எதுக்கு ட்விட்டர்? - நூல்நோக்கம்

ட்விட்டரில் இல்லாத பத்திரிகையாளர் கிடையாது. ட்விட்டரில் இல்லாவிட்டால் நீங்கள் பத்திரிகையாளரே கிடையாது என்றெல்லாம் பேச்சு கேட்டிருக்கிறேன். ஆமாம், எதற்குத்தான் ட்விட்டர்? இன்றளவும் இதற்கான சரியான விடை எனக்குக் கிடைக்கவில்லை. நானும் ட்விட்டரில் இருக்கிறேன், விருப்பப்பட்ட சிலரின் அப்டேட்களை பார்க்க, செய்திகளைத் தெரிந்துகொள்ள. ஆனால், இதுதான் ட்விட்டரின் நிஜ பயனா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது எழுத்தாளர் என். சொக்கன் எழுதிய ’ட்விட்டரின் வெற்றிக் கதை’ புத்தகம் நினைவுக்கு வந்தது. 

உடனே அமேசானில் அதன் கிண்டில் பதிப்பை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். உண்மையில், வாசித்து முடித்து இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இந்நொடிவரை என் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால், என் கேள்வி சரியான இடத்துக்கு என்னை இழுத்துச் சென்றள்ளது மட்டும் தெரிகிறது. வந்து சேர்ந்த இடத்தில் ட்விட்டரின் நதிமூலம் ரிஷிமூலத்தை எளிமையாகத் தெரிந்துகொண்டேன். சொக்கன், ஒரு தேநீர் இடைவெளியில், டீக்கடையில் 2 பலகாரங்களுக்கும் ஒரு காபிக்கும் இடையில் உள்ள கேப்பில் இந்த வெற்றிக் கதையைச் சொல்லி முடித்துவிட்டார். அவ்வளவு ஆழம், ஆனாலும் அத்தனை சகஜம். 

இந்தப் புத்தகத்தில் ட்விட்டர் பிறந்த வெற்றிக்கதை உள்ளது. சில தொழில்நுட்ப பிளாக்களில் இருப்பதுபோல் ட்விட்டர் பயன்படுத்தும் ஹேக்ஸ், ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது எப்படி என்ற வியாபாரத்தனங்கள் இல்லை. (பழகியதில் உணர்ந்த அதே மகா கண்ணியம் தரம் குறையாமல் புத்தகத்தில் அப்படியே இறங்கியிருக்கிறது.) வெறும் கதைதான் இருக்கிறது. அதைப் படித்து அசைபோடும்போதே ட்விட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று எண்ணத்தில் ஸ்பார்க் கிளம்புகிறது. அலேக்காக ட்விட்டருக்குள் புகுந்து இன்று அதில் பெரும் பிரபலம் ஆகியிருக்கும் இளைஞர்கள் இந்நூலை வாசிக்க வேண்டும். 

எங்கள் துறையில் ட்விட்டர் மிகப்பெரிய சோர்ஸ். எந்த செய்தி வேண்டுமானாலும் பிரேக்கிங்கில் எடுத்துக் கொள்ளலாம். செய்தியே இல்லாமல் போனாலும் ட்விட்டர் தாய் வெறுங்கையுடன் அனுப்ப மாட்டாள். மக்கள் இப்போது ட்ரெண்டிங்காக எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதே நியூஸ் ஆகும். தொழில்நுட்ப வளர்ச்சியை சரியாகப் பயன்படுத்தி சக்கைபோடு போட்டு வளர்ந்துவரும் ட்விட்டரின் கதை, நிஜமான வெற்றிக் கதைதான். அதனை எழுதியிருக்கும் சொக்கனுக்கு இது வெற்றிநூல் அந்தஸ்து தருகிறது.

