சுகளில் பாரதி வரியை மாற்றிப் போடுகிறான். இனி கோயிற் தளமனைத்தும் பள்ளி செய்குவோம் என்கிறான். சரிதான், அப்போது கோயில்கள்தானே பள்ளிகளாய் இருந்தன. அவை மீண்டும் வந்தால்தான் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் வதைபடும் சிறுவர்கள் நிலையும் சீராகும். 

நண்பா உனக்காக என்று அவன் வடித்திருக்கும் கண்ணீரைக் கவிதை என்று சொல்லிவிட முடியாது. உரிமையுள்ள உணர்ச்சிகளின் சொற்கோவை. அதை அவன் குரலில் படித்துக் காட்ட நீங்கள் கேட்க வேண்டும். (அது எனக்கு வாய்க்கும் என்பது நிச்சயம்.. வெவ்வே)

பள்ளிக் குழந்தைக்கும் தொழில் குழந்தைக்கும் ஒரு ஒப்பீடு செய்திருக்கிறான். அதில் பிறர் சிரிப்பைக் கண்டு சிரிப்புணரும் தொழில் பிள்ளையின் வருத்தம், கடக்க முடியாமல் கண்களை நனைத்தது. 

கண்ணதாசனின் இருந்து பாடிய இறங்கல்பா கவிதை பல சர்ச்சைக்கு உள்ளானது. எழுதி முடித்ததும் அனேகமாக நெருங்கிய வட்டம் எல்லாம் ஒரு காட்டு காட்டியிருக்கும். ஆனால், உண்மையில் தனக்கான இரங்கல்பா எப்படி இருக்கும் என்று தானே நினைத்துப் பார்க்கும் கவிஞனே எக்செண்ட்ரிக். எக்செண்ட்ரிக் எல்லாம் கவிஞன் இல்லை. (வித்தியாசம் புரிந்துகொள்ள வேண்டும்).  அப்படி ஒரு கவிதையைத் தன் சாவு போலவே தொடங்குகிறான்.  (இன்றளவும் இந்த தைரியம் எனக்கு வரவில்லை)

விழுந்த இடத்தில் 
எழுந்து பார்த்தேன் 
சரிந்து கிடந்தது என் சரீரம்! 
சாவது எவர்க்கும் 
ஆவது உறுதி - அதை 
அறியாதிருந்தது என் அறிவீனம்! 

உடல் மரணிக்கும். அதற்குள் நாம் செய்துவிட வேண்டியதை இடையறாமல் செய்து முடிக்க வேண்டும் என்கிற ஓட்டம் மிகுந்த பிரஷாந்துக்கு இந்தப் பதைபதைப்பு இயற்கையாகப் பொருந்துவது. 

கண்மூடித் தனமாகக் காதலித்து, அதைச் சொல்லாமல் விட்ட பெரும்பாவி, பின்னர் அடுக்கடுக்காய் புலம்பும் சொல்லாத காதல் கவிதை புத்துணர்வூட்டும். (அவகிட்ட சொல்லலைன்னா பரவால்ல, எங்ககிட்ட கூட சொல்லலைன்னா எப்டி?)

பிரஷாந்தின் இந்தத் தத்துவம், உலகை வித்தியாசமாக பார்க்க வைக்கிறது. 

உலகம் என்னும் நாடக மேடையில் 
உயர்ந்த பாத்திரம் விருப்பம் 

சாதாரணமாக உலக நாடக மேடையில் நமை ஆட்டிவைக்கும் நூலாக விருப்பம் இருப்பதாகத்தான் நான் அனுபவித்ததுண்டு. ஆனால், இவன் ஒரு பாத்திரம் ஆக்குவது பல எண்ணங்களைக் கிளப்புகிறது. இதுவே ஒரு படைப்பின் பலமும் தேவையும். 