ஆரம்பத்தில் குட்டிக் கதை. அது நடந்த சம்பவம். அதன்பின் அடுக்கடுக்காக சம்பவங்கள். எல்லாம் வரலாறுதான் ஆனால் படிக்க கதைப்போல் நீளும் சுவாரஸ்யம். 12 சொற்களுக்கு மிகாத ஒரு பத்தி. ஒவ்வொரு பத்திக்கும் புள்ளியிட்டு கண்களுக்கு எளிமையாகக் காட்டிய தோற்றம். இவையெல்லாம் இந்த நூலின் வெற்றி பார்முலா. நான் இதுவரை படித்த நான்பிக்‌ஷனில் மிக குறுகிய காலத்தில், மிக ஆர்வமாக படித்து முடித்தது இதுதான். ட்வீட் மாதிரியே நூலைச் செய்துள்ளார் சொக்கன். போகும் வரலாற்றில் அனாயாசமாக முன்னுக்கும் பின்னுக்கும் ஓட்டிச் செல்லும் திரைக்கதை பாணியே அந்த சுவாரஸ்யத்துக்குக் காரணம். 

ட்விட்டர் எதற்கு உருவாக்கப்பட்டது என்ற காரணத்தையும், அது எப்படி உருவானது என்ற சுவாரஸ்யத்தையும் தெரிந்து கொள்வது, அடுத்து அதை எப்படி பயன்படுத்த வேண்டும்/லாம் என்ற அறிவை இயல்பாகவே படிப்பவர் மனதில் விதைக்கிறது. சொக்கன் எழுதிய நோக்கம் அதுவெனில் இதுவும் அவருக்கு கூடுதல் வெற்றி. 

நூலின் இன்னொரு பெரிய ப்ளஸ், எளிமையான மொழி.  நூல் எழுதும் மொழிபற்றிய எனது பார்வை, எழுத்தாளர் சோ தருமனிடம் பேசியதிலிருந்து தெளிவுபட்டது. அவர் நூல்மொழி வேறு, பத்திரிகை மொழி வேறு என்பார். இந்த நூல் அப்படி மரபின் அமைந்த நூல்மொழியைப் பயன்படுத்தவில்லை. எளிமையான பத்திரிகை மொழியைக் கையில் எடுத்துள்ளது. வாரப்பத்திரிகைகளுக்கு சுவாரஸ்யமாக எழுதிப் பழக்கப்பட்ட சொக்கனுக்கு கைகூடியுள்ள பத்திரிகை மொழி, சலிப்பு தட்டாமல் படிக்க வைத்தது.இதனால் பெரிய தகவல்களைக் கூட எளிதில் விகடன், குமுதம் படிப்பதுப்போல படிப்பதும் கடப்பதுமாய் அமைகிறது. அதிலும் பெயர்கள் மறந்துபோகாமல் இருக்க சொக்கன் அவற்றை முறையே சுருக்கியும் நீட்டியும் அடிக்கடி ஞாபகம் செய்துவிடுகிறார். அது கிளாசிக். 

நூலில் நான் ரசித்த இன்னொரு முக்கியமான கதை பிளாகருடையது. ட்விட்டரைப் பற்றி அறியப் புகுந்து, பிளாகரைப் பற்றித் தெரிந்துகொண்டது பரவசப் படுத்தியது. ஒரு நிறுவனம் சிறப்புற இயங்க, அதன் தயாரிப்புகளை உரிமையாளர் உட்பட அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பது ஓடியோவின் வீழ்ச்சியில் கற்றுக்கொண்ட பாடம். 

பெரும் தோல்விகளுக்கு மத்தியில் ஜெயிக்கும் சின்னச் சின்ன ஐடியாக்களும், அதைச் செய்பவர்கள் பாடங்கள், கல்லூரிகளை வெறுக்கும் எக்செண்ட்ரிக்காக இருப்பதும் வரலாறு நகர்தலில் பேண்டஸி எலிமெண்ட்டுகளாக மேலும் பரவசப்படுத்துகிறது. சொக்கனின் உழைப்பு அருமையாக விளைந்திருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டபடி நானும் 140 கேரக்டருக்குள் ஒரு ட்வீட் எழுத நினைத்தேன். 

ட்விட்டர் வெற்றிக்கதை புத்தகம் மூலம் பல நிஜமான வெற்றிகளுக்கு வித்திட்டிருக்கும் சொக்கன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்...

-விவேக்பாரதி
25.05.2021 


Comments

Popular Posts