நான் சொன்னேனே, பாம்பன் பேன் கிளப்பென்று அதற்கு சாட்சி மந்திர உலகம் கவிதை. அச்சு பிசகாத சந்தம், அதில் அள்ளி தெளித்துள்ள கற்பனை. படித்த மாத்திரத்தில் இது என்னுடையது என்று உரிமை கொண்டாட வைக்கும் உட்பொருள். அதுதான் இவனுடைய பேன் கிளப்புக்கு அஸ்திவாரம். 

கதலி என்றால் என்ன? டக்குன்னு டிக்‌ஷ்னரி பாருங்கள். 

வாழைப்பழம் என்று பதில் வரும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிய கதை நினைவுக்கு வருகிறதா? அதை யானை தன் நாக்கால் தேடியா இருக்கும்? ஆனால் இவன், தன் காதலியை அப்படித் தேடுகிறானாம். காணாமல் போன காதலி என்கிற கவிதையில் கம்பர் காலத்துச் சொல்லான கதலியை, அவ்வளவு எளிதாக போட்டிக்கிறான். இலக்கிய ஆழமும் நவீன ஆளுமையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு என் நண்பனும் எனக்கொரு முன்னோடி. 

இந்தப் புத்தகத்தில் இம்முறை நான் பார்த்து வியந்த இன்னொரு முக்கிய விஷயம். எந்தவொரு எழுத்துப் பிழையும் இன்றி தெளிவானதாக வெளியாகியிருக்கும் பாங்கு. இதனைச் செய்ய கவிஞனும், முன்னூல் ஆக்கியவர்களும் எடுத்திருக்கும் சிரத்தை தெரிகிறது.

கவிதைக்கு விமர்சனம் எழுதுவது என் பாணி அல்ல. எனக்கு பிடிக்காது. ஒவ்வொரு கவிதையும் தனக்கே உண்டான அவசியத்தில் பிறக்கிறது என்று ஆழமாக நம்புபவன் நான். இதில் என் முயற்சியே சுயநலமாய் அந்த ஓட்டக்காரனைக் கவிதை எழுத வைக்க வேண்டும் என்பதே… அது நடந்தால் இப்போது சந்தோஷப்பட ஒரு கூட்டம் இருக்கிறது என்று அவனுக்குத் தெரிய வேண்டும்.

மீண்டும் பாம்பன் பிரஷாந்தின் அடுத்த கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் சந்திப்போம். 

வெல்கம் டூ பாம்பன் பிரஷாந்த் பேன் கிளப்! ஜெய் மகிழ்மதி!

-விவேக்பாரதி
20.05.2021

Comments

  1. Swetha PuhazhendhiMay 20, 2021 at 3:02 AM

    நான் ரசிக்கும் ஒருவர் அவர் ரசிப்பதை விவரிக்கையில் அரைக்கண் மூடி எனக்குள் இருக்கும் ரசிகை களைப்பாறுகிறாள்.அவ்வப்போது விழி திறந்து ரசித்து மீண்டும் உறங்குவதாய் பாசாங்கு செய்வதில் அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு. இதற்கு முன் இத்தகையதொரு ஓய்வு கிட்டியது தங்களின் "எனக்கெல்லாம் பாரதிதான்" என்ற கட்டுரையில் தான். பாம்பன் மு.பிரசாந்த் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். விவேக் பாரதி குறிப்பிட்டது போல உண்மையில் நானும் பாம்பன் பிரஷாந்த் பேன் கிளபுக்குள் வந்துவிட்டேன். பரிச்சயப்படுத்திய பாரதிக்கு நன்றி��.

    ReplyDelete
    Replies
    1. ஆ! உங்கள் கருத்து பரவசம் தருகிறது. மிக்க நன்றி.

      Delete
  2. பாம்பனில் இருக்கும் சிப்பிக்குள் முத்து
    கவிதையாய் மிளிர்கிறது.
    நயமான நோக்கவுரைக்கு வாழ்த்துகள் நண்பா..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா

      Delete

Post a Comment

Popular Posts